Wednesday, January 14, 2009

பொங்கலை உலகத் தமிழர்கள் சிறப்பாகக் கொண்டாட வேண்டும்




மதப் பண்டிகைகளைப் புறந்தள்ளும் வண்ணம் தமிழர் திருநாளாம் பொங்கலை உலகத் தமிழர்கள் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்று சென்னையில் கூடிய திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் வேண்டுகோள் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழன் ஜாதிகளால் பிளவுபட்டு தமிழன் என்கிற ஓரினக் கோட்பாட்டை மறந்தான். பார்ப்பன மதத்தின்முன் மண்டியிட்டு, தமிழன் தன் இன அடையாளப் பண்பாட்டை மறந்தான்.தமிழ் ஆண்டுகள் என்று சொல்லப்படும் 60 ஆண்டுகளின் பெயர்களைப் பார்க்கட்டும்; பிரபவ, விபவ என்று தொடங்கும் 60 பெயர்களும் அசல் சம°கிருதப் பெயர்கள்;

தமிழ் ஆண்டுகள் பிறந்ததாகக் கூறப்படும் புராணக் கதையோ குடலைப் புரட்டக் கூடியது. நாரதன் என்கிற ஆண் கடவுளுக்கும், கிருஷ்ணன் என்கிற ஆண் கடவுளுக்கும் பிறந்த இந்த அறுபது குழந்தைகளும்தான் தமிழ் வருடங்களாம்! தமிழன் இதனை ஒப்புக்கொண்டு ஆண்டுதோறும் வருஷப் பிறப்புக் கொண்டாடுகிறான்.தமிழனுடைய பெயர்கள் தமிழில் இல்லை;

தமிழ்நாட்டின் ஊர்ப் பெயர்களும் சம°கிருத மயம் ஆக்கப்பட்டுவிட்டன. தமிழன் கொண்டாடுபவை விழாக்கள் அல்ல; மாறாக ஆரியப் பண்டிகைகள்!தீபாவளிக்கும், தமிழனுக்கும் என்ன உறவு? கார்த்திகை பண்டிகையைத்தான் கொண்டாடுவதில் பொருள் இருக்கிறதா? சர°வதி பூஜையும், ஆயுதப் பூஜையும் எங்கிருந்து குதித்தன? நவராத்திரிக்கும், தமிழர் வாழ்வுக்கும் ஏதாவது ஒட்டு உறவு உண்டா? பண்டிகைகள் தான் பார்ப்பனியத்தைத் தழுவி நிற்கின்றன என்றால், தமிழன் வீட்டு நிகழ்ச்சிகள் எந்த நிலைக்கு ஆளாகியிருக்கின்றன?

தமிழன் வீட்டு நிகழ்ச்சிகளைத் தலைமை தாங்கி நடத்திட ஒரு தமிழனுக்குத் தகுதி கிடையாது; காரணம், ஆரிய தரும சா°திர விதிகளின்படி தமிழன் பிறப்பால் சூத்திரன் - ஒரு சூத்திரன் எந்த நிகழ்ச்சிக்கும் தலைமை தாங்கிட முடியாது.கல்யாணத்திலிருந்து கருமாதி வரை பார்ப்பனப் புரோகிதன் அழைக்கப்படுவான்; அவன் பாதங்களில் தட்சணையைக் கொட்டிக் கொடுத்து தனது சூத்திர அடிமைத்தன்மையை அன்றாடம் புதுப்பித்துக் கொள்கிறான்.

தமிழன் வீடு திறப்பு விழா கிரகப் பிரவேசம் ஆயிற்று. அதற்கும் ஆரியப் பார்ப்பான்தான் வரவேண்டும். இப்படி தமிழன் என்று கூறுவதற்கு எந்த அடையாளமும் இன்றித் தமிழன் திரிந்து போனான்.இந்த நிலையில்தான் தந்தை பெரியார் என்ற வரலாற்று நாயகரின் மகத்தான பணி தமிழர் சமுதாயத்துக்குக் கிடைத்தது.ஆரியர் வேறு - திராவிடர் வேறு என்பதை விளக்கினார். பார்ப்பான் கற்பித்த கடவுளின் தோளில்கூட பூணூல் தொங்குவதைச் சுட்டிக்காட்டினார்.

கோயில் கட்டிய தமிழன் கோயில் கருவறைக்குள் நுழைய முடியவில்லையே ஏன் என்ற வினாவை எழுப்பியவரும் அவரே! உம் வீட்டு நிகழ்ச்சிகளில் தமிழுக்கு இடம் இல்லையே - சிந்தித்ததுண்டா என்று கேட்டவரும் அவரே! கடவுளின் பெயரால் இந்த வேற்றுமை நடக்கிறது; மதத்தின் பெயரால் தமிழினம் ஒடுக்கப்பட்டுள்ளது; சாத்திரங்களின் பெயரால் தமிழன் இழிவுபடுத்தப்பட்டு இருக்கிறான் என்பதை எடுத்துச் சொல்லிச் சொல்லி மரத்துப் போய்க் கிடந்த தமிழனிடத்தில் சுயமரியாதைச் சூடு போட்டு விழித்தெழச் செய்த வரலாற்று மாற்றத்திற்குப் பெயர்தான் தந்தை பெரியார்;

அவர் கண்ட அமைப்புக்குப் பெயர்தான் திராவிடர் கழகம்.உலகம் முழுவதும் அறுவடைத் திருவிழா நடைபெறுகிறது. தமிழர்களின் அறுவடைத் திருவிழா தை முதல் நாளான பொங்கல்தான்! ஆம், அதுதான் தமிழன் விழா என்று அறுதியிட்டுக் கூறினார் அறிவுலக ஆசானாம் தந்தை பெரியார்.

பார்ப்பனர்களோ உழவுத் தொழிலைக் கேவலப்படுத்தி யுள்ளனர்; விவசாயம் பாவத் தொழில் என்பது அவர்களின் மனுதர்மக் கோட்பாடு.வேளாண் திருவிழாவான தமிழர் பண்பாட்டுப் பொங்கல் நாளை ``சங்கராந்தி’’ என்று மாற்றியது ஆரியம்!இவற்றையெல்லாம் தமிழர்கள் சிந்திக்கவேண்டாமா? தமிழன் என்கிற இனவுணர்வு பெறவேண்டாமா? அதனால்தான் திராவிடர் கழகம் தீர்மானம் நிறைவேற்றியது.

தமிழர்கள் பொங்கலைக் கொண்டாடவேண்டும்; மத விழாக்களைப் புறந்தள்ளவேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. தமிழன் மீது நிகழ்த்தப்பட்ட பண்பாட்டுப் படையெடுப்பை முறியடிக்கும் அடையாளம்தான் தமிழர்கள் பொங்கல் விழாவை தனித்தன்மையுடன் கொண்டாடுவதாகும்.

No comments: