பத்தாம் வகுப்பு பெயில்
அரேபியாவில் இருந்து-என்
அப்பா எழுதினார்
பாஸ்போர்ட்டிற்கு விண்ண்ப்பிக்கவும்
விமானமும் விசாவும்
கிளர்ச்சியூட்டிய கனவுகளில்
பில்கேட்ஸ் பாவம்
பிச்சைக்காரானாக...
விழுவதற்குள் ஆவியாகும்
பாலைவனத் தூறல் போல்
காணாமல் போனது கனவு!
கழிவறை சுத்தம் செய்யும்
கைத்தொழிலொன்றில்
அப்பாவும் நானும்
அழுக்கானதில்
சுத்தமானது - எங்கள்
வீட்டு வறுமை!
ஆசையும் மோகமும்
தொன்னூறு நாட்கள்
அரேபியன் கொடுத்த லீவு
அறுபது நாட்கள்
எந்த விலக்கப்பட்ட
கனியைத் தின்றோம்?
சபிக்கப்பட்டது
எங்கள் இளமை!
வெட்கம் விலக்கி
தொலைபேசிக்கும் தெரியாமல்
மனைவி தராத பதில் முத்தம்!
நானில்லை எனத் தெரிந்தும்
நானாக இருப்பேனோ
சாயல் கண்டு ஏமாறும் தாயன்பு!
நெகிழ வைக்கும் மழலை கீதம்
நெஞ்சுருக வைக்கும் மரணங்கள்!
பிழைப்பு தேடி
வாழ்வை இழந்தோம்.
விசா கடன் அடைக்கவே
வேலை இருக்கு...
பிரியத்திற்குப் பட்ட கடன்
அடைக்க வழி இருக்கா?
நத்தைக் கூட்டிற்குள்
நாலைந்து பேர்கள்
காய்ந்த ரொட்டியும்
பாழாய்போன பசியும்!
நான் சகித்து சகித்து
சம்பாதித்தவையெல்லாம்
அரை கிரெளண்டில் நிலமும்
அதிலோர் வீடும்
வயதும், முகமும்
வகுப்பும், படிப்பும்
சரியாய்த் தெரியாத
குழந்தைகள் இரண்டு!
சக்கரையும் அழுத்தமும்
சரி விகிதத்தில்...
வரவுக்ககாக வந்தோம்
செலவாகிப் போனோம்
பிறிதொரு நாளில்
மகன் எழுதினான்
"பத்தாம் வகுப்பு பெயில்"
நானும் எழுதினேன்
"பாஸ்போர்ட்டிற்கு விண்ணப்பிக்கவும்"
நன்றி : சேக் அப்துல்லாஹ்
03. மனிதயினம் தோன்றலும் மதங்களின் உருவாக்கமும்.
6 years ago
2 comments:
வாசிக்கும் போதே நேசித்த கவிதை. படித்தபின்னும் மனதை விட்டு நகராமல் நங்கூரம் பாய்ச்சி நிற்கிறது. மீனவரின் வாழ்க்கையைச் சொல்லும் "தரை மேல் பிறக்க வைத்தான்" என்ற சினிமா பாடல் போல இது வளைகுடா தொழிலாளர்களின் வாழ்வைச் சொல்லும் "ஒரு சோறு பதமான" கவிதை.
Dear Firozkhan,
Thanks for your comments. There is lot more to come.
Regards,
IniyaHaji
Post a Comment