Saturday, November 15, 2008

ஐ.ஐ.டி கல்வி நிலையங்களைத் தோற்றுவித்தவர்



நவம்பர் 11.


தேச கல்வி தினம்.


அபூல் கலாம் ஆசாத் அவர்களின் பிறந்த நாள்.இப்படியெல்லாம் சொன்னால் எல்லோருக்கும் தெரியுமா என்று தெரியவில்லை. ஆனால், இந்தியாவின் – premiere institute என்று சொல்லப்படும், IITக்களைத் தோற்றுவித்த மூல கர்த்தா என்று சொன்னால் தெரியுமில்லையா?


ஐ.ஐ.டி என்ற கல்வி நிலையங்களால் பெரும் பயனுற்ற எவராலும் இந்த கல்வி நிலையங்களைத் தோற்றுவித்தவர் எவர் என்ற தகவல் வெளியில் சொல்லப்படுகிறதா என்றால், நிச்சயமாக இல்லையென்றே சொல்லப்பட வேண்டும். இன்றைய நடைமுறையில், எந்த ஒரு விஷயத்திற்கும் ஆதரவு தேவைப்படுகிறதென்றால், அதை இரண்டு வழிகளில் பெற முடியும்.


#1. தங்கள் கருத்துகளை நேராகக் கூறி, கிடைக்கக் கூடிய நன்மைகளை நேரிடையாகச் சொல்லி, அதனால் ஆதரவு கோருவது. An optimistic outlook.


#2. நிகழ சாத்தியமற்ற ஆபத்து கூறுகளைப் பட்டியலிட்டு, அச்சமூட்டி, அதனால், எங்களை ஆதரித்து விடு என வற்புறுத்துவது. The pessimistic and negative view. இதில் இன்று உலகம் முழுக்க இந்த எதிர்மறை பிரச்சாரங்களைப் பரப்பித் தான் அரசு எந்திரங்கள் தங்களுக்கு ஆதரவைக் கோருகின்றன. அமெரிக்க அரசியல் தலைமை தான் முதன்முதலாக இந்த எதிர்மறை பிரச்சார உத்திகளை மேற்கொண்டு, அதன் மூலம் மனித உரிமைகள் என்ற தத்துவத்திற்கு ஆதரவு கோரியது. கம்யூனிஸத்தை ஒரு பயங்கரவாத பிசாசாக தொடர்ந்து கட்டமைத்தது.


அதைத் தடுக்க வேண்டுமென்றால்,முதலாளித்துவத்தைத் தொடர்ந்து தூக்கிப் பிடிக்க வேண்டும் என்ற மற்றொரு பயங்கரத்தை முன்நிறுத்தி ஆதரவு வேண்டியது. இந்த வகையான பிரச்சாரம் நல்ல பலனைக் கொடுக்கிறது என்ற தவறான புரிதலின் பயங்கரம் இன்று வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது - முதலாளிகள் வாழ, தொழிலாளிகள் ஒழியட்டும் என்ற பூனை இன்று பையிலிருந்து குதித்து ஓடிக்கொண்டிருக்கிறது அங்குமிங்கும். அமெரிக்காவின் இந்த உத்தியை, இன்று மிக லாகவமாக தன் வசப்படுத்திக் கொண்டிருக்கின்றனர், பரிவார்கள்.


இந்துக்களை - மதத்தின் உள் பலவீனங்களையும் மீறி, ஒன்று படுத்தி ஓட்டு வங்கியாக மாற்ற முனைவதற்காக, அவர்கள் முன் வைக்கும் எதிர்மறை பிரச்சாரம் தான் - முஸ்லிம், கிறித்துவ மதங்கள் இந்து மதத்தை விழுங்கி விடும் என்ற பூதத்தைக் காட்டி பயமுறுத்தி, மற்றவர்களைத் தங்கள் அணிக்கு வரவழைப்பதற்கான முயற்சி. இந்துக்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்ற முயற்சி - அனைவரையும் சமமான தளத்திற்குள் கொண்டு வருவோம் என்ற முயற்சியாக நேரிடையாக பிரச்சாரம் செய்யப்படும் கருப்பொருளாக அமைந்திருந்தால், அதை விட மிக்க மகிழ்ச்சியான செய்தி வேறெதுவும் இருக்க முடியாது.


ஆனால், அதை செய்ய அவர்கள் விரும்பவில்லை. ஏனென்றால், பல சாதிக்கூறுகளாகப் பிரிந்து கிடக்கும் இனங்களையெல்லாம் ஒன்று கூட்டி, இடைப்பட்ட தடைக்கோடுகளை அழித்தெடுக்கும் எண்ணமெல்லாம் அவர்களிடத்தில் இல்லை. அதனால், இந்துக்களை ஓரணியில் ஒன்று திரட்ட வேண்டுமென்ற முனைப்பு, அதன் உட்பிரிவின் கணங்களிலே அமிழ்ந்து முழுகிப் போய்விடும்.


இந்துக்களை ஒன்று திரட்ட, அதன் உட்பிரிவுகளின் அகோர முகத்தை ஒழிப்பதைக் காட்டிலும், இந்து மதத்திற்கு அழிவு என்ற பூச்சாண்டியை வெளியில் இருப்பவர்களைக் காட்டிச் செய்வதன் மூலம் எளிதாக முடித்து விடலாம் என்ற திடமான நம்பிக்கைக்கு வந்து விட்டனர். அதற்கான எளிய வழி - அமெரிக்காவின் பிரச்சார மாடல்கள். Rather than being an optimist and wait for the day to arrive, go the pessimist way and rummage through by the negative propaganda.


இதற்குண்டான எளிய வழி, இஸ்லாம், முஸ்லீம் மற்றும் பிற சிறுபான்மை மத, இன, மக்களின் பங்களிப்பைக் கொஞ்சம் கொஞ்சமாக மக்களின் நினைவாற்றல்களிலிருந்து அழித்தொழிப்பது, அவர்களை எதிரிகளாகச் சித்தரித்துக் காட்டுவது, அவர்கள் மீது தேச துரோக குற்றங்களைச் சாற்றுவது, பிற சமூகங்களிலிருந்து தனிமைப்படுத்துவது, கல்வி வேலை வாய்ப்பு உரிமைகளைப் பறிப்பது என்ற தொடர் தாக்குதல்கள்.


பட்டியலிட்டால் கணக்கிலடங்காமல் போகும் அளவிற்கு உண்டு. குறிப்பிட்டுச் சொல்ல ஒன்றிரண்டு. ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடிய திப்பு சுல்தானை அவர்கள் religious bigot என்ற பட்டம் சூட்டி வரலாற்றைத் திரிக்க முனைந்தது, உலக வரலாற்றிலேயே முதன்முதலாக ராக்கெட் தொழில்நுட்பம் கொண்டு ஏவுகணை ஆயுதத்தைப் பயன்படுத்தியதன் மூலம், ஒரு விஞ்ஞான அறிவுப் பாதையைத் தொடங்கி வைத்தது - இவற்றையெல்லாம் சுத்தமாக மறைத்ததைக் குறிப்பிடலாம்.


இன்று திப்பு சுல்தானுக்கு அங்கீகாரம் கொடுத்தது அமெரிக்காவின் நாசா நிறுவனம் தான். அவர்கள் அலுவலக வரவேற்பறையில் திப்பு சுல்தானின் மிகப்பெரிய ஓவியப்படம் இருக்கிறது - ராக்கெட் தொழில்நுட்பத்தைத் தொடங்கி வைத்தவர் என்பதற்கான மரியாதையின் நிமித்தம். ஆனால், இந்தியாவில் எங்காவது ஓரிடத்தில், எவராவது ஒருவர் திப்பு சுல்தானுக்கான அங்கீகாரத்தை வழங்கியதுண்டா?


ஏன் இந்தியாவின் முதல் குடிமகனாக இருந்த கலாம் அவர்கள் கூட இதை எங்கும் குறிப்பிட்டதாக எனக்குத் தெரியவில்லை. இது போலவே இந்தியாவின் வலுவான விஞ்ஞான தொழில் நுட்ப அறிவிற்கு அடிகோலிய ஐ.ஐ.டி கல்வி நிலையங்களை நிறுவியவரே ஆசாத் அவர்கள் தான் என்பதே இப்பொழுது தான் பொதுவிற்கு வருகிறது.


இதைப் பற்றியெல்லாம் பேச விரும்பாத, தேசபக்தர்கள், இத்தனை நாளும் ஜல்லியடித்துக் கொண்டிருந்தார்கள் - இஸ்லாமியத் தீவிரவாதம் என்று. ஆனால், இன்று அந்தப் பிரச்சாரமே கேள்விக்குறியாகி நிற்கின்றது. நாட்டில் வெடித்த அனைத்து வெடிகுண்டுகளும் இஸ்லாமிய குண்டுகள் மட்டும் தானா?


ஆர்.எஸ்.எஸ் குண்டுகள் அவற்றில் எத்தனையோ? தாங்களே குண்டுகளை வைத்து விட்டு, அவற்றை இஸ்லாமியர்கள் மீது வெறுப்பை அள்ளி வீசும் வகையில் பிரச்சாரம் செய்யும் உத்தியா இது? எந்த ஒரு தத்துவமும் எப்படி தன் தவறுகளின் கணத்தினாலே வீழ்ந்து விடுகிறதோ - அது போலவே, இன்று இந்துத்வா தத்துவமும் தன் தவறுகளின் கணத்திலே வீழ்ச்சியடையத் தொடங்கி விட்டது. பூச்சாண்டிகளைக் காட்டுவதன் மூலம் 'நிச்சயிக்கப்பட்ட நிலங்களை' எவராலும் அடைய முடியாது என்பதே இன்றைய நிதர்சனம்.


இன்று தீவிரவாதிகளை எந்த ஒரு மதத்திடனும் அடையாளப்படுத்தக் கூடாது என்று குரல்கள் எழுகின்றன. நன்றி. இத்தனை நாளும் நாங்கள் மட்டுமே அதற்கான போராட்டத்தை நடத்தி வந்தோம்.


இன்று பெரும்பான்மையானவர்களும் அதையே பேச ஆரம்பித்திருக்கின்றனர். தவறான அச்சுறுத்தல்களை விலக்கி விட்டு, உண்மையைப் பேசினால் மட்டுமே தீவிரவாத எதிர்ப்பு வலுவுள்ளதாக இருக்கும் என்ற புரிதல் வருவதற்கு இந்துத்வவாதிகளே காரணம் என்ற வகையில், மீண்டும் ஒரு நன்றி. இனியாவது, இஸ்லாமியர்கள் இந்தியாவிற்கு ஆற்றிய நற்பணிகளைப் பற்றி, நன்றியுடன் நம் சமூகம் பேச முன் வருமா? இந்தக் கேள்விக்கான பதிலின் மூலம் மட்டுமே, இந்து முஸ்லீம் நல்லிணக்கமும், பொதுவான நல்லிணக்கமும் சாத்தியப்படும், இந்தியாவில்.


(அபுல் கலாம் ஆசாத் அவர்களின் பிறந்த நாளைக் குறிப்பிட்டு, கட்டுரை எழுதிய நீடுர் ஆன்லைன்.காம், மற்றும் அதை பண்புடன் குழுமத்தில் மேலும் விரிவாகப் பேசிய ஆசாத், ஆசாத் அவர்களுக்கும் நன்றி. )

உங்களுக்காக எழுதியவர் - நண்பன் at 2:06 AM http://nanbanshaji.blogspot.com/
IniyaHaji Comments: Madem. Najma Hebdullah (Ex. Concress and B.J.P. - MP) is the doughter of Moulana. Abul Kalaam Azad

No comments: