இலக்கியம், அரசியல் என பல நிகழ்வுகளை முன்னெடுத்துச் செல்வதில் துபாய் தமிழுணர்வாளர்கள் முன்னுதாரணமாக இருந்திருக்கிறார்கள். அவ்வரிசையில் "கீற்று இணைய அன்பர்கள் சந்திப்பு" மற்றும் கலந்துரையாடல் 5-12-2008 துபாயில் கராமா பூங்காவில் நடைபெற்றது.
முன்னதாக தமிழ்நாட்டில் நிகழவிருந்த சந்திப்புகள் மழை காரணமாக தள்ளிவைக்கபட்டதால் குறித்த நேரத்தில் கீற்று அன்பர்கள் சந்திப்பை நிகழ்த்தி இதிலும் துபாய் தமிழுணர்வாளர்கள் முன்வரிசையில் நின்றுவிட்டனர். மேலும் துபாயிலும் மழையாக இருந்து நிகழ்வின்போது நின்றிருந்தது. மழை தொடருமெனில் உள்ளரங்கு நிகழ்ச்சியாக நடத்த மாற்று ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.
முன்னதாக கத்தார் நாட்டில் பணிபுரியும் கீற்று வாசகர் கவிஞர் திரு.இனியவன் ஹாஜி முஹம்மது அவர்கள் கீற்றுவின் பணியைப் பாராட்டி அதன் ஆசிரியர் திரு.இரமேசுக்கு தனது “இனியவன் மீடியா இண்டர்நேஷனல்” நிறுவனத்தின் சார்பாக அய்க்கிய அரபுநாடுகளின் அதிபர் காலஞ்சென்ற மதிப்பிற்குரிய "ஷேக்ஜாயித் அல் நஹ்யான்" பெயரிலான விருதினை (250டாலர்) அன்பர்கள் முன்னிலையில் கீற்று நிர்வாகத்தினர்களில் ஒருவரான திரு. குமார் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு கீற்று குழுமம் சார்பில் திரு,இனியவன் அவர்களுக்கு நன்றியும் தெரிவிக்கப்பட்டது.
நிகழ்வில் அன்பர்கள் கீற்றுவின் தற்போதைய செயல்பாடுகள் குறித்தும் எதிர்காலத்தில் சிறப்பாக செயல்பட இன்னும் நாம் என்ன முறையில் இயங்கவேண்டும் என்கிற கருத்துக்களையும் ஆலோசனைகளையும் வழங்கினார்கள்.
அவற்றில் சில:-
• கீற்று அன்பர்கள் சந்திப்பை கீற்று சார்பாக திரு.இ.இசாக் ஒருங்கிணைத்தார்.
• கீற்று பன்முகத்தன்மையுடன் இயங்குவது குறித்து அன்பர்களாகிய நமக்கு மிக்க மகிழ்ச்சியளிக்கிறது. எனவே அன்பர்கள் சந்திப்பானது மூன்று மாதத்திற்கு ஒரு முறையேனும் துபாய், சார்ஜா, அபுதாபி என ஏனைய அமீரகத்திலும் நடத்துவது சம்மந்தமாக திரு.கவிமதி கருத்து தெரிவிக்க அது அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
• கீற்றுவில் ஒற்றைக் கருத்தின் சார்பு நிலைதான் என்று இல்லாமல் எதிர்த் தரப்பு கருத்துகளுக்கும் இடமளிப்பது பாராட்டுக்குரியது. இதுபோன்ற எதிர்த் தரப்பு செய்திகளுக்கு இடமளிப்பது மூலம் கீற்றுவின் கோட்பாடு சார்ந்த செயல்பாடுகளுக்கும், வாசக கருத்து விவாதத்திற்கும் இப்பன்முகத்தன்மை துணைபுரிவதாகவும் அமைகிறது என திரு.ஆசிப்மீரான் தனது கருத்துக்களைப் பதிவுசெய்தார்.
• மற்ற வலைத்தளங்களின் "கீற்று அன்பர்கள்" எழுதிய ஆக்கங்களை அவை சிறப்பாக இருக்கும் பொருட்டு அதை கீற்றுவில் மறுபதிப்பு செய்ய ஆவன செய்ய வேண்டுமென திரு.ஆசாத் தனது கருத்தைத் தெரிவித்தார்.
• கீற்று வளர்ச்சிக்கு வாசகர் தளத்தை விரிவுபடுத்துவது குறித்தும் தொடர்ந்து சிறப்பாக செயல்பட வாசகர்களும் படைப்பாளிகளும் நிதியுதவிக்காக ஆவன செய்யவேண்டும் எனவும் திரு.பாரத் தனது கருத்தை வெளியிட்டார்.
• கீற்று தமிழ் இலக்கியத்திற்கு பெரும்பணியாற்றி வருவது கண்டு தானும் இக்குழுவில் இணைவதில் பெருமைகொள்வதாக குழுமத்தில் புதிதாக இணைந்த திரு.சே.ரெ.பட்டணம் மணி தெரிவித்தார்.
• மேலும் கீற்று இணையதளத்தில் வெளிவரும் ஆக்கங்கள் பற்றிய கருத்துகளையும் விவாதங்களையும் கீற்று குழுமத்தில் முன்னெடுத்து செல்ல ஆசிரியர் குழு முயற்சிக்க வேண்டும் என திரு.முத்துக்குமரன் தெரிவித்தார்.
• கீற்று பல நல்ல படைப்புகளை வெளியிட்டாலும் கீற்று தளத்தின் நிலைப்பாடுகளை வாசக சமூகத்திற்கு தெளிவுபடுத்தும் வகையில் ஆசிரியர் குழுவின் குரலாக ஒரு பகுதி தொடங்கப்பட்டு தொடர்ந்து ஆசிரியர் குழுக்கான நிலைபாட்டு கருத்துகளை பதிவு செய்யவேண்டுமென திரு.நண்பன் தனது கருத்தை தெரிவித்தார்.
• சமூக விரோதக் கருத்துக்களை பரப்புகிற எழுத்தாளர்களுக்கு ஆதாரப்பூர்வமான விடையளிக்கும் கட்டுரைகளுக்கு முன்னுரிமை அளித்து கீற்று வெளியிட வேண்டும் என திரு.உமர்சரீப் மற்றும் திரு.நஜீமுத்தீன் ஆகியோர் தங்களது கருத்தை தெரிவித்தார்கள்.
• கீற்று தளம் கடந்த ஒரு வாரத்திற்கு முந்திதான் தன் கவனத்திற்கு வந்தாலும் தான் வாசித்த தளங்களிலிருந்து மிக மிக வித்தியாசமான சிந்தனையுடனும் சமூக அக்கறையுடனும் படைப்புகளை வெளியிட்டு வருவதுடன் இதைப் போன்ற சந்திப்புகளையும் நடத்துவும் மிகவும் சிறப்பானது என திரு.தயாளன் தெரிவித்தார்.
கீற்று மின்னிதழில் வெளியிடப்படும் படைப்புகளை தொகுத்து கீற்று ஆண்டுமலராக வெளியிட வேண்டுமென்று கீற்று ஆசிரியர் குழுவிடம் பரிந்துரைப்பதென்றும் முடிவு செய்யப்பட்டது. மேலும் நண்பர்கள் பலரும் எடுத்துரைத்த கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஏற்று தங்கள் ஆசிரியர் குழு ஆவனசெய்யும் என கீற்று நிர்வாகிகளில் ஒருவரான திரு.குமார் தெரிவித்தார்.
நிகழ்வின் முடிவில் கலந்துகொண்ட அனைத்து அன்பர்களுக்கும் திரு.சுரேசு நன்றி தெரிவிக்க கீற்று அன்பர்கள் சந்திப்பு மகிழ்ச்சியுடன் நிறைவடைந்தது.
செய்திகள்-படங்கள்கீற்றுக்காக...கவிமதி/துபாய்
No comments:
Post a Comment