Thursday, December 11, 2008

அத்வானி மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை?



அத்வானி மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை? 16 ஆண்டுகள் ஆகியும் பாபர் மசூதி இடிப்பு‏



16 ஆண்டுகள் ஆகியும் பாபர் மசூதி இடிப்பு அத்வானி மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை? மத்திய அரசுக்கு தமிழர் தலைவர் கேள்வி

சென்னை, டிச. 6- மும்பையில் அண்மையில் 60 மணி நேரத்திற்கு மேல் போராடி தீவிரவாதிகளை அழித்துள்ளனர். இந்த செயலுக்கு உளவுத் துறையின் செயல்பாடு தோல்வி அடைந்து விட்டது என்பதைத்தான் காட்டுகிறது.


அதற்காக உள்துறை சார்பில் வருத்தத்தை மன்னிப்பைக் கோருகிறேன் என்று தெரிவித்துள்ள உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் தீவிரவாதத்தினுடைய ஆணிவேர் கண்டு பிடிக்கப்பட்டு அழிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.


அது வரவேற்கக்கூடிய செய்தியாகும். மத்திய அரசிற்கு ஒரு வேண்டுகோளை இந்த நேரத்திலே வைக்கிறேன். இன்றைக்கு பாபர் மசூதி இடித்த நாள் (டிச. 6) பாபர் மசூதி இடிக்கப்பட்டு பதினாறு ஆண்டுகள் ஆகின்றன.


பாபர் மசூதி முதல் குற்றவாளி அத்வானி
பாபர் மசூதி இடிப்பு வழக்கின் முதல் குற்றவாளி எல்.கே.அத்வானிதானே. அவர் உள்துறை அமைச்சராக இருந்தார். பிறகு துணைப் பிரதமராக ஆனார்.
இன்றைக்கு பிரதமர் பதவி வேட்பாளர் நான் தான் என்று அறிவித்துக் கொண்டிருக்கின்றார். பதினாறு ஆண்டுகாலமாக இந்த வழக்கு ஏன் மத்திய அரசால் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது?


லிபரான் கமிஷன் 40 முறை நீட்டிப்பு
பாபர் மசூதி இடிப்பு வழக்கிற்காக நியமிக்கப்பட்ட லிபரான் கமிசன் இன்னமும் இருந்து கொண்டிருக்கின்றது. நாற்பது முறை லிபரான் கமிஷன் காலம் நீட்டிக்கப்பட்டே வந்து கொண்டிருக்கின்றது.


ஆனால் பாபர் மசூதி இடிப்பு குற்றவாளிகள் 16 ஆண்டுகள் ஆகியும் ஏன் இன்னமும் தண்டிக்கப்படவில்லை! என்பதை இந்திய அரசுக்கு கேள்வியாக வைக்கின்றோம்.


தீவிரவாதி கொடுத்த வாக்குமூலத்தில் மோடி
மும்பை தீவிரவாதத் தாக்குதலில் பிடிபட்ட ஒரு தீவிரவாதி என்ன வாக்குமூலம் கொடுத்திருக்கின்றான்? அவன் இந்த முறையில் ஈடுபடுவதற்கு எது தூண்டுதலாக இருந்தது என்பதை பிடிபட்ட அந்தத் தீவிரவாதியே சொல்லியிருக்கின்றான்.


எனக்கு, இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம், மோடி பேசிய பேச்சு, பிரவின் தொகாடியா போன்றவர்கள் பேசிய பேச்சு போட்டுக் காட்டப்பட்டது. அதுதான் எனக்கு ஊக்கமாக இருந்தது என்று அவன் வாக்குமூலத்திலே சொல்லியிருக்கின்றான்.


ப.சிதம்பரம் நடவடிக்கை எடுக்க வேண்டும்
உள்துறை அமைச்சர் ப.சிதம்பரமோ தீவிரவாதத்தை வேரிலிருந்து அழிக்கும் நடவடிக்கையை எடுப்போம் என்று சொல்லியிருக்கின்றார். ஆனால், பாபர் மசூதியை தாக்கிய தீவிரவாதிகள் மீது இன்னமும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது வருத்தத்திற்குரிய ஒரு செய்தியாகும்.


இதிலே ஆர்.எஸ்.எஸ்சா, பி.ஜே.பியா, அந்த மதமா? இந்த மதமா?

இந்துத்துவாவா? முஸ்லிமா? அந்த ஜாதியா? இந்த ஜாதியா? என்று பார்க்காமல் தீவிரமான நடவடிக்கை எடுத்து மக்களை காப்பற்ற வேண்டும் என்பதுதான் எங்களுடைய வேண்டுகோளாகும்.


இந்து தீவிரவாதிகள் மீது என்ன நடவடிக்கை?
அதே போல மாலேகாவ்ன் குண்டு வெடிப்பு சம்பவம், பிரக்யாசிங் தாக்கூர், லெப்டினன்ட் கர்னல் சிறீகாந்த் பிரசாத் புரோகித், தயாயனந்த் பான்டே (சங்கராச்சாரி) ஆகிய இந்துத் தீவிரவாதிகள் நடத்திய குண்டு வெடிப்புகள், தீவிரவாதச் செயல்கள் செய்த இவர்கள் மீதும் மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் தப்பிவிடக் கூடாது என்பதையும் இந்த நேரத்திலே வேண்டுகோளாக வைக்கின்றோம்.


(சென்னை பெரியார் திடலில் (6.12.2008) தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியிலிருந்து)




டிசம்பர் 6டிசம்பர் 6 - அண்ணல் அம்பேத்கரின் நினைவு நாள் - முக்கிய மான வரலாற்றுக் குறிப்பு நாள்!


இந்த நாளில் திட்டமிட்ட வகையிலே கறுப்பு நாளாக ஆக்கியவர்கள் இந்துத்துவா என்ற பெயரில் வன்முறைக் கொடி பிடித்து வக்கிரங்களை அரங்கேற்றும் பா.ஜ.க. உள்ளிட்ட சங் பரிவார்க் கும்பல்.


450 ஆண்டுகால வரலாறு படைத்த சிறுபான்மை மக்களான முசுலிம்களின் வழிபாட்டுச் சின்னமான பாபர் மசூதியை இந்தக் கும்பல் திட்டமிட்டு அடித்து நொறுக்கியது.


இடித்தவர்கள் ஏதோ சாதாரண அப்பாவி மக்கள் அல்ல! பிற்காலத்தில் இந்தியாவில் துணைப் பிரதமராக இருந்த திருவாளர் எல்.கே. அத்வானியாவார்.


இந்தப் பெரிய மனிதர்தான் பா.ஜ.க.வின் சார்பில் இப்பொழுது அறிவிக்கப்பட்டுள்ள பிரதமருக்கான வேட்பாளர் ஆவார்.இவர் மட்டுமல்ல; பிற்காலத்தில் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராகவிருந்த டாக்டர் முரளி மனோகர்ஜோஷி, வினாய் கட்டியார், விசுவ இந்துபரிசத்தின் தலைவர் அசோக்சிங்கால், கிரிராஜ் கிரோன், விஷ்ணு ஹரி டால்மியா, சாத்வீ ரிதம்பரா, செல்வி உமாபாரதி உள்பட 49 பேர்கள் மீது குற்றம் சாற்றப்பட்டுள்ளது.


எந்தெந்தப் பிரிவுகளில்?இந்தியக் குற்றவியல் சட்டம் 147, 153(ஏ), 149, 153(பி) மற்றும் 505 பிரிவுகளில் வழக்குகள் இவர்கள்மீது கலவரம் விளைவித்தல், மதக் குரோத உணர்வை ஏற்படுத்துதல், சட்ட விரோதமாகக் கூடுதல், தேசிய ஒருமைப்பாட்டுக்குக் குந்தகம் விளைவித்தல், ஒரு சமூகத்துக்கு விரோதமாகக் குற்றம் செய்யத் தூண்டுதல் மக்களிடையே பீதியை உண்டாக்குதல் என்பன போன்ற குற்றங்கள் இந்த விளம்பரம் பெற்ற மனிதர்கள்மீது சுமத்தப்பட்டுள்ளன.


16 ஆண்டுகள் ஓடிய பிறகும், இந்த மாபெரும் குற்றவாளிகள் சட்டத்தின்முன் நிறுத்தப்பட்டு, உரிய தண்டனை பெற்றுத்தரப்படவில்லை என்பது - இந்தியாவின் நடைமுறையில் உள்ள நிருவாகம், நீதித்துறை இவற்றின்மீது விழுந்துள்ள அழிக்க முடியாத கரும்புள்ளியாகும்.


தாமதிக்கப்பட்ட தீர்ப்பு மறுக்கப்பட்ட நீதிதான் என்று ஏட்டில் உள்ளதே தவிர, யதார்த்தத்தில் கிடையவே கிடையாது.


பாதிப்புக்கு ஆளான முசுலிம் மக்களின் மனம் இந்த 16 ஆண்டுகாலமாக எப்படி எப்படியெல்லாம் வேதனைப்பட்டு இருக்கும் என்பதை எண்ணிப் பார்க்கவேண்டாமா?


ராமன் பாலம்பற்றிப் பேசினால், இந்துக்களின் மனம் புண்படும் என்று ஒப்பாரி வைக்கும் இந்துத்துவா வெறியர்கள்தான் - இன்னொரு மதக்காரர்களின் வழிபாட்டுச் சின்னத்தை உடைத்து நொறுக்கினர் என்பதை நினைத்துப் பார்க்கவேண்டும்.


குற்றவாளிகள் உரிய நேரத்தில் தண்டிக்கப்படாவிட்டால், மக்கள் மத்தியிலே வன்முறை நடவடிக்கைகள் சரியானதுதான் என்கிற மனோபாவத்தைத்தானே வளர்க்கும்? இந்தியாவில் நடக்கும் பல்வேறு வன்முறைகளுக்கு - பாபர் மசூதி இடிப்பில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் தண்டிக்கப்படாததும் ஒரு முக்கிய காரணமே!


உள்துறை அமைச்சர், துணைப் பிரதமர் என்கிற மிகப்பெரிய பொறுப்பான பதவிகளில் அதிகாரப் பீடத்தில் இருந்த அத்வானி போன்றவர்கள் வழக்கினைத் துரிதமாக நடத்திட ஒத்துழைக்காமல், சட்டத்தின் சந்து பொந்துகளில் நுழைந்து தப்பியதும், வேண்டு மென்றே காலதாமதம் செய்துவருவதும் எந்தத் தரத்தைச் சார்ந்தது? பொதுமக்கள்தான் உணரவேண்டும்.


இதுபோன்ற தகுதியில் உள்ளவர்கள் இந்த நாட்டின் பிரதமர் ஆசனத்தில் அமர்வது என்பது பெருமைக்குரியதாக இருக்குமா? என்ற கேள்வி இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனி(ளி)ன் நெஞ்சிலும் எழ வேண்டிய அர்த்தமிக்க நேர்மையான வினாவாகும்.


ஒரு பட்டப் பகலில் பாபர் மசூதியை இடித்தும் எந்தவிதத் தண்டனையையும் குற்றவாளிகள் பெற்றுவிடவில்லை என்ற தைரியத்தில் குஜராத்தில் சிறுபான்மையினருக்கு எதிராக ஒரு அரசே அதிகாரத்தைப் பயன்படுத்தி - அரசப் பயங்கரவாதம் என்ற தன்மையில் வேட்டையாடித் தீர்த்தது என்பதையும் எண்ணிப் பார்க்கவேண்டும்.


அரசு புள்ளி விவரப்படி 2000 முசுலிம்கள் படுகொலை செய்யப் பட்டனர்! கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள அவர்களின் வீடுகளும், தொழில் நிறுவனங்களும் சூறையாடப்பட்டன, கொளுத்தப்பட்டன என்றால், இது நாடா? - கடும்புலிகள் வாழும் காடா? என்று நினைக்கத்தானே தோன்றும்.
இந்த வன்முறை வேட்டைக்குத் தலைமை தாங்கிய குஜராத் மாநில முதலமைச்சர் நரேந்திர மோடி - உச்சநீதிமன்றத்தால் நவீன நீரோ மன்னன் என்று அடையாளப்படுத்தப்பட்டார்.


ஆனால், இந்த நாட்டில் சோ போன்ற பார்ப்பனக் கூட்டம் இந்த நீரோ மன்னன் இந்தியாவின் பிரதமராக வரவேண்டும் என்று வெட்கமில்லாமல் எழுதுகிறார்கள் என்றால், பார்ப்பனர்களின் பிறவிக் குணம் 2008-லும் மாறவில்லை என்றுதானே பொருள்!


மீண்டும் நினைவூட்டுகிறோம் - பாபர் மசூதி இடிப்புக் குற்றவாளி கள் தண்டிக்கப்படாமலேயே இன்னும் எத்தனை டிசம்பர் ஆறை நாம் சந்திக்கப் போகிறோம்?



-ஷேக் அப்துல் காதர்

No comments: