இந்த நாட்டில் ஏற்பட்டிருக்கும் மக்கள் சமூக அமைப்பின் அஸ்திவாரமே சரியில்லாமல் இருக்கிறது. இந்த அஸ்திவாரத்தின்மீது கட்டக்கூடிய எந்த அமைப்பும் மக்கள் சமூகத்துக்கு நன்மையளிக்கக்கூடியது அல்ல.
ஒரு தகப்பன் வயிற்றில் பிறந்த பிள்ளைகளுக்கு எப்படி சம அந்தஸ்தும், சம உரிமையும் உண்டோ அப்படியே ஒரு தேசத்தில் பிறந்தவர்களுக்கும் இருக்கவேண்டியது அவசியமாகும். அப்போதுதான், மக்கள் சுகமாக வாழமுடியும்.
ஏதோ தான் பிறந்த வேளையின் பலன் கஷ்டத்தை அனுபவிக்க வேண்டியதுதான், மற்றொருவன் சுகத்தை அனுபவிக்கப் பாத்தியதை உடையவன்தான் என்னும் சோம்பேறி எண்ணமே மக்களை அழித்து வருவதற்கு முக்கிய கருவியாய் இருக்கிறது.
இந்த எண்ணம் மாறுபட வேண்டியது அவசியமாகும். இதற்கான எவ்வளவு தியாகம் செய்தாலும் அது வீணகாது.மக்களின் மனோபாவமும் வாழ்க்கை நடத்தும் முறையும் மாறினால் ஒழிய வேறொரு முறையாலும் நன்மையுண்டாகாது என்பது திண்ணம்.
தற்போதிருக்கும் நிலைமையில் சுயராஜ்யம் வந்தால் குருட்டு நம்பிக்கையும் வைதிகமும்தான் வலுக்கும். தற்போது சுயராஜ்யம் அனுபவிக்கும் தேசங்களை எடுத்துக்கொள்ளுங்கள்; ஏழைகள் நிலைமை அங்கு எப்படியிருக்கிறது ? அமெரிக்கா ஜனநாயக ஆட்சியுடையதாகத்தான் இருக்கிறது.
அங்கே இலட்சக்கணக்கானவர்கள் வேலையில்லாமல் திண்டாடுகின்றார்கள். அமெரிக்கா உலகின் செல்வத்திற்கே இருப்பிடமாய் இருந்தும் -அங்கே ஏழைகள் நிற்க நிழலின்றி, உறங்க இடமின்றித் தவிக்கிறார்கள்.
ஜெர்மனி நிலைமை என்ன? சூரியனே அஸ்தமிக்காத சாம்ராஜ்யத்தை உடையதென்று சொல்லும் இங்கிலாந்து சுயராஜ்ய தேசமேயாகும். ஆனால், அங்கு ஏழைகள் படும் துயரம் கொஞ்சநஞ்சமல்ல. சுயராஜ்யமுள்ள ஒவ்வொரு தேசமும் இப்படித்தான் இருக்கிறது.
சுயராஜ்யமோ, அந்நிய ராஜ்யமோ, குடியரசோ, முடியரேசோ எந்த விதமான முறையாலும் மக்கள் சுகம் பெறமுடியாத நிலைமையில் உலகம் இன்று இருந்து வருகின்றது. ஆகையால், ஏழைகள் துயரத்தைப் போக்க இந்திய சுயராஜ்யம் இப்போது சிலரால் கருதப்படும் முறையில் யாதொரு நன்மையும் கொடுக்கப் போவதில்லை என்பது நிச்சயம்.
சமதர்மத்தையும் பொதுவுடைமையையும் அஸ்திவாரமாகக் கொண்ட அமைப்பு ஒன்றே மக்கள் சுகவாழ்க்கைக்குரிய வழியாகும். இதற்காக ஏன் நாம் தியாகம் செய்யத் தயாராய் இருக்கக்-கூடாதென்று கேட்கிறேன்.உலகத்தில் பல வகைகளில் ஜீவராசிகள் மரணமடைகின்றன.
பல நோய்களால் இறக்கிறவர்களின் தொகை சாதாரணமல்ல. மதத்தின் பெயரால் யாதொரு விவேகமு-மில்லாமல் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக்கொண்டு உயிரை மாய்த்துக் கொள்கிறார்கள்.
இன்னும் பல வழிகளில் மரணம் அடையும்போது மக்களின் உன்னத வாழ்க்கை அமைப்பை உத்தேசிக்கச் சிலரோ, பலரோ உயிரைத் தியாகம் செய்வதுகூட பெரிய காரியமாகுமோ?மனிதனுக்கு மனிதன் எதற்காக வித்தியாசம் காண்பிக்கப்படவேண்டும் ? அறிவுள்ள எவரும் இனி இந்நிலைமையைச் சகித்துக்கொண்டு ஒரு கணமாவது வாழமுடியாது. பலாத்காரம் கூடாது.
இம்முறைகளை மாற்ற பலாத்காரம் ஒருபொழுதும் வெற்றியடைய முடியாது. பலாத்காரம் பலாத்காரத்தையே பெருக்கும். உண்மையை மறைத்துவிடும். ஆகையால், மக்களுடைய மனத்தை மாற்றப் பாடுபட வேண்டியதுதான் முறையே ஒழிய,பலாத்காரத்தினால் சாதித்துவிடலாமென்று எண்ணுவது மனித இயற்கைக்கு விரோதமான தத்துவமாகும்.
இந்தத் தேசத்திலும் முன்னேற்றமுள்ளவர்களென்றும், பிற்போக்கானவர்களென்றும் இரண்டு கட்சிகளே இருக்க முடியும். இப்படிப் பிரிக்கப்பட்டால் ஒழிய மக்கள் அபிவிருத்தியடைய மார்க்கமில்லை. நமது மக்களுக்கு விஷயத்தை அறியக்கூடிய பகுத்தறிவு விருத்தியடைந்தால் ஒழிய மற்ற எந்த ராஜ்ய முறையாலும் ஒரு நன்மையும் விளைந்துவிடப் போவதில்லை.
------------------- தந்தைபெரியார் -குடந்தையில், 8-7-1934-இல் சொற்பொழிவு - 'பகுத்தறிவு' 9-9-1934
Thanks to: தமிழ் ஓவியா
1 comment:
நன்றி தோழர்
Post a Comment