Friday, November 21, 2008








சில விஷயங்கள் எத்தனை முறை பேசினாலும் அலுப்பு தருவதில்லை.இலக்கியம்,இசை,சினிமா இவை குறித்து ஒவ்வொரு காலகட்டத்திலும்,வெவ்வேறுபார்வைகள், ரசனைகள், விமர்சனங்கள், எதிர்ப்புகள்..எது எப்படியாயினும் கால சுழற்சியில் நம்மை விட்டு நீங்காது சில காரியங்கள் தொடர்ந்து கொண்டே வருபவை..வாசிப்பும் அதில் ஒன்று.




இப்பதிவில் எனது தனிப்பட்ட வாசிப்பு அனுபவத்தை சம்பவங்கள் கோர்வையோடு சொல்லாமல், முடிந்த வரை படித்த நூல்களை மேற்கோள் காட்டியே எழுத முயன்றிருகின்றேன்.




எங்கள் வீட்டில் சிறிய புத்தக அலமாரி உண்டு,சிறிதும் பெரிதுமாய் நூற்றிற்கும் மேலான புத்தகங்கள் இருக்கும். இசையும்,இலக்கியமும் ரசிக்க கற்று தந்தது அப்பா. எதை படிப்பது, படித்தால் புரிந்து கொள்ள முடியும் என புத்தகங்களை தரம் பிரித்து எனக்கு பரிந்துரைத்தும் அப்பா.




இலக்கியம் குறித்தும்,ராஜாவின் இசை குறித்தும் அப்பாவோடு உரையாடும் பிரிய தருணங்கள் விருப்பதிற்குரிய ஒன்று.முதல் வாசிப்பு என்றதும் நினைவில் வந்தது சிறுவர்மலர் - கேலி சித்திரங்கள், நீதி கதைகள், வினா விடை, புதிர், தொடர் கதைகள் என குழந்தைகளுக்காகவே வடிவமைக்க பெற்ற அந்த இதழில் படித்த பல கதைகள் இன்றும் நினைவில் இருக்கின்றது.




ராணி காமிக்ஸ்/இரும்புக்கை மாயாவி/அம்புலி மாமா கதைகள் என கழித்த விடுமுறை நாட்கள் மறக்க முடியாதவை.வாசிப்பு கற்பனை திறனை வளர்க்க பெரும் உந்துதல்..




ஆங்கில திரைப்படங்களை ஒத்த சாகச காட்சிகள் நிறைந்த மாயாவி கதைகள், ஓங்கி வளர்ந்த பெண்களும், குடுமியிட்ட புஷ்டியான ஆண்களும் சித்திரங்களாய் நிரம்பிய அம்புலி மாமாவின் நீதி கதைகள் என குழந்தை பருவத்து புத்தகங்கள் குறித்து சமீபத்தில் நண்பர்களோடு பேசிக்கொண்டிருந்த பொழுது திரும்ப அப்புத்தகங்களை படிக்க ஆவல் மிகுந்தது.




பேரதிசியமாய் வியந்து படித்த நாவல்கள் "சிந்துபாத்" மற்றும் "அலாவுதீனும் அற்புத விளக்கும்". மாமா வீட்டு புத்தக அலமாரியில் சுஜாதா, பாலகுமாரன் நாவல்களுக்கு மத்தியில் இருந்த சிறுவர் நாவல்களான "தெனாலி ராமன் கதைகள்", "அக்பர்- பீர்பால்", "சிந்துபாத் சாகசங்கள்", "ட்விங்கிள்" மற்றும் அப்பா பிறந்த நாளுக்கு பரிசளித்த "எறும்பும் புறாவும்" , "ஈசாப் நீதி கதைகள்" ஆகியவை இன்றும் என் புத்தக அலமாரியில் உள்ளவை.




ஆரம்ப கால வாசிப்பை குறித்து இவ்வளவு விரிவாய் எழுத எழுத எனக்கே ஆச்சர்யம் உண்டாகின்றது. தொலைக்காட்சியும், கணினியும் குழந்தைகளின் நேரத்தை ஆக்ரமித்து கொண்டுள்ள தற்பொழுதைய சூழலில் நம் காலத்தில் வாசிப்புக்கள் சாத்தியமானத்தில் வியப்பில்லை.




இலக்கியம் என தரம் பிரித்து வாசித்த முதல் நாவல் கி.ரா வின் "பிஞ்சுகள்", அகாதமி விருது பெற்ற சிறுவர்களுக்கான இந்நாவலை படிக்க சொல்லி அப்பா கொடுத்த கணம் இன்றும் நினைவில் உள்ளது.அந்நாவலில் வரும் வேதி நாயக்கர் கதாபாத்திரம் எனக்கு மிக பிடித்த கதை மாந்தர்களுள் ஒன்று.




பள்ளி இறுதி ஆண்டுகளில் சாருவின் "கோணல் பக்கங்கள்" படித்த பின் அவரின் எழுத்தின் வசியம் மிகுந்த விருப்பத்திற்குரிய ஒன்றாய் ஆனது, பின் படிக்க தொடங்கியது வண்ணதாசன் மற்றும் வண்ணநிலவனின் எழுத்துக்கள், எதார்த்த நடுத்தர வாழ்வை இயல்பு மாறாமல், கவித்துவம் கலந்து கூறிய இருவரின் நடையும், எளிமையும் இவர்களின் எல்லா படைப்புகளையும் தேடி தேடி படிக்க செய்தது.




கி.ரா வின் "கோபல்ல கிராமம்", எழுவது அவ்வளவு கடினம் அல்ல என உணர்த்திய நாவல், கதை சொல்லியிடம் கதை கேட்பது போன்ற உணர்வை தந்த இந்நாவலின் பல காட்சிகளை என் கிராமத்து நிகழ்வுகளோடு சுளுவாய் ஒப்பிட்டு பார்க்க முடிந்தது. இன்று நடைமுறையில் இல்லாத கரிசல் பழக்க வழக்கங்கள் பலவற்றை விரிவாய் எடுத்துரைக்கும் இந்நாவல் ஒரு அறிய பொக்கிஷம்.




கல்லூரி நாட்களில் வெளிவந்த எஸ்.ராவின் விகடன் தொடர் கட்டுரைகள் என்னையும் ஈர்த்ததில் வியப்பில்லை. தனது பயண அனுபவங்களை, சுற்றி நடக்கும் நிகழ்வுகளை மிக நுட்பமாய் எழுத்தில் வடிக்கும் எஸ்.ரா வின் எழுத்துக்கள் அந்த நேரத்தில் பெரும் ஆறுதலாய் இருந்தது.




அழிந்து வரும் நாட்டுபுற கலைகளை தனது பயண அனுபவத்தோடு விவரித்துள்ள அவரின் "இலைகளை வியக்கும் மரம்" தொகுப்பிற்கு எனது விருப்ப பட்டியலில் எப்பொழுதும் இடம் உண்டு. இவை தவிர்த்து என்னை மிகவும் ஈர்த்த நூல்கள் தகழியின் "தோட்டி மகன்",யு.ஆர்.அனந்த மூர்த்தியின் "சம்ஸ்கார", ஜெயகாந்தனின் "ஒரு வீடு, ஒரு மனிதன் ஒரு உலகம்" மற்றும் "என்னை போல் ஒருவன்", பஷீர் மற்றும் வைக்கம் முஹமது மீரானின் படைப்புகள்.




கி.ரா,தி.ஜா, வண்ணதாசன், வண்ணநிலவன், சாரு, சுஜாதா என சிறு வட்டத்திற்குள் பயணித்த எனது வாசிப்பு விஸ்தாரம் பெற்றது சென்னை வந்த பின்னரே.




பெரும்பாலான நாவல்கள் இலக்கிய நண்பர்கள் பரிந்துரைத்ததே! அதில் முக்கிய நாவல்களாய் நான் கருதுபவை பா.சிங்காரத்தின் "புயலிலே ஒரு தோணி", கோபி கிருஷ்ணனின் "உள்ளே இருந்து சில குரல்கள்", ஜி.நாகராஜனின் "நாளை மற்றும் ஒரு நாளே", ஆதவனின் "ஏன் பெயர் ராமசேஷன்", கந்தசாமியின் "சாயா வனம்" மற்றும் ஜே.பி.சாணக்யாவின் படைப்புகள்.




விளிம்பு நிலை மனிதர்கள் குறித்த ஜி.நாகராஜன் மற்றும் சாணக்யாவின் பதிவுகள் அது வரை படித்திராத எவரும் எழுத தயங்கும் உண்மை நிலையை விவரிப்பவை. காண கிடைக்காத உலகை காண்பித்தும், அன்றாட சந்திக்கும் மனிதர்களை வேறு சூழ்நிலைக்கு பொருத்தி உலாவவிட்டும், இடத்திற்கு இடம் வேறுபடும் வாழ்கை சூழலை, வாழ்வின் அவலங்களை எடுத்துரைக்கும் ஒவ்வொரு வாசிப்பும் ஒரு புது அனுபவம் தந்தபடி தொடர்கின்றது.




வாசிப்பு கட்டாயப்படுத்தி வருவதில்லை, இயல்பாய் சுய ஆர்வத்தின் பேரில் வருவது, எனினும் ஏதேனும் ஒரு உந்துதல் அவசியம். வாசிக்கும் பழக்கத்தை நம்மோடு நிறுத்தி விடாது மற்றவர்களுக்கு முடிந்தவரை பரிந்துரைக்க வேண்டும், அதிலும் முக்கியமாய் குழந்தைகளுக்கு தமிழ் வாசிப்பு என்பது கொடிய விஷத்தை விட மோசமாக தோன்றுகிறது.




தற்பொழுதைய கணினி யுக குழந்தைகளுக்கு, வாசிப்பின் அவசியமும், தேவையும் இவர்களுக்கு புரிய வைக்க வேண்டியது நமது கடமை. இத்தனை நீண்டதொரு பதிவை நான் எழுவது இதுவே முதல் முறை. வாசிப்பு குறித்து எழுத இன்னும் இருக்கின்றது படித்து, ரசித்த நூல்களை நினைவில் உள்ள மட்டும் பகிர்துள்ளேன்.




தொடர்ந்து வாசிப்பு குறித்த அனுபவங்களை பகிர்ந்து கொள்ள நான் அழைப்பது மாதவராஜ் உஷா குப்பன்_யாஹூ அனுஜன்யா



Thanks to Leka

No comments: