Saturday, June 28, 2008

கண்ணாடி வழியாக...

கிழக்கு ஆசிய நாடுகளில், ஒருவிதமான பூச்சியை பிடித்து, ஒரு கண்ணாடி பெட்டியினுள் அடைத்து மூடிவிடுவார்கள். அந்த கண்ணாடியில் சிறிய துவாரங்கள், சுவாசிப்பதற்காக இருக்கும்.

அந்த பூச்சியானது, மேலே நோக்கிப் பறந்து, வெளியே போக முயற்சி பண்ணும்.
மேலே உள்ள கண்ணாடியில் இடித்து, ஆ அம்மா .. வலிக்குதே, இனி மேலே நோக்கிப் போகும் போது பார்த்து போகனும் என்று தீர்மானித்துக் கொள்ளும்.

அதேபோல, இடது புறம் உள்ள கண்ணாடி வழியாக, வெளியே செல்ல முயற்சிக்கும். அதே அடி. அதே வலி. அதே தீர்மானம்.

இப்படியாக எல்லா திசைகளிலும், பறந்து, வெளியே செல்ல முயன்று, இறுதியாக ஒரு முடிவுக்கு வந்துவிடும்.

சரி, இதுதான் நமது விதி. இந்த கூண்டுக்குள் தான் இனி நம் வாழ்நாளை கழிக்க வேண்டும் போல இருக்கு. இனியும் முயற்சி செய்து பலன் இல்லை.

ஆக, இந்த கூண்டுக்குள், நாம் எப்படி சந்தோஷமாக, நிம்மதியாக இருக்கலாம் என்று எண்ணத் தொடங்கிவிடும். அதோடு கூண்டை தாண்டி வெளியே செல்லும் முயற்சியை கைவிட்டு விடும்.

இப்போது மேலே நோக்கி பறக்கும். சரியாக ஒரு இன்ச் தூரத்தில், பிரேக் போட்டது போல் நின்று விடும்.

இந்த தடவை, கண்ணாடியில் இடி இல்லை. வலி இல்லை.

அதே போல், இடது பக்கம் பறக்கும். ஒரு இன்ச் தூரத்தில் நின்று விடும்.

அனைத்து பக்கங்களிலும் பறக்கும். எந்தக் கண்ணாடியிலும் இடிக்காமல் பறக்கும். அந்த திறமையை, வாழ்க்கை அளித்த பாடம் என்று பெருமையாக எண்ணிக் கொள்ளும்.

இப்படி, அந்த பூச்சி, எந்த பக்கத்திலும் இடிக்காமல் பறப்பதை பார்த்தவுடன்,
அவர்கள், மேலே உள்ள கண்ணாடி, மற்றும் பக்கங்களில் உள்ள கண்ணாடியை எடுத்து விடுவார்கள்.

இப்போது, மேலே கண்ணாடி இல்லை. பக்கங்களில் கண்ணாடி இல்லை.

ஆனால், அந்த பூச்சி, ஆனந்தமாக, இன்னும் அந்த ஒரு இன்ச் தூரத்தில் பிரேக் போட்டு நின்று, இல்லாத கண்ணாடிகளில் இடிக்காமல், அந்த வேலி இல்லாத பெட்டிக்குள், தன் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருக்கிறது.

அந்த பூச்சி மட்டும், பழைய வலியை மறந்து, கொஞ்சம் புது முயற்சி செய்து இருந்தால்...

அந்த ஒரு இன்ச் தூரத்தை கடந்து இருக்கும்.

ஒரு இன்ச் தூரத்தைக் கடந்து இருந்தால், இந்த உலகத்தையே சுற்றி வந்து இருக்கும்.

நம்மில் பலர், இந்த பூச்சியை போன்று வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.

- நன்றி: முத்தமிழ்.காம

Tuesday, June 24, 2008

பெட்ரோல் விலை..அமெரிக்காவின் இன்னொரு ஆயுதம்

கடனை திருப்பிச் செலுத்த முடியாதவர்களுக்கு எல்லாம் அமெரிக்க வங்கிகள் அடித்துப் பிடித்து கடன் கொடுத்துவிட்டு அதற்கான பெரும் விலையை இப்போது தந்து கொண்டிருக்கின்றன.'சப்-பிரைம்' லோன்கள் என்ற பெயரில் தரப்பட்ட கடன்கள், குறிப்பாக வீடுகள் வாங்க தரப்பட்ட கடன்கள் திரும்பி வரவில்லை.இப்படி வராமல் போன பல நூறு பில்லியன் டாலர் மதிப்பிலான கடன்களால் அமெரிக்காவின் பல வங்கிகள் நடு்த் தெருவுக்கு வந்துவிட்டன.அத்தோடு சேர்ந்து கொண்டது அமெரிக்க பொருளாதார தேக்கம். அதன் அடுத்த விளைவு டாலர் மதிப்பின் வீழ்ச்சி.

உலக அளவில் பல நாட்டு கரன்சிகளுக்கு எதிரான டாலரின் விலை 20 முதல் 30 சதவீதம் வரை வீழ்ச்சி கண்டுவிட்டது. இதனால் அமெரிக்க பொருளாதாரத்தில் மேலும் சரிவு.இப்படியாக அடிமேல் அடி வாங்கி வரும் தங்கள் சந்தையை நிலை நிறுத்த அமெரிக்கர்களுக்கு கிடைத்த கடைசி ஆயுதம் தான் கச்சா எண்ணெய்.உலகின் தேவையில் கிட்டத்தட்ட 80 சதவீதத்துக்கும் மேல், கச்சா எண்ணெய்யை உற்பத்தி செய்து அதை ஏற்றுமதி செய்வது என்னவோ செளதி அரேபியா, வெனிசுவேலா, ஈரான், அல்ஜீரியா, யுஏஇ, குவைத் உள்ளிட்ட OPEC (Organization of Petroleum Exporting Countries) நாடுகளாக இருக்கலாம்.ஆனால், இந்த கச்சா எண்ணெயின் வர்த்தகம் நடப்பது அமெரிக்காவிலும் லண்டனிலும் தான். குறிப்பாக அமெரிக்காவின் வால் ஸ்டீரிட்டில் தான் (நம் ஊர் மும்பை புரோக்கர்கள் நிறைந்த தலால் ஸ்டீரிட் மாதிரி). விலை நிர்ணயிக்கப்படுவது டாலரில் தான்.(இத்தனைக்கும் உலகில் பெரிய அளவில் அமெரிக்காவிலும் பெட்ரோலிய 'ரிசர்வ்' உண்டு. அதை அவர்கள் வெளியே விற்பதில்லை.

செளதியிடம் வாங்கிக் கொண்டு பதிலுக்கு கொஞ்சம் பணம், நிறைய போர் விமானங்கள்-ராக்கெட்களை தந்து விடுகிறார்கள், பணத்துக்கு பணம் மிச்சம்.. கூடவே அமெரிக்க தளவாட உற்பத்தி நிறுவனங்களுக்கு லாபம்!)இந்த புரோக்கர்கள் தான் நாம் திண்ணும் உப்பில் ஆரம்பித்து நாம் அணியும் பனியன் வரை விலையை நிர்ணயம் செய்கின்றனர்.பங்குச் சந்தை வர்த்தம் என்பதே ஒரு கணிப்பு தான். உண்மையை சொன்னால் 'பெட்டிங்' தான்.. உதாரணத்துக்கு ஒன்றே ஒன்று...சீனாவில் ஒலிம்பிக் வருதா, அங்கு ஸ்டேடியங்கள் கட்ட இரும்பு அதிகமாக பயன்படுத்தப்படப் போகிறது, இதனால் இரும்பு நிறுவனங்களின் லாபம் அதிகமாகும், இதனால் இரும்பு நிறுவன பங்குகளில் அதிகம் முதலீடு செய்யுங்கோ.. என்று இவர்கள் 'கிளப்பிவிட்டால்' இரும்பு நிறுவனங்களுக்கு ஜாக்பாட் தான். ஒரே நாளில் அவர்களது பங்கு மதிப்பு பல பில்லியன் கூடிவிடும்.(எதிர்பார்த்தபடி அந்த நிறுவனங்கள் லாபம் சம்பாதிக்கவில்லை என்றால் அதன் பங்கு மதிப்புகள் மடமடவென சரியும். புரோக்கர்களின் கூவலை நம்பி பணம் போட்டவர்கள் தலையில் துண்டு மிஞ்சும். அது வேறு கதை)இப்படித்தான் கச்சா எண்ணெயின் விலையையும் அமெரிக்க-இங்கிலாந்து புரோக்கர் நிறுவனங்கள் கூவிக் கூவியே கூட்டிவிட்டுவிட்டன.குறிப்பாக கோல்ட்மேன் சேக்ஸ், சிட்டி குரூப் (நம்ம சிட்டி பாங்க்), ஜே.பி. மோர்கன் சேஸ், மோர்கன் அண்ட் ஸ்டான்லி ஆகிய நான்கு நிறுவனங்கள் தான் கச்சா எண்ணெய் நிறுவனங்களின் பங்குகளில் மிக அதிகமாக முதலீடுகளை தள்ளிவிட்டவர்கள்.இந்த நிறுவனங்களை 'financial companies' என்று அழைப்பதற்கு பதில் 'oil traders' என்றே அன்புடன் அழைக்கலாம். அந்த அளவுக்கு தங்கள் தொழிலையே கச்சா எண்ணெய்யை சார்ந்து மாற்றி அமைத்துக் கொண்டுவிட்டன.

கச்சா எண்ணெய் விலை கன்னாபின்னாவென உயர்வதற்கு கடவுளைத் தவிர வேறு யாருக்காவது காரணம் தெரியும் என்றால் அது இந்த நான்கு பேராகத் தான் இருக்க முடியும்.விலை ஏன் உயர்கிறது என்று தெரியாமல் OPEC நாடுகளே திக்குமுக்காடிக் கொண்டிருப்பதும், விலை உயர்ந்தாலும் இந்த நாடுகளுக்கு நயா பைசா லாபம் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.நான் முன்பே சொன்னது போல பங்குச் சந்தையே ஒரு 'பெட்டிங்' தான். இன்று கச்சா எண்ணெய் விலை என்னவாக இருக்கும் என்று காலையில் புரோக்கர் நிறுவனங்கள் பெட்டிங்கை ஆரம்பித்தால் மாலையில் அந்த நிறுவன சிஇஓக்களும் சிஎப்ஓக்களும் வீடு போவதற்குள் பெட்ரோலியத்தின் விலை பீப்பாய்க்கு மேலும் சில டாலர்கள் உயர்ந்திருக்கும்.விலை உயர்வால் எண்ணெய் நிறுவனங்களுக்கு லாபம்.. விலையைக் கூட்டிவிட்ட புரோக்கர் நிறுவனங்களுக்கு கமிஷன்.இப்படியாகத் தான் speculative trading காரணமாக கச்சா எண்ணெய் விலை விண்ணை நோக்கி போய்க் கொண்டே இருக்கிறது.

இதை தடுப்பதை விட்டுவிட்டு OPEC உடனே எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்று கோரியுள்ளார் அமெரிக்க எரிசக்தித்துறை அமைச்சர் சாம் போட்மேன்.எதற்காக கூடுதலாக உற்பத்தி செய்ய வேண்டும்.. அப்படி என்ன திடீரென தேவை அதிகரித்துவிட்டது.. உற்பத்தியை அதிகரித்தாலும் எங்களுக்கு என்ன லாபம் என்று கேட்கின்றன எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள்.எண்ணெய் விலையை உயர்த்தும் நிதி நிறுவனங்கள்- உற்பத்தி செய்யும் நாடுகளுக்கு இடையி்ல் சிக்கித் தவிப்பது ஒவ்வொரு சொட்டு பெட்ரோலையும் இறக்குமதி செய்து வாழ்ந்து வரும் இந்தியா போன்ற நாடுகள்.

இந்த OPEC, புரோக்கர்கள், சாம் போட்மேன் கதையை எல்லாம் எப்படி சமானிய மக்களுக்கு புரிய வைப்பது என்று தெரியாமல் பிரதமர் மன்மோகன் சிங்கும் நிதியமைச்சர் ப.சிதம்பரமும் விழி பிதுங்கிப் போய் நிற்கின்றனர்.பெட்ரோல்-டீசல் விலை உயர்வால் விலைவாசியும் உயர, மக்கள் வெறுப்பேற, இனியும் சமாளிக்க முடியாது.. பேசாமல் நாமே ஆட்சியை கவிழ்த்துவிடலாம் என்று முடிவு செய்து தான் அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்தையே கையில் எடு்த்து இடதுசாரிகளை காங்கிரஸ் வெறுப்பேற்றுகிறதோ என்னவோ.அடுத்த முறை பெட்ரோல் பங்குக்குள் நுழையும்போது இந்த 'பெட்ரோல் கதை'யை ஒரு முறை யோசித்துப் பாருங்கள்.. இனி தெரு முக்குக்கு போக எல்லாம் காரையோ பைக்கையோ எடுக்க மாட்டீர்கள்...

இன்றைய தேதியில் 'ஹைட்ரோகார்பன்' தான் உலக ஹீரோ. இதனால் எனக்கு மிகப் பிடித்தமான அரசியல் விவகாரங்களை விட்டுவிட்டு பெட்ரோலியம் பற்றி மேலும் சில தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன். இதை எழுத வைத்தது என் முதல் கட்டுரைக்கு உங்களிடம் கிடைத்த வரவேற்பு தான்.கதைக்கு வருவோம். யூக வர்த்தகத்தால் பெட்ரோலிய விலை உயர்ந்தாலும் இதற்கு உடனடித் தீர்வு கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிப்பது தான் என OPEC நாடுகளிடம் உலக நாடுகள் வைத்த கோரிக்கையை செளதி ஏற்றுக் கொண்டுவிட்டது.உறுதியளி்த்தபடி செளதி எண்ணெய் துறை அமைச்சர் அலி நைமி நடந்து கொண்டால், அடுத்த வாரத்தில் இருந்து (ஜூலை) ஒரு நாளைக்கு 2,55,000 பீப்பாய்கள் அளவுக்கு கூடுதலாக எண்ணெய் 'பம்ப்' செய்யப்படவுள்ளது.

ஆனால், செளதி அரேபியா உற்பத்தி செய்யப் போகும் இந்த கூடுதல் எண்ணெய் சந்தைக்கு வரப் போகும் அதே நேரத்தில் இன்னொரு இடத்திலிருந்து வந்து கொண்டிருக்கும் எண்ணெய் நிற்கப் போகிறது (தாற்காலிகமாவது). அது நைஜீரிய எண்ணெய்.ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவிலும் கச்சா எண்ணெய் கிடைக்கிறது. இங்கு அதிக அளவில் எண்ணெய்யை உற்பத்தி செய்து வருவது டச்சு நிறுவனமான ஷெல் (Shell). ஆனால், நைஜீரியாவின் சொத்தை ஷெல் உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்கள் கொள்ளையடித்து வருவதாகக் கூறி அந்த நிறுவனங்களையும் அவற்றின் கட்டமைப்புகளையும் தாக்க ஆரம்பித்துள்ளன நைஜீரிய நாட்டு அதிருப்தி அமைப்புகள். குறிப்பாக 'மென்ட்' (Mend) என்ற அமைப்பு.'Movement for the Emancipation of the Niger Delta' என்பது தான் இந்த 'மென்ட்' அமைப்புக்கு விரிவாக்கம். சரியாகச் சொன்னால் இதுவும் ஒரு தீவிரவாத அமைப்பு தான்.

இந்த அமைப்பின் தொல்லை தாங்க முடியாமல் நிலப் பகுதியில் எண்ணெய் எடுப்பதை கைவிட்டுவிட்டு நடுக் கடலில் போய் எண்ணெய் உற்பத்தி செய்ய (offshore) ஆரம்பித்துள்ளன எண்ணெய் நிறுவனங்கள். கிட்டத்தட்ட கரையிலிருந்து 120 கி.மீ. தூரத்தில் ஆயில் பிளாட்பார்ம்களை அமைத்து எண்ணெய்யை தோண்டி எடுத்து வருகின்றனர்.இதற்காக ஷெல் நிறுவனம் போங்கா (Bonga) என்ற மாபெரும் கப்பல்-கம்-எண்ணெய் உற்பத்தி மற்றும் சேமிப்பு கிடங்கை (floating oil production and storage facility) பயன்படுத்தி வருகிறது. 3.6 பில்லியன் டாலர் மதிப்பிலான இந்த எண்ணெய் உற்பத்திக் கப்பல் இதுவரை மென்ட் அமைப்பிடம் இருந்து தப்பி வந்தது. காரணம், இந்தக் கப்பல் நைஜீரிய கடலோரத்தில் இருந்து 100, 120 கி.மீ தூரத்தி்ல் இருந்தது தான்.ஆனால், சில நாட்களுக்கு முன் 3 அதிவேக படகுகளில் வந்த மென்ட் தீவிரவாதிகள் போங்காவை 'பதம்' பார்த்துவிட்டுப் போய்விட்டனர். இதனால் போங்கா எண்ணெய் பிளாட்பார்ம் 'ஷட்-டவுன்' செய்யப்பட்டுவிட்டது. (போகும் வழியில் ஒரு அமெரிக்கக் கப்பலையும் தாக்கி அதிலிருந்த மாலுமியையும் கடத்திச் சென்றுவிட்டனர்).

'போங்கா' அடியானதால் அப்படி என்ன பெரிய அளவில் எண்ணெய் உற்பத்தி குறைந்துவிடப் போகிறது என்கிறீர்களா?. OPEC-ன் மொத்த உற்பத்தியில் 10 சதவீதம் நைஜீரியாவில் தான் உற்பத்தியாகிறது, குறிப்பாக அதை போங்கா தான் தோண்டி எடுத்து வருகிறது என்பதை அறிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்.எண்ணெய் எடுப்பதை போங்கா நிறுத்தி 4 நாட்களாகிவிட்டது. ஆனால், இதன் தாக்கம் இன்னும் சில வாரங்கள் கழித்துத் தான் சந்தையில் உணரப்படும்.செளதியின் கூடுதல் எண்ணெய் சந்தைக்குள் நுழையும் அதே நேரத்தில் நைஜீரியாவிலிருந்து வந்து கொண்டிருந்த எண்ணெய் நிற்கப் போகிறது... மென்ட் தீவிரவாதிகளை முழுமையாக ஒடுக்காத வரை போங்கா தாக்குதல்கள் தொடரத்தான் போகின்றன..இந்தக் காரணம் போதாதா.. கச்சா எண்ணெய் விலையை மேலும் சில டாலர்கள் ஏற்றி விடுவதற்கு...?

அன்புடன்,
ஆசிரியர்,தட்ஸ்தமிழ்.காம்.

அறிவியல் வளர்வதற்கான வழி

இஸ்லாமிய அறிவியக்க இதழான சமரசம் மே 2008 இதழில் 33 ஆம் பக்கத்தில் A. சம்ஷாத் எழுதிய ‘அறிவியல் தேர்ச்சிகொள் ‘ என்ற கட்டுரை வெளியாகியிருக்கிறது. ‘நாம் [இஸ்லாமியர்கள்] மார்க்கக் கல்வி உலகக் கல்வி என்று பிரித்து வைத்ததனால்தான், வழிகாட்டியாக இறக்கி வைத்த குர் ஆனை பொருளறியாமல் படித்துவிட்டு திருப்தி அடைந்ததனால்தான் வாழும்வழி தெரியாமல் போய்விட்டோம். எத்தனை பெரிய நஷ்டம் இது?’ என்று கட்டுரை ஆசிரியர் சொல்கிறார்.

‘அவனே வானத்திலிருந்து மழையை பொழியச்செய்கிறான். அதிலிருந்து உங்களுக்கு அருந்தும் நீரும் இருக்கிறது. அதிலிருந்து [உங்கள் கால்நடைகளை]மேய்ப்பதற்கான மரங்கள் [மற்றும் புல்பூண்டுகளும் உருவாகி]அதில் இருக்கின்றன. அதனைக் கொண்டே [விவசாயப் ]பயிர்களையும் ஒலிவ மரத்தையும் பேரீத்த மரங்களையும் திராட்சைக் கொடிகளையும் இன்னும் எல்லாவகைக் கனி வர்க்கங்களையும் அவன் உங்களுக்காக விளைவிக்கிறான். நிச்சயமாக இதில் சிந்திக்கும் மக்கள் கூட்டத்தாருக்கு [தக்க] அத்தாட்சி இருக்கிரது. இன்னும் அவனே இரவையும் பகலையும் சூரியனையும் சந்திரனையும் உங்கள் [நலன்களுக்கு] வசபப்டுத்திக் கொடுத்துள்ளான். அவ்வாறே நட்சத்திரங்களும் அவன் கட்டளைப்படியே வசப்படுத்தபப்ட்டுள்ளன. நிச்சயமாக இதிலும் ஆய்ந்தறியக்கூடிய மக்கள் கூட்டத்தாருக்கு[தக்க] அத்தாட்சிகள் இருக்கின்றன… இன்னும் பூமியில் அவன் அப்டைத்திருப்பன பல விதமான நிறங்களை உடைய [செடிகொடிகள் பிராணிகள் பறவைகள் போன்ற]வையுமாகும். நிச்சயமாக இதில் [அல்லாஹ்வின் அருள்கொடைகளை] நினைவுகூரும் மக்களுக்கு தக்க அத்தாட்சி உள்ளது’

இந்த வசனங்களைப்போல எத்தனையோ நினைவூட்டும் வசனங்கள். அல்லாஹ் தான் அருளியுள்ள அருட்கொடைகளைக் கொண்டு மகக்ளை சிந்திக்கவும் ஆய்ந்தறியவும் நினைவுகூரவும் தூண்டுகின்றான்.இதுவல்லவா உண்மையான கல்வி? — என்று கூறும் கட்டுரை ஆசிரியர் நவீன அறிவியல் வளர்வதற்கான வழியை விஞ்ஞானம் என்ற தலைப்பில் இவ்வாறு கூறுகிறார்.

‘எத்தனையோ சமீபத்திய விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் குர் ஆனின் வசனங்களோடு ஒத்துப்போவதை ஒவ்வொன்றாக பார்த்துக் கொண்டிருக்கிறோம். இன்னும் கண்டுபிடிக்க வேண்டியவை எவ்வளவோ உள்ளன அருள் மிக்க குர் ஆனை கையில் வைத்திருப்பவர்கள் சிறு வயதில் இருந்தெ பிள்ளைகளுக்கு இறைவசனங்களின் பொருளைப் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தினால் நூறில் பத்து பிள்ளைகளாவது விஞ்ஞானிகளாகவும் ஆராய்ச்சியாளர்களாகவும் வர வாய்ப்பு உள்ளது. எதையாவது கண்டுபிடித்துவிட்டு இது குர் ஆனிலும் உள்ளது என்று சொல்வதை விட குர் ஆன் வசனங்களை ஆராய்ந்து இதுவரை கண்டுபிடிக்காதவற்றைக் கண்டுபிடிக்கலாமே…”

இந்தக் கடைசி வரியே கட்டுரையின் சாரமாக எடுத்து முதலிலும் கொடுக்கபப்ட்டுள்ளது. இக்கட்டுரை இவ்வாறு முடிகிறது ‘…இன்னும் மருத்துவம் வானவியல் இயற்பியல் கணிதம் இவற்றில் எல்லாம் குர் ஆனின் மூலம் எத்தனையோ புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடிக்கலாம். நமக்கு முன் வாழ்ந்த முஸ்லீம்களில் விஞ்ஞானிகளும் கணித மேதைகளும் ஆராய்ச்சியாளர்களும் இல்லாமல் இல்லை. ஆனால் உலகம் இருட்டடிப்புசெய்துவிட்டது. அதன் பின்பு ஒரு நீண்ட இருண்ட காலம். ஆனால் இருள் எப்போதும் நிரந்தரமானதல்ல. இருளுக்குப்பின் விடியும் என்பதுதான் நியதி. இறையருளால் இனிவரும் தலைமுறைகள் எழுச்சி பெற்று தங்கள் கல்வியை குர் ஆனில் இருந்து தொடங்கட்டும்! மீண்டும் புரட்சிகரமான கண்டுபிடிப்புகள் மலரட்டும்!