Saturday, November 22, 2008

பாஜகவுக்கு இந்து மகா சபை கண்டனம்

பிரக்யா: பாஜகவுக்கு இந்து மகா சபை கண்டனம்


சனிக்கிழமை, நவம்பர் 22, 2008

டெல்லி: தீவிரவாதிகளையும், தீவிரவாதத்தையும் எந்த ரூபத்திலும் இந்து மகா சபை ஆதரிக்காது. பிரக்யா சிங் விஷயத்தை வைத்து ஆதாரம் பார்க்க பாஜக முயலக் கூடாது என அந்த அமைப்பு கூறியுள்ளது.

இதுகுறித்து அகில பாரத இந்து மகா சபை செய்தித் தொடர்பாளர் பிரவீன் சர்மா கூறுகையில், இந்துக்களின் மத உணர்வுகளை தனது அரசியல் லாபத்திற்காக பயன்படுத்த முயலுகிறது பாஜக.முன்பு ராமர் ஜென்ம பூமி விவகாரத்தில் அப்படித்தான் அது நடந்து கொண்டது.

இப்போது மாலேகான் சம்பவத்தை வைத்து இந்துக்களின் கவனத்தைத் திருப்பி அதை தனக்கு சாதகமாக்கிக் கொள்ள அது முயலுகிறது.பாஜகவும், சங் பரி்வார் அமைப்புகளும், இந்துக்களை காலம் காலமாக முட்டாளாக்கி வருவதைப் பார்த்து நாங்கள் சோர்வடைந்து விட்டோம்.





மாலேகான் குண்டுவெடிப்பில் கைதாகியுள்ளவர்களைக் காப்பாற்றுவதற்காக வக்கீல் வைக்கும் செலவுக்கு என்று கூறி நிதி திரட்டும் முயற்சியிலும் சங் பரி்வார் அமைப்புகள் இறங்கி விட்டன.இந்த செயலை நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம். மேலும் குண்டுவெடிப்பில் தொடர்புடைய அனைவரையும் நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம்.





மாலேகான் குண்டுவெடிப்பை நாங்கள் ஆதரிக்கவில்லை. இது தீவிரவாத செயலாகும். இதேபோல அனைத்து வகையான தீவிரவாதத்தையும் இந்து மகா சபை கண்டிக்கிறது.தீவிரவாதத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முயலும் பாஜக ஒரு சந்தர்ப்பவாத கட்சியாகும்.





சந்தர்ப்பவாத அரசியலைத்தான் அது நடத்தி வருகிறது.இந்துக்களுக்கும், இந்துத்வாவுக்கும், பாஜக, வி.எச்.பி, பஜ்ரங் தளம், ஆர்.எஸ்.எஸ், அபினவ் பாரத் ஆகிய அமைப்புகள் உண்மையில் என்ன பங்காற்றியுள்ளன என்று இந்து சமுதாயத்தினர் அவர்களிடம் கேட்க வேண்டும் என்றார் அவர்.





மகா சபை தலைவர் சந்திர பிரசாத் கெளசிக் கூறுகையில், சம்பந்தமில்லாத தீவிரவாதப் பிரச்சினை மூலம் இந்துக்களையும், முஸ்லீம்களையும் ஒருவருக்கொருவர் மோத வைக்க முயற்சிக்கிறது பாஜக. அப்போதுதான் அத்வானி பிரதமராக முடியும் என அது கருதுகிறது என்று காட்டமாக கூறியுள்ளார்.





இதுகுறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜாவேத்கர் கருத்து தெரிவிக்கையில், இதனால் என்ன பயன்?, இதை யார் பெரிதாக எடுத்துக் கொள்ளப் போகிறார்கள்?, இதில் அரசியல் முக்கியத்துவம் என்ன இருக்கிறது?. ஒருவேளை காங்கிரஸ் கட்சி இப்படிப் புகார் கூறியிருந்தால் நாங்கள் பதிலளித்திருப்போம் என்றார்.

No comments: