Tuesday, December 30, 2008

மாவீரன் கர்கரேயை காரில் கடத்தி படுகொலை செய்தது யார்?



மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு குறித்த தகவல்கள் மறைந்து போயின. அவை வெளியே தெரியாமல் மறைக்கப்பட்டதன் பின்னணியில் ஓர் அப்பட்டமான அரசியல் சதி காரணமாக இருக்குமோ என்ற சந்தேகம் கலந்த கவலை இந்திய மக்கள் அனைவரின் உள்ளங்களிலும் எழுந்தது.குறிப்பாக மும்பை மீது பயங்கரவாதிகள் தாக்குதல் தொடங்கிய ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே தீவிரவாதத் தடுப்புப் படையின் தலைவர் மாவீரன் ஹேமந்த் கர்கரே, அசோக் காம்தே, விஜய் சாலஸ்கர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கொல்லப்பட்டார்கள்.மாவீரன் கர்கரேயின் மரணம் குறித்து இந்தியாவே அதிர்ச்சியில் ஆழ்ந்த போது சில சக்திகள் மட்டும் குதூகலத்துடன் கும்மாளமிட்டன. மாலேகான் குண்டுவெடிப்பு சதி குறித்த உண்மைகள் இனி வெளிவருமா? குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்களா? என்ற ஏக்கம் கலந்த எதிர்பார்ப்பு நாடு முழுவதும் எழத் தொடங்கியது.இந்நிலையில் கர்கரேயை படுகொலை செய்தது யார்? என்பது குறித்த மர்மங்கள் மனித உரிமை ஆர்வலர்கள் மத்தியிலும் சுதந்திர உணர்வுள்ள புலனாய்வு நிபுணர் கள் மத்தியிலும் எழத் தொடங்கியுள்ளது.கர்கரேயின் மரணம் குறித்த மர்மம் நீடித்த நிலையில், மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சரும், மகாராஷ்டிர மாநில முன்னாள் முதல் அமைச்சருமான அப்துல் ரஹ்மான் அந்துலே நாடு தழுவிய நியாயமான சந்தேகத்தை சதிகாரர்கள் உள்ளம் அதிர உரத்து முழங்கினார். "கர்கரேயின் படுகொலையில் சந்தேகம் இருக்கிறது, கர்கரேயைக் கொன்றது யார்? ஹிந்துத்துவ தீவிரவாதத்தை நேர்மையுடன் வெளியுலகிற்கு அம்பலப்படுத்திய அந்த நேர்மையான அதிகாரியை காமா மருத்துவமனைக்கு செல்லுமாறு தவறாக வழிநடத்தியது யார்? பயங்கரவாதிகள் குண்டு மழை பொழிந்த தாஜ் ஹோட்டலுக்கோ, டிரைடன்ட் ஓபராய் ஹோட்டலுக்கோ, சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்திற்கோ, நரிமன் இல்லத்திற் கோ செல்லவிடாமல் காமா மருத்துவமனைக்கு செல்வதற்கு அவரை தவறாக தகவல் கூறி வழிநடத்தியது யார்?'' என்ற அதிரடி வினாக்களை வீசி நாடாளுமன்ற அவையினைத் திணறடித்தார்.கர்கரே மிகச்சிறந்த நேர்மையான அதிகாரி. அவரது மரணத்தில் மர்மம் உள்ளது, கர்கரேயை படுகொலை செய்தது யார்? என்பது குறித்து தனியாக விசாரிக்க வேண்டும் என அந்துலே தெரிவித்த கருத்துக்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்துர் ரஹ்மான் அந்துலேயின் உரைக்கு கடும் இடையுறு விளைவித்தனர். இது அந்துலேயின் பாகிஸ்தானுக்கு சாதகமான வாதம் எனக் கூறும் அளவுக்கு தங்கள் நிலையை தாங்களே தாழ்த்திக் கொண்டனர். ஒரு நேர்மையான நெஞ்சுரம் மிக்க ஓர் அதிகாரியை இந்த தேசம் இழந்துவிட்டதே என்ற வேதனை கொஞ்சமும் இல்லாத பாஜக கும்பலின் வெற்றுக் கூச்சல் இந்திய மக்களின் மத்தியில் அவர்களுக்கு இழிவைத் தேடித்தந்தது..அப்துர் ரஹ்மான் அந்துலே-யின் நாடாளுமன்ற அறைகூவல் நாட்டையே அவர் பின்னால் திரள வைத்துள்ளது. அந்துலே எழுப்பிய உரத்த சிந்தனை நாடு முழுவதும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது. அந்துலே இந்திய முஸ்லிம்களின் மனசாட்சியினை தட்டி எழுப்பியுள்ளார்.. அதோடு அவரின் நாடாளுமன்ற அறைகூவல் இந்திய தேசத்தை உலுக்கியுள்ளது. அந்துலேவை அமைச்சரவையிலிருந்து அகற்றிவிட வேண்டும் என காங்கிரசுக்குள்ளே உள்ள பாசிச அடிவருடிகளும் முனைப்பு காட்டத் தொடங்கியுள்ளனர். இதனிடையே அந்துலே தனது விலகல் கடிதத்தை பிரதமரிடம் கொடுத்திருப்பதாக தகவல் கள் தெரிவிக்கின்றன. பிரதமரும் சரி, அந்துலேயும் சரி அத்தகவலை உறுதிப்படுத்தவும் இல்லை. மறுக்கவும் இல்லை. ஆனால் அந்துலே எழுப்பியுள்ள கேள்விகளில் உள்ள சத்தியத்தை உணராமல் இந்தியாவில் உள்ள பெரும்பாலான ஊடகங்கள் அப்துர் ரஹ்மான் அந்துலேக்கு எதிரான செய்திகளை மகிழ்ச்சியுடன் வெளியிட்டு வருகின்றன. அந்துலேயின் கருத்தை ஏற்றுக்கொள்ளாதவர்கள் தேசத்துரோகிகள் என்பதே நாட்டு மக்களின் நிலைப்பாடாக இருக்கிறது. இந்நிலையில் காங்கிரஸ் மேலிடம் பொறியில் சிக்கிய எலியாக தவிக்கிறது. அந்துலே அவர்களை அமைச்சர் பதவியை விட்டு வெளியேற்ற வேண்டும் என பாஜக உள்ளிட்ட சக்திகளும், காங்கிரசுக்குள் இருக்கும் பாஜகவின் ரகசிய ஆதரவாளர்களும் துடியாய்த் துடிக்கின்றனர். இந்நிலையில் பதவியை விட்டு நீக்கினால் அந்துலேயின் அரசியல் எழுச்சி உடையதாகவும், அந்துலேயை நீக்குவதால் காங்கிரஸ் மீள முடியாத வீழ்ச்சியை சந்திக்க வேண்டியிருக்கும் என காங்கிரஸ் மேலிடம் முடிவெடுப்பதை தள்ளிப் போட்டுக் கொண்டே செல்கிறது.மும்பை பயங்கரவாத தாக்குதல் சமயத்தில் படுகொலை செய்யப்பட்ட கர்கரேயின் விஷயத்தில் மகாராஷ்டிர அரசு எவ்வித ஆர்வமும் காட்டவில்லை எனத் தெரிகிறது. கர்கரே படுகொலை குறித்து தனியாக விசாரணை ஏதும் செய்யப்பட்டமாட்டாது என மகாராஷ்டிர மாநில அரசு அறிவித்துள்ளது.நாட்டின் வர்த்தக தலைநகரத்தில் ஏற்பட்ட தாக்குதல் குறித்த தகவல் தெரிந்த உடனேயே உயிரை துச்சமென நினைத்து சிங்கமென பாய்ந்து சென்ற ஒரு கடமை வீரன் குண்டு துளைக்காத சட்டை அணிந்தும் கூட மார்பில் சுடப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறார். காமா மருத்துவமனைக்கு காரில் கடத்திச் செல்லப்பட்டு சிறிது நேரத்தில் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் பரவலாக எழுகிறது.கர்கரேயை படுகொலை செய்த பயங்கரவாதிகள் அம்பலப்படுத்தப்படுவது எப்போது என்பதுதான் மக்கள் மனதில் உள்ள கேள்வி.அந்துலேவிற்கு முஸ்லிம் அறிஞர்கள் ஆதரவு!அனைத்து இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் தலைவர் ஜஃபரியாப் ஜீலானி, அந்துலேயின் கருத்தை ஆதரித்திருக்கிறார். கர்கரே படுகொலை குறித்து முழு அளவில் விசாரணை நடத்த வேண்டும், கர்கரேயின் மரணம் தெளிவுப்படுத்தப்பட வேண்டும், அதில் தவறுகள் இருந்தால் அவை மீண்டும் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கர்கரே போன்ற சிறப்பு மிக்க அதிகாரிகளின் வாழ்வும் மரணமும் குறித்த இறுதிக் கேள்வியாக இது அமைய வேண்டும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.இந்திய உலமாக்குழுவின் பொதுச்செயலர் மௌலான நைமூர் ரஹ்மான், அனைத்திந்திய சன்னி முஸ்லிம் வாரியத்தின் தலைவர் மௌலான முகம்மது முஸ்தாக் ஆகியோரும் கர்கரேயின் மரணம் குறித்து விசாரணை தேவை என்று கூறியிருக்கிறார்கள். விசாரணையை மறுப்பவர்கள் உண்மை வெளிபடக் கூடாது என்று விரும்புகிறார்கள். கர்கரே போன்ற அதிகாரிகளின் மரணம் குறித்து கேள்வி எழுப்பாமல் இருக்க முடியாது என்று மௌலானா முஸ்தாக் தெரிவித்திருக் கிறார். ஷியா பிரிவின் அறிஞர் மௌலானா கல்பே ஜாவத் கூறுகையில், `கர்கரே-யின் தியாகம் குறித்து எங்களுக்கு எவ்வித சந்தேகமும் இல்லை. பொருத்த மற்ற நேரத்தில் அவர் கொல்லப்பட்டிருப்பதால் அது சந்தேகத்தை கிளப்பியிருக்கிறது. வேறு பல இடங்களிலும் தாக்குதல் நடத்தப்பட்ட நிலையிலும், கர்கரே காமா மருத்துவமனை நோக்கி தவறாக வழி நடத்தப்பட்டிருக்கிறார்' என்று அவர் தெரிவித்திருக்கிறார். அவர் மேலும் கூறுகையில் குஜராத்தில் இருந்து மும்பைக்கு தீவிரவாதிகள் எளிதாக வருவதற்கு காரணமாக இருந்த பாதுகாப்பில் உள்ள பலகீனத்தையும் விசாரணை செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.இந்திய இஸ்லாமிய மையத்தின் தலைவர் மௌலானா. காலித் ரஷித், ``விசாரணை நடத்துவதால் என்ன தீங்கு நேர்ந்து விடப்போகிறது?'' என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். கர்கரேயின் மரணத்திற்கு வேறு காரணம் இருக்க முடியுமோ என்ற சந்தேகத்தை தெளிவுப்படுத்துவதற்கு விசாரணை அவசியப்படுத்துகிறது. ஒவ்வொருவரும் சரியான தடத்தில் இருந்தால் பிறகு பி.ஜே.பி எதற்காக விசாரணையை எதிர்க்கிறது. கர்கரே உயிரோடு இருந்த போது அவரை தேசதுரோகி என்று அழைத்தது. அவருடைய விசாரணை முறைகளை கண்டித்தது. தற்போது அவர் மரணம் குறித்த விசாரணையை தடுக்கிறது. இதிலிருந்து உண்மை வெளிப்பட பிஜேபி விரும்பவில்லை என்றே தெரிய வருகிறது' என்று காலித் ரஷித் கூறியிருக்கிறார்அந்துலேக்கு ஆதரவாக முலாயம் சிங், மாயாவதி, திக்விஜய் சிங்!ஹேமந்த் கர்கரே படுகொலை குறித்து மத்திய அமைச்சர் அந்துலே யின் கருத்துக்கு மத்தியப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வரும் காங்கிரஸின் பொதுச் செயலாளருமான திக் விஜய் சிங் ஆதரவு தெரிவித்துள்ளார்.பாரதீய ஜனதா, விஸ்வ ஹிந்து பரிஷத், ஆர்.எஸ்.எஸ். போன்றவை மாலேகான் விசாரணை குறித்தும் கர்கரேயின் செயல்பாடுகள் குறித்தும் கடுமையாக விமர்சித்தன. இந்தப் பின்னணியை கவனத்தில் கொண்டு விசாரிக்க வேண்டும் என்றே அந்துலே கருத்து தெரிவித்துள்ளார். இதில் தவறேதும் இல்லை. மும்பை பயங்கரவாத தாக்குதல் நடைபெறும் இடத்திற்கு உடனடியாக செல்லுமாறு உத்தரவிட்டது யார்? என்பது குறித்து விசாரிக்க வேண்டும் என திக்விஜய் சிங் கூறியிருக்கிறார்.கர்கரே ஹிந்துக்களை மட்டும் கைது செய்யவில்லை. எல்லாப் பிரிவுகளில் உள்ள பயங்கரவாதிகளை, கொடிய குற்றவாளிகளைக் கைது செய்தவர் ஹேமந்த் கர்கரே என்று கூறிய திக்விஜய் சிங், பாபர் மஸ்ஜித் தகர்ப்பிற்காக மீண்டும் ஒருமுறை நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்பதாகக் குறிப்பிட்டார்.இதனிடையே அந்துலேவுக்கு முலாயம்சிங்கின் சமாஜ்வாதி கட்சியும், மாயாவதியின் பகுஜன் சமாஜும் ஆதரவு தெரிவித்துள்ளன.மாலேகான் வழக்கின் கதி? தீவிரவாதத் தடுப்பு படையினர் அச்சம்!மாலேகான் குண்டு வெடிப்பில் சங்பரிவாரின் கோர முகத்தை தோலுரித்துக் காட்டியவர் மாவீரன் ஹேமந்த் கர்கரே. ஹிந்துத்துவ பாசிச சக்திகள் விஷயத்தில் நாட்டு மக்கள் எச்சரிக்கை காட்ட வேண்டிய முக்கியமான தருணத்தில் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டார்.கர்கரேயின் திடீர்மறைவு மகாரஷ்ட்ர மாநில தீவிரவாதத்தடுப்பு படையினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மாலேகன் குண்டு வெடிப்பு வழக்கு முன்பு போல் துரித கதியில் இயங்குமா? மாநில அரசிடம் இருந்து முன்பு போலவே ஒத்துழைப்பு கிடைக்குமா என்ற அச்சத்தில் தீவிரவாதத் தடுப்புப் படையினர் ஆழ்ந்துள்ளனர்.அஞ்சா நெஞ்சன் கர்கரே இன்று இல்லை. கர்கரேவுக்கு பல்வேறு வகையிலும் ஒத்துழைப்பு வழங்கிய தீவிரவாதத் தடுப்பு படைக்காக பிரத்யேகமாக விமானத்தையே வழங்கிய சரத்பவாரின் தேசியவாதக் கட்சியைக் சேர்ந்த துணை முதல்வர் ஆர்.ஆர் பாட்டீல் இன்று பதவியில் இல்லை. இத்தகைய நிலையில் இந்த வழக்கு குறித்த கவலை காவல்துறை வட்டாரத்தில் பரவலாக நிலவுகிறது. இருப்பினும் கர்கரேயின் தியாகம், அவர் பாடுபட்டதற்கான உரிய பலனை அடையாமல் விடக்கூடாது என்ற உறுதியில் தீவிர தடுப்புப் படையினர் உள்ளனர்.மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு விசாரணையின் இறுதி கட்டத்தை நெருங்கி விட்டோம் என்கிறார் தீவிர வாதத் தடுப்புப் படையின் கூடுதல் ஆணையர் சுக் விந்தர் சிங்.நாடாளுமன்றத்தில் நெறிக்கப்படும் உரிமைக்குரல்மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ஏ.ஆர் அந்துலே, மராட்டிய மாநில தீவிரவாத தடுப்பு படையின் தலைவர் ஹேமந்த் கர்கரேயின் மரணம் குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. அந்துலே தனது பதவியை சுய இழப்பு (ராஜினாமா) செய்யும் அளவுக்கு நிர்பந்திக்கப்பட்டார்.
இந்துத்துவ பாசிச சக்திகள் கர்கரே யின் மரணத்தால் மகிழ்ச்சியை கொண்டாடிக் கொண்டிருந்த நேரத்தில் அந்த மகிழ்ச்சியில் மண் அள்ளிப்போடும் ஒரு கேள்வியைத் தான் அந்துலே எழுப்பி னார். மராட்டிய மாநிலத்தின் மலேகான் நகரில் நடந்த குண்டுவெடிப்பு தொடர்பாக ஸ்ரீ காந்த் புரோகித் என்ற ராணுவ அதிகாரி, அமிர்தானந்தா என்ற ஆண் சாமியார், பிரக்யாசிங் தாக்கூர் என்ற பெண் சாமியார் உட்பட 10 இந்துத்துவ தீவிரவாதிகளின் கூட்டுச் சதியைக் கண்டறிந்து கர்கரே தேசத்துக்கு வெளிப்படுத்தினார். இது, தீவிரவாதிகள் எல்லாம் முஸ்லிம்கள் என்று கூறிவந்த இந்துத்துவ பாசிஸ்டுகள் வயிற்றில் சயனைடை கரைத்தது. முஸ்லிம்களின் கணக்கில் வரவு வைத்த சாமியார்களின் குண்டுவெடிப்புகளை சல்லடை போட்டு அலசியவர் என்பதால் கர்கரேயின் திடீர் மரணம் முஸ்லிம்கள் மத்தியில் அதிர்ச்சியையும், கவலையையும் தந்தது.தில்லி ஜாமியா நகர் துப்பாக்கி சூட்டில் முஸ்லிம் இளைஞர்களால் சுட்டு கொல்லப்பட்டார் என்று கூறப்பட்ட காவல்துறை ஆய்வாளர் சர்மாவின் சடலப் பரிசோதனை காவல்துறை அறிவித்த தகவலை புரட்டிப் போட்டது அனைவரும் அறிந்ததே. பின் மண்டையில் சுடப்பட்டு முன் நெற்றி வழியே துப்பாக்கிரவை வெளியேறியதாக மருத்துவ அறிக்கை கூறியது. இச்சம்பவத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கையில், காவல்துறை அதிகாரிகளை தீவிரவாதிகள் மட்டும் கொல்வதில்லை என்ற பூடகமான நம்பிக்கை சிறுபான்மை மக்களிடத்தில் ஏற்பட்டுள்ளது.
இந்துத்துவ சக்திகளால் கடுமையாக கண்டிக்கப்பட்ட கர்கரே தனக்கு கொலை மிரட்டல்கள் வருவதாகவும் கூறியிருந்தார். இதனோடு ஒப்பிட்டுப்பார்க்கையில் மும்பை மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை சாதகமாக்கிக் கொண்டு வேறு சக்திகள் கர்கரேயை கொன்றிருக்க முடியுமோ என்ற சந்தேகம் பரவலாக உள்ளது. இதையே அந்துலேயின் கேள்வியும் உறுதி செய்கிறது. மக்கள் மனதில் உள்ள எண்ணங்களையே தனது கேள்வி வெளிப்படுத்தியதாக அந்துலே கூறியுள்ளார்.மும்பை நகரத்தை பயங்கரவாதிகள் தாக்கிக்கொண்டிருந்த போது அந்த பயங்கரவாதிகள் சுடும் இடத்தை நோக்கி மூன்று முக்கிய அதிகாரிகளை வழி நடத்தியது யார் என்று தான் நாடாளுமன்றத்தில் அந்துலே கேள்வி எழுப்பினார். இக்கேள்வியை எதிர்கொண்ட நேரத்தில் ஜனநாயகத்தை அசிங்கப்படுத்திக் கொண்டிருக்கும் பா.ஜ.க. உறுப்பினர்கள் ஆவேசக்குரல் எழுப்பினர், வெளிநடப்பு செய்தனர். அவையில் குளறுபடி செய்ய இதனை ஒரு வாய்ப்பாக்கினர். தாவூத் இபுராஹிம், ஐ.எஸ்.ஐ. யின் கைப்பாவை என்றும் அந்துலேயை அவமானப்படுத்தினர். அந்த நேரம், லல்லு பிரசாத்தை தவிர வேறு யாரும் ஆதரவாக பேசவில்லை. காங்கிரஸில் பெரும்பான்மை உறுப்பினர்கள் மௌனிக்க, அதிலும் ஒரு கூட்டம் அந்துலேவுக்கு எதிராக கண்டனக்குரல் எழுப்பியது.
பிரதமர் மன்மோகன் சிங் எதுவும் கூறாமல் மௌனமாக இருந்துள்ளார். தனது கட்சியை சார்ந்த ஒருவர் அதுவும் குறிப்பாக, சிறுபான்மை நலத்துறை சார்ந்த அமைச்சர் எழுப்பிய கேள்விக்கு இருக்கும் உரிமை குறித்து பிரதமர், சபாநாயகர் முதலானோர் பேசாமல் இருந்தது கண்டிக்கத்தக்கது. தனது கட்சியே தனக்கு ஆதரவளிக்காததும், அதில் இருந்தே எதிர்ப்புக் குரல் எழுந்ததும், பிரதமரே மௌனமாக இருந்துள்ளதும், அந்துலே தனது பதவியை சுய இழப்பு (ராஜினாமா) செய்யக் காரணமாக அமைந்தது. கர்கரேயின் திடீர் மரணத்தால் சிறுபான்மை சமூகத்திற்கு கிடைக்க வேண்டிய நீதியில் குறைபாடு வந்து விடுமோ என்ற ஆதங்கம் சிறுபான்மை நலத்துறை அமைச்சருக்கு ஏன் வரக் கூடாது? இதைக்கூட கேட்காமல் பின்னர் எதற்காக அவர் சிறுபான்மை நலத்துறை அமைச்சராக இருக்க வேண்டும். அதே நேரம் கர்கரே பற்றி நரேந்திர மோடி கூறிய விமர்சனம் விவாதிக்கப்படுவதில்லை என்பதையும் கவனிக்க. மோடி விமர்சித்த காரணத்தால் அவர் வழங்கிய நிவாரண தொகையை கர்கரே மனைவி வாங்க மறுத்தது பற்றி விவாதிக்கப்படுவதில்லை.பாபர் மஸ்ஜித் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்படக்கூடாது என்பதற்காகவே இந்த வருடம் டிசம்பர் 6க்கு பிறகு நாடாளுமன்றத்தை கூட்டியிருக்கும் காங்கிரஸிடம் இதனை எதிர்பார்க்க முடியாது. சட்டமன்றங்கள் மற்றும் நாடாளு மன்றத்தில் அமரும் பொதுக்கட்சிகளின் முஸ்லிம் பிரதிநிதிகள் முஸ்லிம் சமூகத்தின் பிரச்சனைகளை, மனக்குறைகளை வெளிப் படுத்துவதில்லை. ஆனால் தனது அமைச்சர் பொறுப்புக்கு ஏற்ப நடந்து கொண்ட அமைச்சர் அந்துலே பாராட்டுக்குரியவர்.
சிறுபான்மை நலனுக்காக கேள்வி கேட்க முடியாத ஒரு பதவி தனக்குத் தேவையில்லை என்று பதவியை இழக்க முன்வந்துள்ளார் அந்துலே. குலாம் மஹ்மூது பனாத்வாலா போன்ற உறுதிமிக்க அறிவுசார் முஸ்லிம் உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் பேசிய தருணங்களில் எல்லாம், பல கட்சியினர், அவர்களது உரையின் குரல்வளையை நெறிக்கப் பார்ப்பார்கள்... இன்று முஸ்லிம் சமூகத்தின் மீது சுமத்தப்படும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள் குறித்து காங்கிரஸ் கட்சிக்குள்ளிருந்தே சிறுபான்மை உறுப்பினர்கள் கேள்வி கேட்கத் துவங்கி விட்டனர். அதனால் அதிர்வுகள் அதிகரிக்கின்றன. அதே நேரம், கேள்வி கேட்டும் உரிமைகள், முஸ்லிம் சமூகத்திற்கு நாடாளுமன்றத்திலும் மறுக்கப்படுகிறது என்ற உண்மை அந்துலே வழியாக வெளிப்படுகிறது.
அந்துலேவுடன் இணைந்து குரல் கொடுக்கவும் வெளிநடப்பு செய்யவும் முஸ்லிம்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை இருந்திருக்குமானால் பாசிஸ்டுகளின் குரல் வளை நசுக்கப்பட்டிருக்கும்.
நாடாளுமன்றத்தில் முஸ்லிம்களின் குரல் வளை நெறிக்கப்படுவதற்கு எதிராக முஸ்லிம் சமூகம் எழுச்சி பெற வேண்டும்.

3 comments:

Anonymous said...

Very good!

Anonymous said...

Good Blog, I think I want to find me, I will tell my other friends, on all

Anonymous said...

Good article, good things, good feelings, good BLOG!
Saftey Net