சர்வதேச சட்டங்கள் அனைத்தையும் காற்றில் பறக்கவிட்டு, 22 நாட்களாக கஸ்ஸாவில் இஸ்ரேல் நடத்திய ஆக்ரமிப்புக்கு எதிராக உறுதியான நிலைபாடு எடுக்க வேண்டும் எனக் கோரி இரான் அதிபர் மஹ்மூத் அஹ்மதி நஜாத், கஸ்ஸா படுகொலை உச்ச கட்டத்தை அடைந்து கொண்டிருந்தபோது சவூதி அரசருக்கு வெளிப்படையாக ஒரு கடிதம் எழுதியிருந்தார். அக்கடிதத்தின் முக்கியப் பகுதிகள்:
அளவற்றக் கருணையாளனான அல்லாஹ்வின் பெயரால்...!
சவூதி அரசரான அப்துல்லாஹ் பின் அப்துல் அஸீஸ் அல்-சவூத் அவர்களுக்கு,
அல்லாஹ்வின் கருணையும் அருளும் உங்கள் மீது எப்பொழுதும் பொழியட்டும் எனப் பிரார்த்திக்கின்றேன்.
நிரபராதிகளும் உதவி செய்ய எவருமில்லாதவர்களுமான கஸ்ஸாவிலுள்ள அப்பாவி மக்களுக்கு எதிராக, நாகரீமற்றவர்களான சியோனிச அரசு அக்கிரமும் அராஜகமுமான ஆக்ரமிப்பைத் துவங்கி இன்றோடு 19 நாள்கள் கடந்து விட்டன என்பதைத் தாங்கள் அறிவீர்கள்.
தரை, கடல், ஆகாய வழியிலான அனைத்து வழிகளும் இறுக்கப் பூட்டப் பட்டு, எல்லா வழிகளும் அடைக்கப் பட்ட நிலையில் கடுமையான வெடிகுண்டுத் தாக்குதலையும் கஸ்ஸா மக்கள் எதிர்கொள்கின்றனர்.
பெண்கள், குழந்தைகள், ஊனமுற்றோர் உட்பட சாதாரண அப்பாவி மக்கள் தங்களின் சொந்த மண்ணில் வைத்து கருவறுக்கப் படுகின்றனர். கஸ்ஸாவில் நடக்கும் நிகழ்வைக் கண்ணுறும் எவரது இதயமும் வெடிக்கும்; மனதில் தீப்பிடிக்கும்.
ஜனநாயகத்தின், மனித உரிமைகளின் பிறப்பிடம் எனத் தன்னைத் தானே உரிமை கொண்டாடும் வன்சக்திகள், சியோனிஸ அரசுக்கு ஆயுத சப்ளை செய்து ஆக்ரமிப்பும் இன அழிப்பும் செய்வதற்காக மட்டுமே இத்தகைய நரமாமிசம் உண்ணும் அரசை இங்கு உருவாக்கினர். இஸ்ரேலின் செயல்களுக்குக் கண்ணை மூடி ஆதரவு நல்குவதோடு, குற்றங்கள் செய்வதற்குத் தேவையான அவகாசத்தை அவர்களுக்குக் கொடுக்க ஐ.நா போன்ற சர்வதேச அமைப்புகளை விலைக்கு வாங்கவும் செய்கின்றன.
வன்சக்திகளின் செயல்பாடுகளிலும் அவர்களின் செய்திகளிலும் நமக்கு எவ்வித ஆச்சரியமும் இல்லை. ஆனால், முன்பு எப்பொழுதும் இதுவரை நடந்திராத அளவிற்கான இந்த இன அழிப்பை, கண்டும் காணாதது போன்று நடிக்கும் இஸ்லாமிய-அரபு அரசுகளின் நடவடிக்கைகள் ஆச்சரியம் அளிக்கக் கூடியவை! வருத்தமளிக்கக் கூடியவை!.
எதிர்த்து நிற்பதற்கு எதுவுமே இல்லாத ஒரு சமூகம், எங்கிருந்தாவது ஓர் அனாயாசமான எதிர்ப்பு வருமா என்று எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
ஆக்ரமிப்பாளர்களின் மிருகச் செயல்பாடுகளின் முன்பு தலை கவிழ்ந்திருக்கும் நம்மை இறைவன் மன்னிக்கட்டும்.
சியோனிஸ அரசுக்கு எதிர்காலம் இல்லை என்பது நாமனைவரும் தெரிந்த ஒன்றாகும். நிராசையின் காரணத்தினாலேயே அவர்கள் இப்பொழுது அராஜகம் புரிகின்றனர். சுதந்திரமாகச் சிந்திக்கும்-பேசும் அனைத்து மக்களும் நாடுகளும் சியோனிஸ அரசின் அக்கிரமங்களுக்கு எதிராகக் குரல் உயர்த்தி விட்டனர்.
சவூதி அரசரும் புண்ணிய பூமிகளான மக்கா-மதீனாவின் பாதுகாவலரான தாங்கள், இக்கொடுமையான நிகழ்வில் காண்டும் மௌனத்தைக் கலைப்பீர்கள் எனவும் இஸ்லாமிய சமூகத்தின் அன்புக்குப் பாத்திரமான குழந்தைகளைக் கொன்றொழிக்கும் சியோனிஸ கொடூரத்திற்கு எதிராகக் கடுமையான நிலைபாட்டை எடுப்பீர்கள் எனவும் நான் எதிர்பார்க்கின்றேன்.
இதன் மூலம் முஸ்லிம் உலகத்தில் பிரிவினை விதைகளைத் தூவலாம் என ஆசை கொள்ளும் வன்சக்திகளின் எதிர்பார்ப்பைத் தகர்க்கத் தங்களின் உறுதியான நிலைபாட்டினால் முடியும் என்ற நம்பிக்கை எனக்குண்டு.
சுதந்திர வேட்கையுள்ள கஸ்ஸாவிலுள்ள வீரப் போராளிகளின் தீரமான போராட்டத்திற்கு வெற்றியளிக்க நான் இறைவனிடம் பிரார்த்திக்கின்றேன்.
சியோனிஸ அரசு போன்ற கொடுமையாளர்களை அவன் அழிப்பான் எனவும் நான் எதிர்பார்க்கின்றேன்.
அன்புடன்,
மஹ்மூத் அஹ்மதி நஜாத்.
No comments:
Post a Comment