Wednesday, December 31, 2008

அறியப்படாத அமெரிக்கா!!???


ஒரே மாதத்தில் ஒரு லட்சம் தொழிலாளர்கள் வேலைஇழப்பு! குபேரபுரியாகச் சித்தரிக்கப்படும் உலக மேலாதிக்க வல்லரசான அமெரிக்காவில், கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் ஏறத்தாழ ஒரு லட்சம் தொழிலாளர்கள் வேலையிழந்து வீதியில் வீசியெறியப்பட்டுள்ளனர். உற்பத்தித் தேக்கம், ஆலை மூடல், ஆட்குறைப்பு ஆகியவற்றால் கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் மேலும் 50,000 பேர் வேலையிழந்துள்ளனர். கடந்த மூன்று மாதங்களாக பல ஆலைகளில் லேஆஃப் காரணமாக பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையின்றிப் பரிதவிக்கின்றனர்.


சொர்க்கபுரி; குப்பை கூட்டும் தொழிலாளி கூட காரில் வந்திறங்கிப் பணியாற்றுவார்; எந்தக் கவலையுமின்றி சுகமாக வாழும் மக்கள்; பொருளாதார வளமும் ஜனநாயக மாண்புகளையும் கொண்ட நாடு; குடி, கூத்து, கும்மாளம் என ஆனந்தமாகப் பொழுதைக் கழிக்கும் மக்கள் என அமெரிக்க வல்லரசின் செல்வச் செழிப்பைப் பற்றி முதலாளித்துவ எழுத்தாளர்கள் பெருமிதத்தோடு குறிப்பிடுகிறார்கள்.




ஆனால், அதே அமெரிக்காவில்தான் வறுமை, வேலையின்மை; வேலையிழந்து வாழ்விழந்து உழைக்கும் மக்கள் பிச்சை எடுக்கும் அவலம்; தற்கொலைகள், போதை மருந்து, கொலைகொள்ளைகள் என சமூகம் அழுகி நாறிக் கொண்டிருக்கிறது. மறுபுறம், மீளமுடியாத பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கி, அந்நாடு விழிபிதுங்கி நிற்கிறது.




கடந்த மார்ச் மாதத்தில் அமெரிக்காவின் ஐந்து பெரும் கடன் முதலீட்டு வங்கிகளுள் ஒன்றான பேயர் ஸ்டேர்ன்ஸ் என்ற வங்கி, ஒரே நாளில் குப்புற விழுந்து திவாலாகியது. அதை மீட்டெடுத்து முட்டுக் கொடுக்க அமெரிக்க அரசு மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்து விட்டன. அமெரிக்காவின் பணவீக்கம், கடந்த ஆண்டைவிட 4.3% அதிகரித்து அத்தியாவசிய உணவுப்பொருட்கள் எரிவாயுவின் விலை விண்ணை முட்டுகிறது. அமெரிக்காவின் 3.7 கோடிமக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்வதாகவும், இது மொத்த மக்கள் தொகையில் 12.7% என்றும், ஆண்டுக்கு 50 லட்சம் பேர் வீதம் இந்த எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் அமெரிக்க அரசே ஒப்புக் கொள்கிறது.




ஒருபுறம், டாலரின் மதிப்புச் சரிவு; மறுபுறம், உற்பத்தித் தேக்கம், பணவீக்கம். இதுவும் போதாதென ""சப்பிரைம் லோன்'' எனும் தரமற்றவர்களுக்குத் தரப்படும் கடன் கொள்கையால் அமெரிக்காவின் வீட்டுமனைக்கடன் வியாபாரத் தொழில் மிகப் பெரிய நிதி நெருக்கடியலில் சிக்கி, அந்தாட்டின் பொருளாதாரத்தையே ஆட்டங்காண வைத்துவிட்டது.




இன்னொருபுறம், வர்த்தகப் பற்றாக்குறை. அதை ஈடுகட்ட வழிதெரியாமல் செயற்கையாக 75,000 கோடிக்கும் மேலான அமெரிக்க டாலர்களைப் புழக்கத்தில் விட்டுள்ளது அந்நாடு. அமெரிக்காவின் உற்பத்தியின் மதிப்பை விட பலமடங்கு மிதமிஞ்சிய அளவில் காகிதப் பணத்தை அச்சிட்டு தள்ளி புழக்கத்தில் விட்டு, டாலரின் மதிப்பை செயற்கையாக ஊதிப் பெருக்க வைத்துக் கொண்டிருக்கிறது. வரம்பை மீறிய இத்தகைய அராஜக சூதாட்டங்களால் டாலரின் மதிப்பு சரியத் தொடங்கி, அந்நாட்டின் பொருளாதாரமே மீளமுடியாத நெருக்கடியில் சிக்கித் தத்தளிக்கிறது.




1930களில் ஏற்பட்ட உலகின் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை விஞ்சும் வகையில், இதுவரை கண்டிராத மிகப்பெரிய நெருக்கடியில் நாம் சிக்கிக் கொண்டுள்ளோம்'' என்று அலறுகிறார், பிரபல நிதி முதலீட்டாளரும், உலகின் மிகப்பெரிய கோடீசுவரர்களில் ஒருவருமான ஜார்ஜ் சோரஸ்.
இந்த நெருக்கடியின் சுமைகள் அனைத்தையும் ஏழை நாடுகளின் மீது திணித்து தப்பித்து வந்த ஏகாதிபத்தியவாதிகள், சந்தைப் பொருளாதாரத்தின் அராஜகத்தாலும் ஊகவணிகச் சூதாட்டத்தாலும் உள்நாட்டிலேயே பொருளாதார முறைகுலைவுகள் ஏற்படத் தொடங்கியதும், அந்நெருக்கடியின் சுமைகளை சொந்த நாட்டு உழைக்கும் மக்களின் மீது சுமத்துகின்றனர்.



ஆலை மூடல், ஆட்குறைப்பு, ஊதிய வெட்டுகளால் பாதிக்கப்படும் தொழிலாளர்களின் போராட்டங்கள் அமெரிக்காவில் அடுத்தடுத்து பரவத் தொடங்கியுள்ளன.




நமது நாட்டில் கொடிய பஞ்சம் ஏற்பட்டபோது, அன்று வெள்ளைக்காரன் ஆங்காங்கே கஞ்சித் தொட்டி வைத்து, பட்டினியால் செத்துக் கொண்டிருந்த மக்களுக்கு ஒருவேளை கஞ்சி ஊற்றி மனிதாபிமான நாடகமாடினான். அதைப் போலவே, அமெரிக்காவில் வேலையிழந்து வாழ்விழந்த தொழிலாளர்களுக்கு அரசாங்கமே ஒருவேளை கஞ்சி ஊற்றுகிறது. மேலை நாடுகளில் இதனை ""பிரட் லைன்'', ""சூப்லைன்'' என்று குறிப்பிடுவார்கள். குபேரபுரி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் மட்டும் இத்தகைய கஞ்சித் தொட்டிகளில் ஒரு துண்டு ரொட்டியும் ஒரு குவளை சூப்பும் பெறுவதற்காக பல்லாயிரக்கணக்கானோர் தினமும் வரிசையில் காத்திருக்கின்றனர்.




1970களில் 3.9 சதவீதமாக இருந்த அமெரிக்காவின் வேலையற்றோரின் எண்ணிக்கை, 1980களில் 11 சதவீதமாக உயர்ந்து, இன்று 16% அளவுக்கு அதிகரித்து விட்டது. முழுமையாக வேலையற்றவர்களோடு, வேலையிழந்து வேறிடத்தில் பகுதி நேரமாக வேலை பார்ப்பவர்களின் எண்ணிக்கையையும் சேர்த்தால், இது ஏறத்தாழ 20%க்கும் மேலாக இருக்கும் என்று அமெரிக்கப் பத்திரிகைகளே குறிப்பிடுகின்றன. அமெரிக்கக் குடிமகன் ஒவ்வொருவருக்கும் வேலை தர வேண்டியது அரசின் கடமை. வேலை கொடுக்க இயலாத நிலையில், வேலையற்றோருக்கு அரசு உதவித் தொகை அளிக்க வேண்டும்.



ஆனால், பல்வேறு மோசடிகள் மூலம் வேலையில்லாத இளைஞர்களில் ஏறத்தாழ 40% பேருக்கு மட்டுமே அமெரிக்க அரசு உதவித் தொகை வழங்குகிறது. ஈராக்கை ஆக்கிரமித்து அந்நாட்டை அடிமைப்படுத்தி வைத்திருப்பதற்காக அமெரிக்க இராணுவத்துக்கு நாளொன்றுக்கு 70 கோடி டாலர்களை (ஏறத்தாழ ரூ. 3000 கோடி) வாரியிறைக்கும் புஷ் அரசு, வேலையற்றோருக்கான உதவித் தொகையை அனாவசியச் செலவு என்று கூறி, அதைப் பெருமளவு குறைத்து விட்டது. இதனால், வாழவழியின்றி வேலையற்றவர்கள் பலர் பிச்சை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.




இத்தகைய உழைக்கும் மக்கள், ரயில் நிலையங்கள், சுரங்கப் பாதைகள், பூங்காக்கள், டெலிபோன் "பூத்'துகள் என பொது இடங்களில்தான் வாழ்கின்றனர். கடுங்குளிர் நிறைந்த அமெரிக்காவில் இவர்களால் எப்படி வாழ முடியும்? பெரிய அட்டைப் பெட்டிகளில் புகுந்து கொண்டு படுத்துறங்குவது, குப்பைத் தொட்டிகளிலிருந்து கிழிந்த கம்பளி ஆடைகளை எடுத்துப் போர்த்திக் கொள்வது முதலானவற்றால் எப்படியோ பலர் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். உறை பனிக்கும் கீழான கடுங்குளிரில் விறைத்து மாண்டு போனவர்கள் ஏராளம்.




அரசின் புள்ளிவிவரப் படியே, குபேர நாடான அமெரிக்காவில் வீடிழந்து தெருவில் வாழும் உழைக்கும் மக்களின் எண்ணிக்கை 20 லட்சம் பேர். நியூயார்க் நகரில் மட்டும் இத்தகையோரின் எண்ணிக்கை 70,000 பேருக்கும் மேலாகும் என்று அம்மாநகர ஆளுநரின் அறிக்கை குறிப்பிடுகிறது. லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் ஏறத்தாழ 80,000 பேர் வீடற்றவர்களாக, வேலையற்றவர்களாக உழல்கின்றனர். இவர்களில் கருப்பின மக்களே மிக அதிகமாக உள்ளனர். அமெரிக்காவின் ஒட்டு மொத்த கருப்பின மக்களில் மூன்றில் ஒரு பங்கினர் வறுமையில் சிக்கித் தவிப்பதாக புள்ளி விவரங்கள் குறிப்பிடுகின்றன.




அமெரிக்கா மட்டுமல்ல; மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும் இதே நிலைமைதான் நீடிக்கிறது. கடந்த பத்தாண்டுகளில், வேலையற்றோரின் எண்ணிக்கை 10.9 சதவீதமாக ஐரோப்பிய நாடுகளில் அதிகரித்துள்ளது. பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளில் ஏறத்தாழ 11%க்கும் மேலான மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்வதாக ஐரோப்பிய பொருளாதாரக் குழுமத்தின் ஆண்டறிக்கை குறிப்பிடுகிறது.




ஏறத்தாழ பத்தாண்டுகளுக்கு முன்பு ""கம்யூனிசம் தோற்றுவிட்டது; உலக முதலாளித்துவம் வெற்றிக் கொடி நாட்டிவிட்டது'' என்று எக்காளமிட்ட ஏகாதிபத்திய உலகம், சந்தைப் பொருளாதாரத்தின் படுதோல்வியாலும் பொருளாதார வீழ்ச்சியாலும் தடுமாறித் தத்தளிக்கிறது. ஏகாதிபத்திய நாடுகளில் வளம் கொழிக்கவில்லை; வறுமை தாண்டவமாடத் தொடங்கி விட்டது. ஒருபுறம், உலகைச் சூறையாடும் ஏகாதிபத்திய நிதியாதிக்கக் கும்பலின் செல்வம் கோடானுகோடிகளாகப் பெருத்துக் கொண்டே போகிறது.



மறுபுறம், வறுமையும் வேலையின்மையும் கொள்ளை நோய் போலப் பரவி வருகிறது. மலைக்கும் மடுவுக்குமான இந்த இடைவெளி, இன்று அமெரிக்காவின் நிதி நெருக்கடியால் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியைத் தொடர்ந்து தீவிரமாகிக் கொண்ட வருகிறது. மரணப் படுக்கையில் வீழ்ந்துவிட்ட ஏகாதிபத்தியத்தின் தலையைச் சீவி, இனி அதன் உயிரைப் பறிப்பதுதான் இன்றைய உடனடித் தேவையாகியுள்ளது.



WrittenBy: புதிய ஜனநாயகம் புதிய ஜனநாயகம் 2008

7 comments:

Anonymous said...

I like your blog

Anonymous said...

Good Blog, I think I want to find me, I will tell my other friends, on all

Anonymous said...

See you in these things, I think, I started feeling good!
Personalized Signature:贵州信息港休闲游戏中心,我爱掼蛋网,重庆游戏中心,金游世界视频棋牌游戏中心,南通棋牌游戏中心,贵港热线休闲游戏中心,淮安棋牌游戏中心

Anonymous said...

It seems a little more than I need to check the information, because I was thinking: Why does not my GLOG these things!

Anonymous said...

A friend told me this place I have been looking for, I come, it turned out, I have not disappointed, good Blog
fishing net

Anonymous said...

After reading the information, I may have different views, but I do think this is good BLOG!
netting

Anonymous said...

You these things, I have read twice, for me, this is a relatively rare phenomenon!
fishing net