* நாவலாசிரியர் தோப்பில் மீரான் கவலை - எம்.ஏ.எம்.நிலாம்
இன்றைய சமூகம் வரலாறில்லாத சமூகமாக மாறிப்போய்க் கொண்டிருப்பதாகவும், சமூகத்தைப்படிக்கத் தவறியதன் விளைவாகவே இந்த அவலம் ஏற்பட்டிருப்பதாகவும் விசனம் தெரிவித்திருக்கும் தமிழகத்தின் பிரபல நாவலாசிரியரான தோப்பில் முஹம்மது மீரான், எமது இளம் சந்ததியினர் சமூகத்தைப் படிக்கத் தூண்டப் பட வேண்டுமென வலியுறுத்தினார்.
இலங்கை விஜயமொன்றை மேற்கொண்டிருக்கும், தமிழகத்தின் சாகித்ய அகடமி விருது பெற்றவரும், வரலாற்று நாவல்களை எழுதியவருமான தோப்பில் முஹம்மது மீரான் கடந்த வெள்ளிக்கிழமை மினுவாங்கொடை கல்லொளுவை அல்அமான் மகா வித்தியாலயத்தில் இடம் பெற்ற இலக்கியச் சந்திப்பில் கலந்து கொண்டு பேசுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
வித்தியாலய அதிபர் அத்தாவுர் ரஹ்மான் தலைமையில் நடைபெற்ற இந்த இலக்கியச்சந்திப்பில் மினுவாங்கொடை கலை இலக்கிய வட்டத்தலைவர் கலாபூஷணம் மு.பஷீர், புரவலர் பாயிக்மக்கீன் ஆகியோருடன் பாடசாலை ஆசிரியர்கள், உயர் தர வகுப்பு மாணவர்களுடன் பல இலக்கிய ஆர்வலர்களும் கலந்து கொண்டனர்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய தோப்பில் மீரான் கூறியதாவது;
எனது இளம் பருவத்தில் மலையாள கவிதைகளைப் படித்த போது நானும் ஒரு கவிஞனாக வேண்டுமென்று ஆசைப்பட்டேன். ஆனால் ஆரம்பம் முதல் எனது சமூகத்தைப்படிக்கத் தொடங்கியதன் காரணமாக நான் ஒரு எழுத்தாளனாக மாறிவிட்டேன். மாணவச் சமுதாயத்துக்கு நான் சொல்ல வருவது, நீங்கள் நிறைய வாசிக்க வேண்டும். வாசிப்பு தான் ஒருவனை முழு மனிதனாக மாற்றக் கூடியது.
சமூகத்தைப் படிக்கவேண்டும், மனிதனைப் படிக்க வேண்டும். அப்போதுதான் எமது வரலாறு பதியப்பட முடியும். இன்று எமது சமுதாயம் வரலாறில்லாத சமூகம் போலவே காணப்படுகின்றது. இந்த நிலை எதிர்காலத்தில் தொடரக்கூடாது. நாம் எமது சமூகத்தை நன்றாகப் படிக்க வேண்டும். அப்போது தான் நாளைய சந்ததி எமது வரலாற்றைக்காண முடியும். வரலாறு மறக்கப்பட்டால் நிச்சயமாக நாம் எமது உரிமைகளை இழந்து போய் விடுவோம். அண்மைக்காலமாக நாம் காண்பது கூட அத்தகைய இருண்ட வரலாற்றைத்தான். அத்தகைய நிலைமை எமது எதிர்காலச் சந்ததியினருக்கு ஏற்பட இடமளிக்கப்படக்கூடாது.
இங்குள்ள மாணவர்கள் எதிர்காலத்தில் எழுத்தாளர்களாகவோ, கவிஞர்களாகவோ வரவிரும்பினால் நீங்கள் நிறையவே வாசிக்க வேண்டும், எமது சமூகத்தைப் படிக்க வேண்டும், மனிதனைப்படிக்க வேண்டும்.
அன்று எமது ஊர்களில் ஆங்கிலம் படிப்பது "ஹராம்' சமூகத்தில் தடுக்கப்பட்டதாக கருதப்பட்டது. அந்தத் தவறு காரணமாக நாம் நீண்டகாலத்துக்கு பின்தள்ளப்பட்டுப்போனோம். அன்று தமிழ்மட்டும் தான் படித்தோம். இன்று நிலைமை மாறிவிட்டது. மொழி எதுவாக இருப்பினும் அவற்றைப் படிப்பதால் எவ்வளவோ பயன்களை அடைந்து கொள்ள முடியும்.
இஸ்லாம் இலங்கைக்கு இந்தியாவிலிருந்து வந்ததாக ஒரு தவறான கணிப்பீடு காணப்படுகிறது. உண்மையிலேயே இலங்கையிலிருந்துதான் இஸ்லாம் இந்தியாவுக்கு வந்தது. இதற்கு போதுமான ஆதாரங்கள் நிறையவே காணப்படுகின்றன. இது வரலாறு மறக்கப்பட்டதால் ஏற்பட்ட விபரீதமாகவே நான் கருதுகின்றேன்.
ஒவ்வொரு காலகட்டத்திலும் வாழும் தலைமுறையினருக்கு வரலாறு தெரிந்திருக்க வேண்டும். வரலாற்றை மறந்தால் நாம் எங்கு வாழ்ந்தாலும் உரிமையற்ற அநாதைச் சமூகமாகவே வாழ நேரிடலாம். இந்த வரலாறு தெரியாமல் மறக்கப்பட்டதால், மறுக்கப்பட்டதால் தான் எம்மை வந்தேறு குடிகளாக பார்க்கின்றனர். இந்த மண்ணின் மைந்தர்கள் நாம் என்பதை உறுதிபட நிரூபிப்பதற்காக வேனும் எமது வரலாற்றை தேடிப்படிக்க வேண்டிய அவசியம் இன்று ஏற்பட்டுள்ளது. எமக்கு சவால் விடுவோரிடம் மறுத்துப்பேச ஆதாரம் கிடையாது. இந்த வரலாற்று ஆதாரங்களை எப்படியேனும் தேடிக்கண்டு பிடிக்க வேண்டும்.
வாசிப்பை தொடருங்கள், ஜனாதிபதி பில்கிளிண்டன் ஓய்வு பெற்று வீட்டுக்குப் போகும் போது அவர் தன்னோடு கொண்டு போனது என்ன தெரியுமா 15 ஆயிரம் புத்தகங்களையே ஆகும், இந்திய முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் 24 மணிநேரமும் வாசிப்பதில்தான் ஆர்வம் காட்டுகிறார் சின்னதொரு நூலை, பிரசுரத்தைக்கண்டால் கூட அதனை ஆழமாகப் படிப்பவர் அவர்.
உமர்கையாம் மரணிக்கும் போது வாசித்துக்கொண்டு தானிருந்தார். அவரது கையில் இப்னுசின்னாவின் நூல்காணப்பட்டது. கார்ள்மார்க்ஸ் 20 வருடங்களாக நூலகத்துக்குள்ளிருந்து வெளியே வராமல் படித்துக் கொண்டிருந்தார். தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி நள்ளிரவில் கூட வாசித்துக் கொண்டிருப்பார்.
இவற்றை படிப்பினையாகக் கொண்டு நன்றாக வாசியுங்கள், அப்போதுதான் நாளை நீங்கள் சிறந்த எழுத்தாளராக, தலைவர்களாக வரமுடியும்.
இச்சந்திப்பில் கலாபூஷணம் மு.பஷீர், அதிபர், அத்தாவுர் ரஹ்மான் ஆகியோரும் கருத்துத் தெரிவித்தனர்.
Source- http://www.thinakkural.com
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment