Friday, November 28, 2008

முற்பகல் செய்யின் பிற்பகல் பலன் மும்பை பயங்கரம்: மாறட்டும் அணுகுமுறை!
















2001ஆம் ஆண்டு நமது நாடாளுமன்றத்தின் மீது நடந்த பயங்கரவாதத் தாக்குதலிற்குப் பிறகு இரண்டாவது பெரிய பயங்கரவாதத் தாக்குதல் மும்பையில் நடந்துள்ளது.இந்தியாவின் நிதித் தலைநகரான மும்பை நகரம் மீண்டும் ஒருமுறை பயங்கரவாதத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. சத்ரபதி சிவாஜி இரயில் நிலையம், தாஜ், டிரைடண்ட் நட்சத்திர விடுதிகள், நாரிமேன் மாளிகை, வில்லே பார்லே, மெட்ரோ திரையரங்கு ஆகியன உட்பட 9 இடங்களை குறிவைத்து நேற்று இரவு புகுந்த பயங்கரவாதிகள் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்,





187க்கும் அதிகமானோர் காயமுற்றுள்ளனர்.தாஜ் நட்சத்திர விடுதியில் தங்கியிருந்த சில நாடாளுமன்ற உறுப்பினர்கள், அந்நிய நாட்டு முக்கிய நபர்கள் ஆகியோர் உள்ளிட்ட பலரை பயங்கரவாதிகள் பிணையமாக பிடித்துவிட்ட நிலையில், அவர்களை மீட்க விடுதிக்குள் புகுந்து அதிரடித் தாக்குதல் நடத்திய மும்பை காவல் துறை அதிகாரி கார்க்கரே உட்பட 3 அதிகாரிகளும், 11 காவலர்களும் கொல்லப்பட்டுள்ளனர். இதுதவிர மற்ற இடங்களில் நடந்த மோதல்களில் அசோக் காம்தே, விஜய் சலாஸ்கார் உள்ளிட்ட அதிகாரிகளும், மேலும் பல காவலர்களும் உயிரிழந்துள்ளனர்.








பயங்கரவாதிகளில் 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.ஏ.கே.47 துப்பாக்கிகளுடனும், கையெறி குண்டுகளுடனும் இத்தாக்குதலை பயங்கரவாதிகள் நடத்தியுள்ளனர். மிரண்டுபோன மும்பை மக்களை வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று காவல் துறை கட்டுப்பாடு விதிக்கும் அளவிற்கு நிலைமை அபாயகரமாக உள்ளது.உளவு முன்னெச்சரிக்கை வராதது ஏன்?இவ்வளவு பெரிய அளவிற்கு தாக்குதல் நடத்த வேண்டுமெனில் இது நிச்சயம் நீண்ட கால சதித் திட்டமாகவே இருக்க வேண்டும். ஆனால், இது குறித்த உளவு எச்சரிக்கை ஏதும் வழங்கப்பட்டதாகத் தெரியவில்லை. 2006ஆம் ஆண்டு மும்பை புறநகர் இரயில் குண்டுவெடிப்புகள், மாலேகான் குண்டுவெடிப்பு என்று பல்வேறு தாக்குதல்களில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை, அமைப்புகளை கண்டறிந்து தீவிர புலனாய்வில் மும்பை காவல் துறையின் பயங்கரவாத தடுப்புப் பிரிவு ஈடுபட்டுவந்த நேரத்தில் இந்த பயங்கரத் தாக்குதல் நடைபெற்றுள்ளது கவனிக்கத்தக்கது.பெங்களூருவில் இருந்து தொடங்கி, ஜெய்ப்பூர், அகமதாபாத், டெல்லி, பிறகு சமீபத்தில் அஸ்ஸாம் என்று இந்தியாவின் பல மாநிலங்களில் அடுத்தடுத்து நடந்த குண்டு வெடிப்புகளில் பலர் உயிரிழந்த அதிர்ச்சியில் இருந்து நாடு மீள்வதற்குள் இந்த பயங்கரவாதத் தாக்குதல் நடந்துள்ளது எதைக் குறிக்கிறது என்றால், இன்னமும் பயங்கரவாத நடவடிக்கைகளை முன்னறிந்து (உளவறிந்து) தடுக்கும் திறனை நமது உளவு அமைப்புகள் பெறவில்லை என்பதே.இவ்வளவு பெரிய தாக்குதல் நடைபெறும் என்று ஒரு சிறிய எச்சரிக்கை கூட வராத காரணத்தினால், மும்பை காவல் அமைப்பின் திறனையும் தாண்டி, மக்களுக்கும், காவலர்களுக்கும் பெரும் பாதிப்பு ஏற்படுவதை தடுக்க முடியாமல் போய்விட்டது. எனவே இது நமது உளவு அமைப்பின் மிகப் பெரிய தோல்வியாகும்.




அதன் திறன் கிரீடத்தில் பதிந்த மற்றொரு தோல்விச் சிறகாகும். இந்திய உள்நாட்டு உளவு அமைப்பின் தலைவராக இருந்த எம்.கே. நாராயணன், பிரதமரின் தேச ஆலோசகராக உள்ள நிலையில் இப்படிப்பட்ட தொடர் தாக்குதல்கள் தடையின்றி நடக்கிறது என்றால், அது நமது மத்திய உளவு அமைப்புகளில் உள்ள திறன் குறைவே அன்றி வேறில்லை.நமது நாட்டில் இப்படி திட்டமிட்டு நடத்தப்படும் ஒவ்வொரு தாக்குதலின் பின்ன‌ணியிலும் எல்லைக்கு அப்பால் இயங்கும் சக்திகளின் கைகள் உள்ளன என்று நமது அரசாலேயே பலமுறை கூறப்பட்ட பின்னரும் பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்கின்றன என்றால் அது நமது அயல் உளவு அமைப்பின் தோல்வியே என்பதிலும் சந்தேகம் இல்லை.பயங்கரவாதத்தை தடுக்க, ஒடுக்க தனித்த அமைப்புத் தேவை!




பயங்கரவாத நடவடிக்கைகளை முன்னறிந்து, அதன் மூலம் பயங்கரவாதத் தாக்குதல்களை தடுக்கவும், சதியில் ஈடுபடும் பயங்கரவாதிகளை கைது செய்து, விசாரணையின் வாயிலாக அவர்களின் தொடர்புகளை அறிந்து, தேச அளவிலோ அல்லது சர்வதேச அளவிலோ அதிகபட்ச நடவடிக்கை எடுப்பது அவசியமானது என்றும், அதற்கு தனித்த உளவு அமைப்பை - தேச அளவில் - ஏற்படுத்த வேண்டும் என்றும் தமிழ.வெப்துனியா.காம் தொடர்ந்து கூறிவந்துள்ளது.இதனை மத்திய அரசு அமைத்த நிர்வாக சீர்திருத்த ஆணையமும் பரிந்துரை செய்தது. ஆனால் அதற்கான அவசியமில்லை என்று மத்திய அரசு நிராகரித்தது. மத்திய உள்நாட்டு, அயல் உளவு அமைப்புகளை மேலும் பலப்படுத்தினாலே போதும் என்று மத்திய அரசு தெரிவித்துவிட்டது.




சில நாட்களுக்கு முன்னர் டெல்லியில் நடந்த காவல் துறைத் தலைமை இயக்குனர்கள் மாநாட்டில் உரையாற்றிய பிரதமர், பயங்கரவாதத்தை ஒடுக்க ஒவ்வொரு மாநிலமும் தனிப் படைகளை ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். ஆனால் அப்படிப்பட்ட தனிப் பிரிவை கொண்டுள்ள (பயங்கரவாத தடுப்புப் பிரிவு) காவல் துறை இயங்குமிடத்தில்தான் இந்த பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. முதல் முறையாக அல்ல...1992ஆம் ஆண்டு முதல் 2006 மெட்ரோ இரயில் தாக்குதல் வரை பல முறை நடந்துள்ளது.எனவே பயங்கரவாதத்தை காவல் துறையில் ஒரு தனிப் பிரிவு அமைப்பதனால் மட்டுமே தடுக்கவோ, ஒடுக்கவோ முடியாது என்பது தெளிவாகிறது.




அதுமட்டுமல்ல, காவல் துறை தலைமை இயக்குனர்கள் மாநாட்டில் பேசிய உள்துறை அமைச்சர் சிவ்ராஜ் பட்டீல், பயங்கரவாதத்தின் முகங்கள் மாறிக்கொண்டு வருகின்றன என்றும், அவர்கள் அணுகுண்டு, பேரழிவு ஆயுதங்களை பயன்படுத்தும் ஆபத்து கூட உள்ளது என்று பேசினார். அவர் பேசியதன் பொருள் என்னவென்பது அவருக்குதான் வெளிச்சம். தனது பேச்சிற்கு அவர் எந்த அடிப்படையையும் கூறவில்லை. பயங்கரவாதத்தை பயங்கரமாக சித்தரித்துவிட்டு... ம்... பார்த்துக்கொள்ளுங்கள் என்று முடித்துகொண்டு போய்விட்டார். ஒரு இலக்கை நிர்ணயிக்கும் பேச்சாக அது இல்லை.




2001ஆம் ஆண்டு செப்டம்பரில் நியூயார்க்கின் இரட்டை கோபுரங்களின் மீது நடத்தப்பட்ட தாக்குதலிற்குப் பிறகு, மீண்டும் ஒரு பயங்கரவாதத் தாக்குதல் அமெரிக்காவில் நடத்தப்படவில்லையே ஏன்? காரணம் அந்நாட்டு உள் புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ. பயங்கரவாதத்தை ஒடுக்கும் ஒற்றை இலக்குடன் கடுமையாக பணியாற்றியது. அதற்கான முழுச் சுதந்திரத்தையும் அந்நாட்டு அரசு எஃப்.பி.ஐ.க்கு தந்தது.




ஆனால் நமது நாட்டில்? நமது உளவு அமைப்புகள் சிரத்தையுடன் பணியாற்றியிருந்தால் இப்படிப்பட்ட தாக்குதல்கள் நடந்திருக்குமா? எல்லைத் தாண்டிய பயங்கரவாதம் என்று ஒவ்வொரு முறையும் கூக்குரலிட்டு மக்களை திசை திருப்பி விடுவது, அதையும் மீறினால் முன்பிருந்த ஆளுங்கட்சியைக் குறை கூறுவது. இதுதான் நடந்தது, நடக்கிறது. மாலேகான் குண்டுவெடிப்பில் தொடர்புடையவர்களை கைது செய்து விசாரணை நடத்தினால் அவர்களை சித்தரவதை செய்வதாக பா.ஜ.க. குற்றம் சாற்றுகிறது. மற்ற பயங்கரவாத தாக்குதல்களில் தொடர்புடையவர்களை கைது செய்து விசாரித்தபோது இக்கட்சி இப்படி எந்தக் குற்றச் சாற்றையும் கூறவிலலை. பயங்கரவாதத்தை அரசியலாக்குவதிலேயே குறியாக உள்ளார்கள். இதில் காங்கிரஸ் கட்சியும் மாறுபட்டதல்ல.




உண்மையில் குற்றம்சாற்றப்பட வேண்டியது நமது உளவு அமைப்புகள் மீதுதான். உளவு அமைப்புகள் சரியாக செயல்படாததே பயங்கரவாத தாக்குதல்களுக்கு காரணம் என்று பலரும் கூறிவிட்டனர். ஒரு பீடாதிபதி கூட உளவுத் துறை மீதுதான் குற்றம் சாற்றினார். அந்த அளவிற்கு இவர்களின் ‘திறன்’ ஊரறிந்த ரகசியமாக உள்ளது.நமது உள்நாட்டு, அயல் உளவு அமைப்புகள் எப்படி செயல்படுகின்றன என்பதையெல்லாம் ஆராய்ந்து, எங்கே தவறு ஏற்பட்டது என்று சுட்டிக்காட்டும் அளவிற்கு அவைகள் வெளிப்படையாக இயங்குவதில்லை என்பதும், பிரதமர், உள்துறை அமைச்சர், குடியரசுத் தலைவர் ஆகியோர் தவிர வேறு யாருக்கும் தெரியாது என்பதும் இந்த நாடறிந்த இரகசியம்.




எனவே அதை ஆராய்துக்கொண்டிருப்பதில் அர்த்தமில்லை.பயங்கரவாத நடவடிக்கைகள் இதற்கு மேலும் நடைபெறாமல் தடுக்க வேண்டுமெனில் அதனை ஒடுக்குவதை மட்டுமே இலக்காகக் கொண்ட மத்திய புலனாய்வு-உளவு அமைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும். அதனை ஒரு சட்டத்தை உருவாக்கி (மத்திய புலனாய்வுக் கழகத்தை உருவாக்கியதைப் போல) ஏற்படுத்த வேண்டும். அதன் செயல்பாடு சுதந்திரமாக இருக்கவும், பயங்கரவாதிகள் மற்ற குற்றவாளிகள் பெறக்கூடிய சட்ட நிவாரணங்களை பெற முடியாத ஒரு சட்டத்தையும் (பொடா போன்றது அல்ல) அதற்கு இணையாக நிறைவேற்றி உருவாக்க வேண்டும்.




மத்திய அமைப்பைப் போன்று மாநில அளவிலும், அனைத்து மாநிலங்களிலும் இதேபோன்று ஒரே ஒரு இலக்கை கொண்ட புலனாய்வு-உளவு அமைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும். சட்டம்-ஒழுங்கு, குற்றவியல் நடவடிக்கைகளில் இருந்து அந்த அமைப்பு முழுமையாக பிரிக்கப்பட்ட தனித்த அமைப்பாக செயல்பட அனுமதிக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, நமது நாட்டின் குடியரசுத் தலைவராக இருந்தபோது மதிப்பிற்குரிய அப்துல் கலாம் அவர்கள் அளித்த யோசனையை நிறைவேற்ற வேண்டும். அது இந்திய குடிமக்கள் அனைவருக்கும் தேச அடையாள அட்டை வழங்குவது.




அதுவே அவர்களின் சட்ட கவசமாகவும், பாதுகாப்பு, வாக்குரிமை, கடன் பெறுதல் உள்ளிட்ட அனைத்திற்கும் அடிப்படையானதாக இருத்தல் வேண்டும்.பலமான பாதுகாப்பு வளையத்திற்குள் இருந்துகொண்டு, “மக்கள் பயங்கரவாதத்தை உறுதியுடன் எதிர்க்க வேண்டும்” என்றெல்லாம் கூறிக்கொண்டு, அத்தோடு அவர்களின் பாதுகாப்பை மறந்துவிடாமல், உண்மையாக நடப்பதாக இருந்தால் மத்திய, மாநில அரசுகள் இதனைச் செய்யட்டும்.






No comments: