Tuesday, December 15, 2009

விவேகானந்தர் பார்வையில் இஸ்லாம்

சுவாமி விவேகானந்தர் ஒரு உண்மையான ஆன்மீகவாதி. உலகின் அனைத்து மதங்களின் உன்னதங்களையும், போற்றிப் பாராட்டியவர். ஆனால் இன்று மதவெறியைக் கிளறி நாட்டை சுடுகாடாக்க முயலும் இயக்கத்தினர் தனது பிரச்சாரத்திற்கு விவேகானந்தரை பயன்படுத்திக் கொள்கிறது. இது விவேகானந்தரை இழிவுபடுத்துவது ஆகும்.



இஸ்லாம் மதம் குறித்தும், முகலாய மன்னர்களின் ஆட்சி குறித்தும் அவர்கள் பொய்மூட்டைகளை அவிழ்த்து விடுகின்றனர். ஆனால் விவேகானந்தர் இஸ்லாம் மதம் குறித்து மிக உயரிய எண்ணம் கொண்டு இருந்தார்.



''சமத்துவத்தைப் பற்றி ஏதேனும் ஒரு மதம் பாராட்டத்தக்க முறையில் சொல்லியிருந்தால் அது இஸ்லாம் மட்டுமே என்பது தான் எனது அனுபவம்.''



முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், கம்யூனிஸ்டுகள் ஆகிய மூவரும் தான் எங்கள் பிரதான எதிரிகள் என்று கூறும் அவர்கள் விவேகானந்தர் பெயரை உச்சரிக்கக் கூட தகுதியற்றவர்கள் என்பதை இதன் மூலம் உணரலாம்.



இஸ்லாமிய மன்னர்கள் இந்துக்களைச் சித்ரவதை செய்து பலவந்தமாக மதம் மாற்றினர் என்ற பொய்யை வாய் வலிக்காமல் சொல்லி வருகின்றார்கள். ஆனால் விவேகானந்தர்..,



''பாமர மக்களுக்கு இஸ்லாம் ஒரு செய்தியாக வந்தது. முதல் செய்தி சமத்தவம், ஒரே மதம் தான் உள்ளது.., அது அன்பு, வம்சம், நிறம்.. அல்லது வேறு எதுபற்றியும் எந்தக் கேள்வியும் கிடையாது'' என்று கூறினார்.



ஜாதியக் கொடுமைகளின் வெப்பம் தாங்காமல் தான் பெரும்பகுதி மக்கள் இஸ்லாமியர்களாக மதம் மாறினார்கள் என்பதை விவேகானந்தர் இதயப்பூர்வமாக ஒப்புக் கொண்டிருக்கிறார் என்பதையே இது காட்டுகின்றது.



கேரள மாநிலம் மலபார் பகுதியைச் சேர்ந்த ஏராளமாக தலித் மக்கள் இஸ்லாம் மதத்தைத் தழுவினார்கள். இதைக் கண்ட சனாதனவாதிகள் எதிர்ப்பு கிளப்பிய போது விவேகானந்தர் அவர்களுக்கு அமைதியாகப் பதில் சொன்னார்..,



மலபார் பகுதியில் நடந்தது என்ன? ஏழை, எளிய தாழ்த்தப்பட்டவர்கள் உயர் ஜாதி இந்துக்கள் வசிக்கும் தெருக்களின் வழியாக நடக்கக் கூட முடியவில்லை. அவர்களது வீடுகள் அகதிகள் முகாம்களைப் போல ஊரிலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் கோயில்களுக்குள் அனுமதிக்கப்படுவதில்லை. அவர்கள் விழுந்தால் கூட நீங்கள் கவலைப்பட மாட்டீர்கள். இவ்வளவுக்கும் காரணம் உங்களது கேடுகெட்ட ஜாதி முறைதான். அவர்கள் கிறிஸ்தவ மதத்தில் சேர்ந்து ஒரு ஆங்கிலப் பெயரைச் சூட்டிக் கொண்டாலோ அல்லது இஸ்லாத்தைத் தழுவி ஒரு முஸ்லிம் பெயரைச் சூட்டிக் கொண்டாலோ அவர்களுக்குப் புதிய மரியாதை கிடைக்கிறது. நிலமை இப்படி இருக்கும் போது, நீங்கள் எதிர்த்துப் போராட வேண்டியது உங்கள் மதத்தினுடைய பழமையான பழக்க வழக்கங்களையும், ஜாதி முறையையும் தானே தவிர நிச்சயமாக முஸ்லிம்களை எதிர்த்து அல்ல.''



இதுவல்லவா தெளிவான சிந்தனை! தீர்க்கமான அறிவு..! நோயின் மூலத்தைக் கண்டறிந்து அதற்கு சிகிச்சை செய்ய வேண்டும் என்று விரும்பியவர் சுவாமி விவேகானந்தர், அவர் மேலும் பேசுகிறார் ..



''இந்தியாவை முகமதியர்கள் வென்றது ஏழை எளியவர்களுக்கு ஒரு விடுதலை வாய்ப்பாக அமைந்தது. எனவே தான் நமது மக்களின் ஐந்தில் ஒரு பகுதியினர் முகமதியர்களானார்கள்'' இன்றுள்ள நிலைகளுக்கு விவேகானந்தர் அன்றைக்கே அளித்துள்ள தெளிவான விடை இது.



இந்துக்கள் புத்தமதத்திற்கு மாறியதற்கும் அடிப்படைக் காரணம் ஜாதிய ஒடுக்குமுறைதான் என்பதையும் விவேகானந்தர் தெளிவாக கூறியுள்ளார். அவர் கேட்கிறார்..



''புத்தப் புரட்சி இல்லாமல் செல்வாக்கு மிகுந்த மேல் ஜாதியினரின் கொடுங்கோன்மையிலிருந்து அவதிக்குள்ளாயிருக்கும் லட்சக் கணக்கான கீழ்ஜாதி மக்களுக்கு வேறு எது விடுதலை அளித்திருக்கும்.''



என்று விவேகானந்தர் வினா தொடுத்தார். ஜாதியக் கொடுமையின் காரணமாக இந்திய அரசியல் சாசனத்தின் சிற்பி பாபா சாகேப் அம்பேத்கரே பின்னாளில் தனது ஆதரவாளர்களுடன் புத்த மதத்தை தழுவினார் என்பது மனங் கொள்ளத்தக்கது.



பசுக்கள் புனிதமானது. ஆனால் இஸ்லாமியர்கள் பசு மாமிசத்தைப் புசிக்கிறார்கள். எனவே அவர்கள் நமது எதிரிகள் என்று கூறினர். அரியானா மாநிலத்தில் இறந்து போன பசுமாட்டின் தோலை உரித்ததற்காக ஐந்து தலித்துக்கள் அடித்துக் கொல்லப்பட்ட கொடுமை நடந்தேறியுள்ளது. ''இறந்து போன பசுமாடு, உயிருள்ள தலித்துகளை விட புனிதமானது..?'' என்று கூறுகிறார் ஒருவர்! ஆனால் விவேகானந்தர் பார்வை வித்தியாசமானது.



ஒருமுறை பசுபாதுகாப்பு சங்கத்தைச் சேர்ந்தவர்கள் சுவாமி விவேகானந்தரைச் சந்திக்க வந்தார்கள். இந்து மதத்தின் புனித சின்னமான பசுக்களை பாதுகாக்க உங்களால் இயன்ற நன்கொடையைத் தாருங்கள்..! என்று வந்தவர்கள் கேட்டார்கள்.



அப்பொழுது நாட்டின் பல பகுதிகளில் பஞ்சம் தலைவிரித்தாடியது. மக்கள் பட்டினியால் சுருண்டு விடுந்து செத்துக் கொண்டிருந்தார்கள். சுவாமிஜி வந்தவர்களைப் பார்த்துக் கேட்டார். 'பட்டினியால் சாகும் மனிதர்களைக் காப்பாற்ற நீங்கள் ஏதாவது செய்வீர்களா?



வந்தவர்கள் பதில் சொல்லும் போது ''மனிதர்கள் பட்டினியால் சாவது அவர்களது கர்மப்பலன். அவர்களை நாங்கள் காப்பாற்ற முடியாது, பசுக்களைக் காப்பாற்றுவது தான் எங்கள் கடமை'' என்றார்கள்.



வெகுண்டெழுந்த விவேகானந்தர் அவர்களைப் பார்த்துச் சொன்னார். ''மனிதர்கள் பட்டினியால் சாவது அவர்களது கர்மப் பலன் என்றால், பசுக்கள் சாவதும் அதன் கர்மப்பலனாகத் தான் இருக்க வேண்டும். மனிதர்களைப் பற்றிக் கவலைப்படாத உங்களுக்கு பசுக்களைப் பற்றிப் பேச என்ன உரிமை இருக்கிறது'' என்று கூறி அவர்களைத் திருப்பி அனுப்பி விட்டார்.



அமெரிக்காவில் நடந்த உலக சமய மாநாட்டில் 'சகோதரர், சகோதரிகளே..!'' என்று அவர் அழைத்தது வெறும் உதட்டு வார்த்தை அல்ல. உள்ளத்தில் இருந்து வந்த உண்மை வார்த்தை ஆகும்.



இந்தியா இந்துக்களுக்கு மட்டுமே சொந்தமான நாடு, சிறுபான்மை மக்கள் அவர்களுக்கு அடங்கி நடத்த வேண்டும் அல்லது நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று சிலர் கூறுகின்றனர்.



ஆனால் விவேகானந்தரின் ஆன்ம உள்ளம் கண்ட கனவு வேறு.



''என்னுடைய மனக்கண்ணில் எதிர்காலம் குற்றம் குறையற்ற முழுமையானதாக இருக்கும். கஷ்டங்கள் மற்றும் குழப்பங்களிலிருந்து மீண்டு விடும். வேதாந்த மூளையும் இஸ்லாமிய உடலும் கொண்ட ஒளிமயமான, யாராலும் அடக்க முடியாத இந்தியாவாகத் திகழும்.''



இந்தியா என்ற மதச்சார்பற்ற நாடு அனைத்து மதங்களையும் பண்பாட்டையும், இனங்களையும், மொழிகளையும் கொண்ட பல வண்ண மலர்த்தோட்டமாக இருக்க வேண்டும் என்பதே விவேகானந்தரின் கனா..!



விவேகானந்தரைப் பொறுத்தவரை இஸ்லாம் என்ற மார்க்கம் சமத்துவம் மற்றும் அன்பு மயமானது. அது ஆக்கிரமிப்பு மதம் அல்ல

பதிந்தது நேசமுடன் இஸ்லாம்.






நன்றி : மதுக்கூர் இராமலிங்கம்

Monday, December 7, 2009

வ.களத்தூர்-கவிதை!‏


பாரில் சிறந்த ஊரோ...


காணும்

ஊரில் சிறந்த ஊரோ

நானறியேன்!



எங்கும் எழில் மிகு

எமதூர்...

அன்பைப் பருக தரும்

அமுதூர்!



அருகில் அழகாய்

பூத்திருக்கும்

சிற்றூர்களுக்கெல்லாம்

விழுதூர்!



இது

கல்லாறு பாயும்

நந்தவனம்..!

கார்மேகம் கலைப்பாறும்

பூங்காவனம்..!



கட்சிகள் தொடுத்தும்

கழகங்கள் புரிந்தும்

நல

சங்கங்கள் அமைத்தும்

சேவையே எமக்கு இலக்கு!



மக்களின்

மண நிறைவைச் சொல்லும்

முகப் பொலிவை...

கண்டால் விளங்கும்

புதிதாய் எதற்கு விளக்கு..!



தென்திசை ஏரியின்

தெவிட்டா தென்றலும்,

வடதிசை ஆற்றின்

வாஞ்சை மிகு காற்றும்

நன்செய் புன்செய்களின்

நாற்திசை வசந்தமுமாய்...



அழகு மிளிர

எழிலுக்கு இங்கு

பஞ்சமில்லை..

எவர் மனதிலும் இங்கு

நஞ்சுமில்லை...!



கோவில்கள்

மசூதிகள்

சர்சுக்கள்- என

காண

திக்கும் திசையும் தெரியும்.

இங்கு...

மதங்களில்லை

’மனிதங்கள்’ விதைக்க

இவைகள்

‘அறநிலை ஆலயம்’

என்பது

அறிதலால் மட்டுமே புரியும்!



பேருந்து காத்து

கையில் பையோடு

தேரின் நிழலில்

அப்துல்லா...



ரேசன் வாங்க

மிதிவண்டி நிறுத்தி

மசூதி மினாரா நிழலில்

பீட்டர்...



மருத்துவமணையில்

மருத்துவர் வரும் வரை

சர்சில் ஓய்வு கொள்ளும்

ராமாயி...



நிழல் தந்தும்

நிழல் பெற்றும்

நல்லிணக்கம் ஒன்றே

எங்களின்

பேரியக்கம்!

மதம் கடந்த

”ஒற்றுமையே

எங்களின் வலிமை!”



ஊரின் பசுமை கண்டு

பறந்து வந்த

பைங்கிளிகள்

இங்கே கூடு கொள்ளும்

போவதில்லை...

தொழில் தேடி வந்தவர்கள்

எவரும்

ஊரின் வளம் கண்டு

நலம் கண்டு

குலம் கொள்வர்...

‘வந்தாரை வாழ வைக்கும்

வ.களத்தூர்’-எனும்

முத்தான முது மொழிக்கு

இன்றளவும்

சத்தான சான்று பல!



கல்வி

கலாசாரம்

நாகரிகம்

நற்பன்பு

நல்லொழுக்கம் யாவிலும்

நாங்கள்

முதன்மை!

எமதூரே- எம்

மாவட்டத்தின் பெருமை!





வாழ்க்கையை கற்றுத் தரும்

வாழ்வியல் கல்லூரி

எமதூர்...

ஊரோ புகழ் உள்ளவரை!

புகழோ உலகம் உள்ளவரை!




இவேலை...

இறைவனுக்கு நன்றி கூறி

இன்புறுவோம்!





வசந்தவாசல்

அ.சலீம் பாஷா-துபாய்.

Sunday, December 6, 2009

இந்தியாவின் மிகப் பெரிய அரசியல் கட்சி காங்கிரஸ் !!!!!! ??????????????


இந்தியாவின் மிகப் பெரிய அரசியல் கட்சியான காங்கிரஸ், தனது 125வது வயதில் இம்மாதம் அடியெடுத்து வைக்கிறது. அதன் தலைவர் சோனியா தனது 64வது பிறந்தநாளையும் வரும் 9ம் தேதி கொண்டாடுகிறார். பிரிட்டிஷாரிடமிருந்து இந்தியா விடுதலை பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டது தான் காங்கிரஸ். ஏ.ஓ.ஹ்யூம் என்ற வெள்ளையரால் இந்தக் கட்சி துவக்கப்பட்டது.




பாரம்பரியம் கொண்ட இக்கட்சியின் நீண்டகாலத் தலைவர் என்று பெயர் எடுத்தவர், பிரதமர் பதவிக்குத் தன் பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டும் அதை நிராகரித்தவர் என்ற பெருமை சோனியாவுக்கு உண்டு. தனி ஆட்சி என்ற காங்கிரஸ் கொள்கையை கூட்டணித் தத்துவத்திற்கு மாற்றிய முதல் தலைவரும் கூட.காங்கிரசில் அன்னிபெசன்ட் அம்மையார், நெல்லே சென் குப்தா போன்ற வெளிநாட்டுப் பெண்மணிகள் தலைவராக இருந்தது விடுதலைக்கு முன்னர். இத்தாலியில் பிறந்து இந்தியாவில் வாழ்க்கைப்பட்ட ஒரு பெண்மணி, இந்நாட்டின் மிகப் பெரிய கட்சிக்குத் தலைவரானது விடுதலைக்குப் பின்னர் நடந்த வரலாறு.








நேரு குடும்பத்தில் மோதிலால், ஜவகர்லால், இந்திரா, ராஜிவ் இவர்களுக்குப் பிறகு ஐந்தாவது நபராகத் தலைவராகியிருக்கிறார் சோனியா. அவரைத் தொடர்ந்து அவர் மகன் ராகுல், வருங்காலத் தலைவராக அடையாளம் காட்டப்படுகிறார்.சீதாராம் கேசரிக்குப் பிறகு, நிலைகுலைந்து போன கட்சியை தூக்கி நிறுத்திய பெருமை சோனியாவுக்கு உண்டு. ஒரு வெளிநாட்டவர் கட்சித் தலைவராவதற்கு எதிர்ப்பு தெரிவித்த சரத்பவார், சங்மா, தாரிக் அன்வர் போன்ற மூத்த தலைவர்களின் அதிருப்தியையும் மீறி கட்சிக்கு தலைமை வகித்து, வலுவூட்டினார். கட்சியின் அனைத்து எம்.பி.,க்களும் தன்னையே பிரதமர் பதவிக்கு தேர்ந்தெடுத்தபோதும், அப்பதவியை, பொருளாதார மேதை மன்மோகன் சிங்குக்கு விட்டுக் கொடுத்தார்.



அலுவலகம் மாற்றம்: காங்கிரஸ் அலுவலகம் தற்போது அக்பர் சாலையில் அமைந்துள்ளது. இந்த சாலையில் எண் 24ல் அமைந்த கட்டடம், முன், 1977ல் மூப்பனாருக்கு ஒதுக்கப்பட்ட வீடாகும், அவர் அந்த வீட்டை கட்சிக்கு தந்தார்.மேலும், டில்லியில் பிரிட்டிஷார் கட்டடக்கலையை மாற்றி புதிய பாணி கட்டடம் கூடாது என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருப்பதால், தற்போது கட்சி அலுவலகம் தீனதயாள் மார்க் என்ற சாலையில் அமைகிறது. ஜனசங்கத்தின் கொள்கை யை உருவாக்கிய தலைவர் தீனதயாள் உபாத்யாய பெயரில், சாலை அமைந்துள்ளது.ஜனசங்கம், பா.ஜ., சம்பந்தப்பட்ட பெயருடன் கட்சித் தலைமையகம் அமைவதை காங்., விரும்பவில்லை. இதை விரும்பாத அக்கட்சி, விரைவில் தனது அலுவலகத்தின் வாசலை, கொட்லா ரோடு உள்ள பகுதிக்கு மாற்ற முடிவு செய்திருக்கிறது.







இந்நிலையில், தற்போதைய அலுவலகத்தில் போதுமான இட வசதி இல்லாத காரணத்தால், நவீன வசதிகள் மற்றும் பரந்த இடவசதியுடன் கூடிய புதிய அலுவலகத்துக்கு டிச., 28ம் தேதி சோனியா அடிக்கல் நாட்ட இருக்கிறார்.ஓராண்டுக்குள் அமைய உள்ள கட்சித் தலைமையகம் நவீன தகவல் தொடர்பு வசதிகள், நிருபர்கள் சந்திப்பிற்கான அறை என்று எல்லா வசதிகளையும் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.

Friday, December 4, 2009

லெபனான் : இன்று ஒத்திகை, நாளை போரிடு!!!


லெபனான் : இன்று ஒத்திகை, நாளை போரிடு!!!

மீண்டும் உள்நாட்டுப்போரை நோக்கி நகர்கிறது லெபனான். மீண்டும் இஸ்ரேல், சிரியா, ஈரான், சவூதி அரேபிய, பிரான்ஸ், அமெரிக்கா ஆகிய பல அந்நிய சக்திகள் மத்தியகிழக்கின் வாசலான லெபனான் விவகாரங்களில் தலையிடுகின்றன. இருப்பினும் உள்நாட்டில் போராடும் சக்திகளின் அரசியல் சித்தாந்தம் மட்டும் எழுபதுகளில் இருந்தது போன்றில்லாமல் மாறியிருக்கிறது. அப்போது முஸ்லிம்கள்- கிறிஸ்தவர்கள், பாசிஸ்டுகள்-சோசலிஸ்டுகள், என்று பிரிந்து சண்டையிட்ட காலம் அல்ல இது. இஸ்ரேலின் அதி நவீன இராணுவத்துடன் போரிட்டு வென்ற ஹிஸ்புல்லா(கடவுளின் கட்சி) என்ற விடுதலைப்படை, தற்போது லெபனான் அரசாங்கத்திற்கெதிராக தனது துப்பாக்கிகளை திருப்பியுள்ளது.



லெபனான் ஒரு சிறிய தேசமாயினும், பல்வேறு மதப்பிரிவினரை கொண்டுள்ளது. முஸ்லிம்களில் சுன்னி/ஷியா பிரிவினர்கள், தனித்துவமான டுரூசியர்கள், மறோனிய கிறிஸ்தவர்கள் போன்ற பல பிரிவுகள் நீண்ட காலமாக தமக்குள் ஒற்றுமையிலாமல் பிரிந்திருப்பதை, அந்நிய சகதிகள் தமக்கு சாதகமாக பயன்படுத்துகின்றன. அதேநேரம் லெபனான் அரசியல்நிர்ணய சட்டம், அனைத்து பிரிவினரும் பங்குபற்றும் ஜனநாயகத்தை கொண்டுள்ளது. இந்த சிக்கல் தற்போது முறுகிவரும் உள்நாட்டு போருக்கு காரணம்.



2006 ம் ஆண்டு இஸ்ரேலிய படையெடுப்பின் போது, கண்மூடித்தனமாக குண்டு வீசியும் ஹிஸ்புல்லா இயக்கத்தை அழிக்க முடியவில்லை. மேலும் அதுவே(ஹிஸ்புல்லாவின் அழிவு) அமெரிக்காவின் நோக்கமாகவும் இருந்தது. சர்வதேச கண்டனம் காரணமாக இஸ்ரேலிய படைகள் பின்வாங்கவே, ஹிஸ்புல்லாவை ஓரங்கட்ட வேறொரு வியூகம் வகுத்தது அமெரிக்கா. பொதுத்தேர்தலில் மேற்குலக சார்பு அரசியல் கட்சிகள் பெரும்பான்மை வெற்றி பெறும் என்று எதிர்பார்த்தது. தனக்கு சார்பான சாட் ஹரீரியின் கட்சி வெற்றி பெற பாடுபட்டது. லெபனானில் பணக்காரர்களும், வசதியான மத்தியதர வர்க்கத்தினரும் அனேகமாக சுன்னி முஸ்லீம் பிரிவை சேர்ந்தவர்கள். அந்த பிரிவை சேர்ந்த கோடீஸ்வரரான முன்னாள் பிரதமர் ஹரீரி குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டதை அடுத்து, அவரது வாரிசு சாட் தலைவரானார். இவருக்கு பக்கபலமாக லெபனான் முதலாளிகள், பணக்காரர்கள் மட்டுமல்ல சவூதி அரேபியா, அமெரிக்காவும் ஆதரவு கொடுத்தனர். அவர்கள் எல்லோரும் "சிரியாவின் ஆதிக்கத்திற்கு" எதிராக அணி திரண்டனர். மறுபக்கத்தில் கீழ் மத்தியதர மற்றும் அடித்தட்டு மக்கள் ஷியா மதப்பிரிவை சேர்ந்தவர்களாக இருப்பதும், அவர்களை ஹிஸ்புல்லா, அமால், ஆகிய கட்சிகள் பிரதிநிதித்துவ படுத்துவதும், அவர்களுக்கு தொடரும் சிரியாவின் ஆதரவும் பலமான எதிர் சக்திகளாக இருந்தன. கடந்த தேர்தலில் யாரும் பெரும்பான்மை வாக்கு பலத்தை பெறவில்லை. இருப்பினும் ஓரளவு பெரும்பான்மையுடன் ஒரு கூட்டரசாங்கம், சாட் ஹரீரி தலைமையில் மேற்குலக சார்பு மந்திரிசபை, ஷியா கட்சிகளின் தயவிலேயே தப்பி பிழைத்தது. இந்த அரசியல் சிக்கல் யாரை ஜனாதிபதியாக்குவது என்ற சர்ச்சையில் கொண்டுவந்து விட்டது. மேற்குலக சார்பு ஜனாதிபதியா, அல்லது சிரியா சார்பு ஜனாதிபதியா? என்ற பிரச்சினைக்கு முடிவு காண முடியாது 17 மாத காலமாக இழுபட்டது.



அமெரிக்காவின் முழு நோக்கமும், லெபனானில் தனக்கு சார்பான ஒரு பலமான அரசாங்கம் உருவாகி, அது ஹிச்புல்லாவை நிராயுதபாணியாக்க வேண்டும். அதாவது இஸ்ரேல் ஆயிரக்கணக்கான குண்டுகளை வீசி சாதிக்க முடியாததை, லெபனானின் நோஞ்சான் அரசாங்கம் செய்து காட்ட வேண்டும் என்று மனப்பால் குடித்தது. அப்படி அரசாங்கம் அதை செய்ய தவறினால், வகுப்புவாத பிரிவினையை தூண்டி விட்டு, உள்நாட்டு போர்(அல்லது கலவரங்கள்?) மூலம் அரசியல் வரைபடத்தை மாற்றுவது தான் தற்போது உள்ள திட்டம். ஒரு பக்கம் ஹிஸ்புல்லா இன்னமும் ஆயுதங்கள் வைத்திருக்கிறது என்று கொக்கரித்துக் கொண்டே, சுன்னி முஸ்லீம் தீவிரவாதிகளுக்கு இரகசியமாக ஆயுதங்கள் வழங்கப்பட்டன. "எமது நண்பர்கள் ஆயுதங்கள் வைத்திருக்க உரிமை உண்டு. எதிரிகளுக்கு அந்த உரிமை கிடையாது." என்பது அமெரிக்கா அடிக்கடி கூறும் நியாயம்.



மே மாதம் ஏழாம் திகதி நடந்த போது வேலை நிறுத்தம், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு எதிராக நடந்தது. அதற்கு ஆதரவளித்த ஹிஸ்புல்லா தலைநகர் பெய்ரூட் செல்லும் சாலைகளை மறித்து தடைகள் போட்டது. அதற்கு ஒரு சில நாட்களிற்கு முன்னர் தான் லெபனான் அரசாங்கம் ஹிஸ்புள்ளாவின் தொலைபேசி இணைப்புகளை செயலிழக்க வைக்க முடிவு செய்திருந்தது. ஹிஸ்புல்லா தனது இயக்கத்தின் தனிப்பட்ட தொடர்புக்கு பிரத்தியேகமான தொலைபேசி இணைப்பை கொண்டிருப்பது புதிதல்ல. ஆனால் அது துண்டிக்கப்பட்டால் அந்த இயக்கத்தின் இரகசிய செயற்பாடுகளை கண்டுபிடிப்பது, மற்றும் தலைவர்களின் மறைவிடங்களை அறிவது இலகுவாகி விடும். இப்படியே போனால் தமது ஆயுதங்களும் விரைவில் களையப்படும் என்பதால் விழித்துக்கொண்ட ஹிஸ்புல்லா, அரசாங்கத்தின் முடிவானது, தம்மீதான போர் பிரகடனம் என்று அறிவித்தது.



"யார் எம்மை கைது செய்ய வருகிறார்களோ, அவர்களை நாம் கைது செய்வோம். யார் எம் மீது சுடுகிறார்களோ அவர்கள் மீது நாம் சுடுவோம்." இவ்வாறு மறைவிடத்தில் இருந்து கொண்டு ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லா உரையாற்றிய பின்னர், ஹிஸ்புல்லா உறுப்பினர்கள் ஆயுதபாணிகளாக தலைநகரில் நடமாடினர். அவர்கள் ஒரு சில மணிநேரங்களிலேயே பெய்ரூட் நகரத்தை மட்டுமல்லாது, விமான நிலையத்தையும் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். மேற்குலக சார்பு அரசியல் தலைவர் சாட் ஹரீரியின் வீடு ஆர்.பி.ஜி. ஷெல் வீச்சுக்கு இலக்கானது. அவர் குடும்ப சொத்தான தொலைக்காட்சி நிலையமும், பத்திரிகை அலுவலகமும் தீக்கிரையாக்கப் பட்டன. பிரதமர், மந்திரிகள், அதாவது முழு அரசாங்கம், பலத்த பாதுகாப்புடன் கூடிய மாளிகை ஒன்றில் தம்மை தாமே சிறை வைத்துக் கொண்டனர். தேசிய இராணுவம் பிரச்சினையில் தலையிடாமல் ஒதுங்கிக் கொண்டது. அதற்கு காரணம், இராணுவத்தில் பெரும்பான்மையாக உள்ள ஷியா வீரர்கள் ஹிஸ்புல்லா அனுதாபிகளாக இருப்பதால், எந்தவொரு எதிர் நடவடிக்கையும் தேசிய இராணுவத்தை சீர்குலைப்பதில் போய் முடியும்.



இரண்டு நாட்கள் மட்டுமே தமது பலத்தை காட்டிய ஹிஸ்புல்லா உறுப்பினர்கள் வந்த சுவடு தெரியாமல் மறைந்தனர். நடந்த சம்வங்களைவைத்து பார்க்கும் போது, ஹிஸ்புல்லா ஒரு சதிப்புரட்சிக்கு முயன்றதாக தெரியவில்லை. இனி வரப்போகும் போருக்கு ஒத்திகை பார்த்ததாகவே தெரிகின்றது. லெபனான் அரசாங்கம், ஆப்பிளுத்த குரங்கு போல மாட்டிக்கொண்டு முழிக்கிறது. தனது அவமானகரமான தோல்வியை ஒத்துக் கொண்டு, பேசி தீர்ப்போமே என்று இறங்கி வந்துள்ளது. தொலைபேசி இணைப்பை துண்டிக்கும் முடிவை மாற்றி கொள்வதாக கெஞ்சியுள்ளது. அமெரிக்கா உட்பட மேற்குலக நாடுகளின் முகத்திலும் அசடு வழிந்ததால், ஊடகங்கள் இந்த செய்திக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. நிலைமை தாம் எதிர்பார்த்ததுக்கு மாறாக போய் விட்டதால், அவசர அவசரமாக ஐ.நா. பாதுகாப்பு சபையை கூட்டி பிரச்சினைக்கு சுமுகமான முடிவு காணும் படி வற்புறுத்தப்பட்டது.



தற்போது சூடு தணிந்து விட்டாலும், வெகுவிரைவில் உள்நாட்டு போர் உருவாகும் சாத்தியகூறுகள் உள்ளன. ஏற்கனவே ஹிஸ்புல்லா தன்னை போருக்கு தயார்படுத்தி வந்துள்ளது. பல கிராமங்களில் ஆயிரக்கணக்கான இளம் ஆண்கள் மாயமாக மறைகின்றனர். அவர்கள் சிரியா அல்லது ஈரானுக்கு இராணுவ பயிற்சிக்கு அழைத்து செல்லப்படுவதாக ஊர்மக்கள் பேசிக்கொள்கின்றனர்.
 
 
லெபனான் : இது ஹிஸ்புல்லா தேசம்





லெபனான், பெய்ரூத். அமெரிக்கக் கடற்படைத் தலைமையகம். 23 ஒக்டோபர் 1983, அதிகாலை ஆறு மணி இருபது நிமிடங்கள். தலைமைக்கட்டட வாயிலை நோக்கி மிக வேகமாக வந்துகொண்டிருந்தது ஓரு கனரக வாகனம். ஓட்டி வந்த சாரதியின் முகத்தில் புன்னகை. கட்டடத்தை வாகனம் மோதியதும் பெருத்த வெடியோசையால் நகரமே அதிர்ந்தது. உறுதியான நான்கு மாடிக்கட்டடம் சிலநொடிகளிலேயே தரைமட்டமாகியது.

மொத்தம் 240 அமெரிக்கக் கடற்படை வீரர்கள் அந்தத் தற்கொலைக் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் பலியாகினர். ஆறாயிரம் கிலோ வெடிமருந்துப் பொருட்கள் பாவிக்கப்பட்டிருக்கலாமென புலனாய்வுத் தகவல்கள் தெரிவித்தன. இது நடந்த அடுத்த சில நிமிடங்களில் இன்னொரு வாகனம் பிரஞ்சுத் துருப்புகள் தங்கியிருந்த கட்டடத்தில் மோதி வெடித்ததில் 58 பிரஞ்சு படை வீரர்கள் கொல்லப்பட்டனர்.





பிரான்ஸ் லெபனானின் முன்னாள் காலணியாதிக்க எஜமான். தள்ளாடிக்கொண்டிருந்த லெபனானுக்கு அமெரிக்கா உதவி செய்ய முன்வந்தது. இவ்விரண்டு நாடுகளுமே லெபனானின் உள்நாட்டு விடயத்தில் தலையிட்டு வாங்கிக் கட்டிக்கொண்டன. மிகவும் கவனமாகத் திட்டமிட்டு பாரிய விளைவுகளை உண்டாக்கிய அந்தத் தாக்குதலை நடாத்தியது "ஹிஸ்புல்லா" என்ற அதுவரை அறியப்படாதிருந்த ஒரு இயக்கம். ஹிஸ்புல்லா ( தமிழில்: அல்லாவின் கட்சி) லெபனான் ஷியா முஸ்லிம் இனத்தைப் பிரதிநிதிப்படுத்தியது. அந்த மக்களின் காவலனாக இன்றுவரை காட்டிக் கொள்கிறது.





மத்திய கிழக்கில் சிலுவைப் போரின் தழும்புகளைக் கொண்டுள்ள நாடுகளில் லெபனானும் ஒன்று. காலனித்துவக் காலகட்டத்தில் ஆக்கிரமித்த பிரான்ஸினால், பிரித்தாளும் நோக்கில் சிரியாவில் இருந்து பிரிக்கப்பட்டு உருவாகியதுதான் இந்த லெபனான் நாடு. லெபனானில் "மரோணியக் கிறிஸ்தவர்கள்" (கிறிஸ்தவ மதத்தின ஒரு பிரிவு) கணிசமான தொகையியல் வாழ்கின்றனர். உறுதியான கணக்கெடுப்பு இல்லாத போதும், மொத்தச் சனத்தொகையில் இவர்கள் நாற்பது அல்லது ஐம்பது வீதமானவர்கள் என்பது பரவலான கருத்து. இனரீதியாக அரபுக்களேயாயினும், காலனித்துவ விசுவாசத்தால் தம்மைப் அவர்கள் பிரஞ்சுக்காரர்களாகவும் கருதுவதுண்டு. இதனால், லெபனானுக்குச் சுதந்திரம் வழங்கப்பட்டபோது அவர்களின் கைகளில் அரச பொறுப்பை வழங்கிய பின்னரே பிரான்ஸ் விலகிக்கொண்டது.





வெகுவிரைவிலேயே சிறுபான்மை இனங்களாகக் கருதப்பட்ட (சரியான கணக்கெடுப்பு நடாத்தப்படவில்லை) "ஷியா" முஸ்லீம்களும், "டுரூசியர்"களும் (இஸ்லாமின் ஒரு பிரிவு. இருப்பினும் தம்மைத் தனியான மத-இனமாகக் கருதுபவர்கள்) தமக்கு அரசாங்கத்தில் அங்கம் இல்லை என்பதையுணர்ந்தனர். முரண்பாடுகள் போராக வெடித்தன. ஒவ்வொரு சமுகமும் தமக்கென ஆயுதபாணிக் குழுக்களை ஏற்படுத்திச் சண்டையிட்டன. ஆரம்பத்தில் இக்குழுக்களிடையே சித்தாந்த ரீதியான வேறுபாடேயிருந்தது. மரோணியக் கிறிஸ்தவரின் ஆயுதக்குழு பாஸிசப் பிற்போக்கு அரசியலைக் கொண்டிருந்தது. மாறாக, ஷியா, டுரூசியரின் ஆயுதக்குழுக்கள் முற்போக்கானவையாக சோஸலிசத்தை முன்மொழிந்தன. பத்தாண்டுகளாக நடைபெற்ற யுத்தம் எந்தவகையான முடிவையும் தராதநிலையில், கம்யூனிச எதிர்ப்புப் போர்வையில் அமெரிக்க இராணுவம் வந்திறங்கியமை நிலைமையை மேலும் மோசமடைய வைத்தது. சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி பாலஸ்தீன விடுதலை இயக்கங்களை அடக்கப்போகிறோம் எனும் போர்வையில் இஸ்ரேலியப் படையெடுப்பும் தலைநகர் பெய்றூத் வரைமுன்நகர்ந்தது. பின்னர், பின்வாங்கி தென் லெபனானை ஆக்கிரமிப்பில் வைத்துக்கொண்டது. இத்தகைய சூழலில்தான் முன்பு குறிப்பிட்ட அமெரிக்கக் கடற்படை முகாம்மீதான தற்கொலைத் தாக்கல் இடம்பெற்றது.





லெபனானின் உள்நாட்டுப் போரில் தலையிட்டு கையைச் சுட்டுக்கொண்ட அமெரிக்க இராணுவம் தாயகம் திரும்பியது. சமாதானம் வராது என்றிருந்த நிலையில் சிரியப்படைகள் லெபனானுக்குள் பிரவேசித்தன. லெபனானின் பல பகுதிகளைத் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்த சிரியா போராடும் குழுக்களை அழைத்துப் பேச்சுவார்த்தை நடாத்தியது. முடிவில் சிரியாவின் மத்தியஸ்தத்தில் அல்லது தலைமையில் எல்லாச் சமுகங்களுக்கும் சமவாய்ப்பு வழங்கப்பட்டு புதிய அரசு அமைக்கப்பட்டு சமாதானம் கொண்டுவரப்பட்டது. இன்றுவரை ஆயுதம் தாங்க அனுமதிக்கப்பட்டிருக்கும் போராளிக் குழுவான ஹிஸ்புல்லா உறுப்பினர்கள்கூட பாராளுமன்றத்திற்குத் தெரிவாகியுள்ளனர்.





யாரிந்த ஹிஸ்புல்லா இயக்கத்தினர்? அமெரிக்கா, இஸ்ரவேலைப் பொறுத்தவரையில் இவர்கள் பயங்கரவாதிகள். அதுமட்டுமல்லாது, அமெரிக்காவின் பயங்கரவாதிகள் பட்டியலில் இவர்களின் பெயரும் அடங்கியுள்ளது. ஆனால் லெபனான் மக்களைப் பொறுத்தவரையிலும் இவர்கள் விடுதலைப் போராளிகளாகவே கருதப்படுகின்றனர். லெபனானில் நடந்த ஒவ்வொரு இஸ்ரேலிய இராணுவ அடக்குமுறையின்போதும் ஹிஸ்புல்லா மீதான அனுதாப அலைகள் ஒங்கியெழுந்தன. கடந்த இருபது வருடங்களாக லெபனானின் தென்பகுதி இஸ்ரேலிய ஆக்கிரமிப்பின் கீழ் இருந்தும், அப்பகுதிகளில் இராணுவ நிலைகள்மீதான ஹிஸ்புல்லா போராளிகளின் கெரில்லாத் தாக்குதல்கள் அதிகரித்ததால், இறுதியில் தாக்குப்பிடிக்க முடியாத நிலையில் இஸ்ரேலிய இராணுவம் பின்வாங்கியது உலகறிந்த விடயம். தற்கால உலகின் வெற்றிகரமான கொரில்லா இயக்கங்களாகக் கருதப்படுபவைகளில் ஹிஸ்புல்லாவும் ஒன்று.





இஸ்ரேலிய இராணுவம் வெளியேறியதும் அந்தப்பகுதிகளை ஹிஸ்புல்லா தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது. தென்லெபனான் தெருக்களில் ஆயுதமேந்திய போராளிகளின் நடமாட்டம், காணுமிடமெல்லாம் ஹிஸ்புல்லா என்ற பெயரில் துப்பாக்கி தூக்கும் கரத்தின் படத்தைக் கொண்ட மஞ்சள் வர்ணக்கொடிகள், நகர வீதிகளில் முக்கிய சந்திகளில் மரணித்த போராளிகளின் உருவப்படங்கள், எதிரிகளால் குண்டுவைத்துக் கொல்லப்பட்ட ஹிஸ்புல்லாவை உருவாக்கிய தலைவர் நஸ்ரல்லாவின் ஆளுயரக் "கட் அவுட்" டுகள், தேனீர்க் கடைகளில்கூட ஒலிக்கும் இயக்கப்பாடல்கள், பொது இடங்களில் சட்டம்-ஓழுங்கை பராமரிக்கும் சீருடையணிந்த ஹிஸ்புல்லா பொலிஸ்... இவையெல்லாம், தென்லெபனானை, இது லெபனானல்ல ஹிஸ்புல்லா தேசமெனக் கூறவைக்கும்.






இவற்றைவிடத் தமக்கெனத் தனியான வானொலி, தொலைக்காட்சிச் சேவைகளை நடாத்தி வருவதுடன் இலவச மருத்துவ மனைகள், பாடசாலைகள் என்பனவற்றையும் பராமரித்து வருகின்றனர் ஹிஸ்புல்லாக்கள். இவ்வியக்கத்தை உருவாக்கியவர்கள் மதத்தலைவர்கள் எனுங்காரணத்தால் ஆரம்ப காலங்களில் தமது கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் வாழும் மக்கள் இஸ்லாமிய மத அடிப்படையிலமைந்த கலாச்சாரத்தைப் பின்பற்றுமாறு வலியுத்தப்பட்டனர். ஆனால், பெரும்பாலும் சுதந்திரப் போக்குடைய லெபனானிலிருந்து ஆதரவு கிடைக்காததால் இந்நிலையை அவர்கள் தளர்த்த வேண்டியவர்களாகினர். அதனால், மதப்பிடிப்பற்ற இளைஞர்கள் கூட இவ்வியக்கத்தில் இணைந்து போராட முன்வந்தனர்.





ஈரானில் நடைபெற்ற புரட்சியை முன்னுதாரணமாக்கி உருவாக்கப்பட்டதுதான் ஹிஸ்புல்லா என்பதால் இவர்கள் லெபனானையும் ஒரு இஸ்லாமிய நாடாக மாற்றும் நோக்கமும் கொண்டிருந்தார்கள். ஆனால், தற்போது இவற்றை தமது இறுதி இலட்சியமாகத்தான் கருதுகிறார்கள். தற்காலப் பிரச்சனைகளாள இஸ்ரேலிய இராணுவத்தின் வெளியேற்றம், மிக அண்மையில் கொண்டுவரப்பட்ட பாலஸ்தீன ஆதரவு நிலைப்பாடு என்பன பற்றித்தான் முக்கிய கவனம் செலுத்தப்படுகின்றது.





ஹிஸ்புல்லா ஒரு மத அடிப்படைவாத இயக்கமெனச் சொல்லப்படுகின்றது. ஆனால், இந்தக் கூற்றில் அரைவாசிதான் உண்மை. மத்தியகிழக்கில் யாரும் "மத அடிப்படைவாதம்" என்ற சொல்லைப் பாவிப்பதில்லை என்பது ஒருபுறமிருக்க, ஹிஸ்புல்லா தன்னை ஒரு அரசியல்-கொரில்லா இயக்கமாக வெளிப்படுத்திக் கொண்டமை மேற்கூறிய தரவுகளில் இருந்து தெளிவாகும். இதன்காரணமாகவே தற்போது தேசியவாத பலஸ்தீன இயக்கங்களுடனான கூட்டு சாத்தியமாகியுள்ளது. அதேவேளை மதச்சார்பற்ற சிரிய அரசின் பின்பலமும் கிடைத்துக்கொண்டிருக்கின்றது. ஒவ்வொருவருடைய நோக்கங்களும் வித்தியாசமாகவிருக்கலாம். ஆனால், சூழ்நிலை அவர்களைச் சேர்த்து வைத்துள்ளது. ஹிஸ்புல்லாவினர் ஷியா இஸ்லாமியர் என்பதால்தான் உலகின் ஒரேயொரு ஷியா அரசான ஈரான் இவ்வியக்கத்திற்கு உதவி வழங்குகின்றது. ஹிஸ்புல்லா தலைமையில் லெபனானிலும் ஷியா இஸ்லாமிய அரசு வரவேண்டுமென்ற எண்ணம் ஈரானுக்கிருப்பதை மறுப்பதற்கில்லை. சிரியாவோ, இஸ்ரேலுக்கும் தனக்குமிடையில் பாதுகாப்புக் கவசமாக ஹிஸ்புல்லாவை பயன்படுத்தும் நோக்குடையது.





ஹிஸ்புல்லாவின் ஒவ்வொரு தாக்குதலையடுத்தும் சிரியாவுக்கு அடிப்போமென இஸ்ரேல் காரணமில்லாமல் கர்ஜிக்கவில்லை. லெபனானை மட்டுமல்ல சிரியாவையும் பிடித்து தனது நாட்டுடன் இணைக்க வேண்டுமென்ற அவா நீண்டகாலமாகவே இஸ்ரேலுக்குண்டு. ஆறு நாட்போரென அழைக்கப்படும் 1973 யுத்தத்தில் இஸ்ரேல் சிரியாவின் கோலான் உயர்மேட்டுப்பகுதியை கைப்பற்றி இன்றுவரை ஆக்கிரமித்து வருகின்றது. இதனால் இன்றுவரை சிரியா இஸரேலின் பகைநாடாகவும் இருந்து வருகின்றது. மூன்றாம் உலகப் போர் நடக்கும்போது மேலும் பல பகுதிகளைக் கைப்பற்ற இஸ்ரேல் காத்திருக்கின்றது. அதற்கான தருணம் இப்போது வந்துவிட்டது என்ற அர்த்தத்தில் லெபனான், சிரியா மீது பயங்கரவாதத்திற்கெதிரான போரை அறிவிக்குமாறு அமெரிக்காவை இஸ்ரேல் கேட்டுள்ளது.
 
நன்றி தோழர். கலையரசன் - http://kalaiy.blogspot.com/