Wednesday, December 3, 2008

அயோத்தி பயணம்





அயோத்தி பயணம் அடுத்த ஆண்டிற்குத் தள்ளி வைக்கப்படுகிறது : திருமாவளவன்

மும்பை தாக்குதல் சம்பவத்திற்கு இந்துத்துவ அமைப்புகளுக்கு தொடர்பு இருக்கலாம் என்று விடுதலை சிறுத்தை கட்சிகளின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.




சென்னை எம்.எம்.டி.ஏ. வில் உள்ள லீக் கிளப்பில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின்போது திருமாவளவன் பேசியதாவது : அனைத்துக் கட்சித் தலைவர்கள் பிரதமரை இலங்கையில் போர் நிறுத்தம் செய்யக் கோரி வலியுறுத்த செல்லும் குழுவில் திருமாவளவன் இடம் பெறக் கூடாது என்ற மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் பேச்சு ஜெயலலிதாவுக்கு ஆதரவானது. சோனியாகாந்திக்கு எதிரானது.



இதுபோன்ற பேச்சு தி.மு.க. கூட்டணிக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேசி வருகிறார். இலங்கைத் தமிழர் பிரச்சினையில் அனைத்துக் கட்சிகளும் ஒன்று சேர்ந்து அவர்களுடைய நிலைபாட்டை மத்திய அரசுக்கு தெரிவிக்க வேண்டும். பிரதமரை சந்திக்கும் அனைத்துக் கட்சிக் குழுவில் அ.தி.மு.க., ம.தி.மு.க. இல்லாதது வருத்தம் அளிக்கிறது. இதை புறக்கணிப்பது தி.மு.க.வுக்கு எதிரான நடவடிக்கை அல்ல. தமிழ் இனத்திற்கு எதிரான நடவடிக்கை.



எனவே அவர்களுடைய நிலைபாட்டை மறு பரிசீலனை செய்ய வேண்டும். மும்பை தாக்குதலில் 40 இஸ்லாமியர்கள், 200 வெளிநாட்டினர் இறந்துள்ளனர். இந்த சம்பவத்தின் பின்னணியில் இந்துத்துவ அமைப்புகள் இருப்பதாக தெரிகிறது. இந்த கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்த வேண்டும்.




ஏனென்றால் ஐதராபாத், மாலேகான் ஆகிய இடங்களில் குண்டுவெடிப்பு சம்பவங்களில் இந்து அமைப்புகளுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. அது மட்டுமல்லாமல் மாலேகான் குண்டுவெடிப்பில் முக்கிய குற்றவாளியான பெண் சாமியாரை கைது செய்த போலீஸ் அதிகாரி ஹேமந்த் கர்காரே இந்த சம்பவத்தில் திட்டமிட்டு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.



மாலேகான் குண்டுவெடிப்பு சம்பந்தமான விசாரணையை திசை திருப்புவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சந்தேகம் ஏற்பட்டுள்ளது. மேலும் மகாராஷ்டிர மாநில துணை முதல்வர் பாட்டீல் மற்றும் உள்துறை அமைச்சராக இருந்த சிவராஜ் பாட்டீல் ஆகியோருடைய ராஜினாமா கடிதத்தை ஏற்றுக் கொண்ட பிரதமர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் என்.கே.நாராயணனின் ராஜினாமா கடிதத்தையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஏனென்றால் அவர் பதவியில் இருந்த காலங்களில் இது போன்ற குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்துள்ளன. மேலும் தமிழ்நாட்டில் பெய்த தொடர்மழையால் மக்கள் வீடுகளை இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் உயிரிழந்தோர்களுக்கு 2 லட்சம் ரூபாயும், வீடிழந்தோருக்கு ரூ.5 ஆயிரமும் மத்திய அரசு வழங்க வேண்டும்.



தமிழக அரசு அறிவித்துள்ள அருந்ததியினருக்கான உள் ஒதுக்கீடுகளை விடுதலை சிறுத்தை கட்சிகள் வரவேற்கிறது. இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா தமிழக அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இதை வைத்து அரசியல் செய்யக் கூடாது. மேலும் மும்பை தாக்குதலுக்கு விடுதலை சிறுத்தை கட்சிகள் கண்டனத்தைத் தெரிவித்துள்ளன. வரும் 6ம் தேதி அறிவிக்கப்பட்டிருந்த அயோத்தி பயணம் அடுத்த ஆண்டு டிசம்பர் 6ம் தேதி நடைபெறும். தற்போதுள்ள அரசியல் சூழ்நிலை காரணத்தால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.




மேலும் வரும் 6ம் தேதி சென்னை மெமோரியல் அரங்கில் பாபர் மசூதி மறு கட்டமைப்பு விளக்க கருத்தரங்கம் திட்டமிட்டவாறு நடைபெறும். விடுதலை சிறுத்தைகளின் எழுச்சி பாசறையின் தொடக்க விழாவும், தமிழீழ அங்கீகார மாநாடும் வரும் 26ம் தேதி சென்னையில் நடைபெறும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No comments: