Sunday, December 7, 2008

துபாயில் வாழும் இந்தியர்களின் மனிதாபிமானமும், வாழை இலை விருந்தும்


முன்னோடிகள் : குடும்பங்களை பிரிந்து வெளிநாடுகளில் வேலைத்தேடி செல்பவர்களில் குறிப்பாக துபாய் வந்தவர்களில் விடுமுறை நாட்களில் மது கடைகளுக்கு செல்பவர்கள் தொடங்கி, வழக்கமாக மதுக்கடைகளிலேயே இருப்பவர்வரை நிறைய பேர்வழிகளை கண்டிருக்கிறோம்.
வரும்போதும் கடன், இங்கு வந்த பிறகும் கடன்வாங்கி கேளிக்கைகளில் ஈடுபடுவதுஎன தங்கள் வாழ்க்கையை கடனில் முழ்கிக்கொண்டும் இதனால் மன உலைச்சலுக்கு ஆளாகி தற்கொலைவரை செல்வதும் இங்கு மிக மிக சாதாரணமாக நடப்பவை. இதனால் தற்கொலை செய்தியை எங்கேனும் கேட்க நேர்ந்தால் கூட துபாயில் இருப்பவர்களுக்கு அது பெரிதான செய்தியில்லை என்றே சொல்லலாம்.

இப்படியான ஒரு சூழலில் (துபாய்) அஜ்மான் என்கிற பகுதியில் வசிக்கும் கட்டுமான தொழில் செய்யும் நம் தமிழ் உறவுகள் கூடி தங்களுக்குள் ஒரு சிறுசேமிப்பு திட்டம் உறுவாக்கி அதன் மூலம் தங்களுக்குள்ளாக தாங்களே உதவிக்கொள்வது என்கிற ஒரு அற்புதமான திட்டத்தினை ஏற்படுத்தி தற்போது மூன்றாம் ஆண்டினை நோக்கி வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று நான் சொன்னால் எத்தனைப்பேர் நம்ப தயாராக இருப்பார்கள் என்பதை புகைப்படத்துடனும் பயனடைந்தவர்களின் பெயர் பட்டியலுடனும் வெளியிடுவதால் இதை படித்தாவது, கேள்விபட்டாவது பலர் இவர்களை பின்பற்றி பலனடைந்தால் நமக்கு மகிழ்ச்சிதான்.

சரி அப்படி என்னதான் இவர்கள் செய்துவிட்டார்கள் என்று கேட்டீர்களானால் என்னால் பட்டியலிடமுடியும். இன்று இவர்களின் அதாவது நண்பர் சிறுசேமிப்பு திட்டக்குழுவினரின் மூன்றாம் ஆண்டு நிறைவுவிழாவிற்கு அழைப்பின் பேரில் கலந்துகொண்டவர்களில் நானும் ஒருவன் என்பதால் இப்படிபட்ட முன்னோடிகளின் அபார செயலை பதிவாகி உலகம் முழுதும் பரவிக்கிடக்கும் புலம்பெயர்ந்தவர்களுடன் பகிர்ந்துகொள்வதில் உறுதியாக மகிழ்வடையளாம்.
1.தாங்கள் எடுக்கும் ஊதியத்தில் 50 திர்ஹம்களை இத்திட்டத்திற்கான சேமிப்பாக வழங்குகிறார்கள். இதை திரு. கோபாலகிருட்டிணன் என்பவர் தலைமையேற்று அனைவரையும் ஒருங்கிணைத்து மாதம் ஒருமுறை கூடி கிடைக்கும் பணத்தை அப்போது யாருக்கு தேவை என்பதை அறிந்து வழங்குவதுடன் அத்தொகைகான குறைந்த அளவு வட்டியாக சிறு தொகையையும் பெற்று சேமிப்பில் சேர்த்துக்கொள்கிறார்கள்.
2.இச்சேமிப்பு தொகையானது உறுப்பினர்களில் யாருக்காவது அவசர பயணமாக தாயகம் செல்ல வேண்டியிருந்தால் பயச்சீட்டு தொகைக்காக அதற்கு வட்டியில்லா கடனாக வழங்கிகொள்கிறார்கள். சம்மந்தபட்டவர் திரும்பியதும் இத்தொகையானது சிறு தவனைமுறையில் பெற்றுக்கொள்ளப்படுகிறது.

3.வழக்கமான விடுமுறையில் செல்பவர்களுக்கு இத்தொகையிலிருந்து 500திர்ஹம் வட்டியில்லா கடனாக வழங்கப்படுகிறது.

4.மேலே குறிப்பிட்ட வட்டிதொகையினை என்ன செய்கிறார்கள்? என்கிற கேள்வியில்தான் இத்திட்டத்தின்மூலம் இவர்கள் அடைந்த வெற்றியின் சிறப்பு தெரிகிறது.

5.இவ்வட்டித்தொகையினை சேர்த்து ஒவ்வொரு ஆண்டும் திட்டத்தின் தேவைக்காக ஒரு குறிப்பிட்ட தொகையை வைத்துக்கொண்டு உபரியாக உள்ள பணத்தை உறுப்பினர்கள் இரண்டு ஆண்டுகளாக பிரித்துக்கொள்வது வழக்கமா இருந்தது.

6.மூன்றாவது ஆண்டாகிய இன்று உபரித்தொகையை கணக்கிட்டு 26 உறுப்பினர்களுக்கும் தலா 10 கிராம் தங்க மோதிரம் வழங்கும் விழா நடைபெற்றது.

இவ்விழாவிற்கு தாய்மண் வாசகர் வட்ட தலைவர் திரு.சே.ரெ.பட்டணம் மணி, அமீரகத் தமிழர் அமைப்பின் முன்னால் தலைவர் திரு.வே.பாரத், தாய்மண் சர்வதேச அறக்கட்டளை நிறுவனர் திரு.ம.சங்கத்தமிழன், செயலாளர் அன்பழகன், துவக்கு இலக்கிய அமைப்பின் தலைவர் திரு.இ.இசாக், அமீரகத் தமிழ்க் கவிஞர் பேரவை செயலாளர் திரு.கவிமதி கலந்துகொண்டனர்.
நிகழ்வில் நண்பர் சிறுசேமிப்பு திட்டத்தின் உறுப்பினர்கள் கோபால கிருட்டிணன், வினோத், கார்த்திக், பெருமாள், மணிமுத்து, சேவுகமூர்த்தி, நாகராஜ், கருப்பையா, முருகானந்தம், மணிமாறன், உதயக்குமார், சரவணன், கிருடிணன், பொன்னுச்சாமி, கண்ணன், போஸ் ஆகியோருக்கு மோதிரம் வழங்கப்பட்டது. விழாமுடிவில் அனைவருக்கும் வாழையிலையில் விருந்து வழங்கப்பட்டது.

Thanks to http://www.adhikaalai.com/



கவிமதி, துபாய்

No comments: