Saturday, January 31, 2009

மாபெரும் நாட்டுப்பற்றாளர் திப்பு சுல்தான்!




‘எவன் போரிட அஞ்சுகிறானோ அவன் தன் படை வீரர்களை போரிடுக என்று சொல்லுவதற்கு யோக்கியமற்றவன்’ என்று பேசியவர் திப்பு. ஹைதர் அலிக்கும் ஃபகீருன்னிசாவுக்கும் மகனாக திப்பு நவம்பர் 20, 1750ல் தேவனஹள்ளியில் பிறந்தார்.


தனது 17வது வயதிலேயே மைசூர் போரில் வெள்ளையரை எதிர் கொண்டார். ஹைதர் அலியின் கொள்ளு தாத்தா ஷேக் வாலி முகம்மது காலத்தில் தான் 17ம் நூற்றாண்டில் தில்லியில் இருந்து குல்பர்க்கா நோக்கி குடும்பம் நகர்ந்தது. குடும்பம் அரண்மனை சுற்றிய வேலைகளில் படர்ந்தது. அமைச்சர்களாக குடும்பத்தினர் நுழைந்தனர்.


ஹைதர் முறையான கல்வி இல்லாதவர். ஆனால் திப்புவிற்கு கல்வி வாய்ப்பை மேம்படுத்தினார். ஹைதரின் தளபதி காசிகான் திப்புவிற்கு ராணுவப் பயிற்சி அளித்தார். தந்தையாரின் மரணத்திற்குப் பிறகு திப்பு பெத்தனூர் எனுமிடத்தில் 1783, மே 4ல் எளிய விழாவில் பதவியேற்றார். 400 மைல் நீளமும் 300மைல் அகலமும் கொண்ட ஆட்சிப் பரப்பு. தமிழ்நாட்டில் திண்டுக்கல் வரை வந்திருந்தார்.


போர் என்றால் போர்க்களத்துடன் மட்டுமே இருக்க வேண்டும். அப்பாவி மக்களைக் கொன்றொழிக்கக் கூடாது; எதிரியின் குடும்பத்தாரும், குழந்தைகளும் மரியாதையாக நடத்தப்பட வேண்டும் என்பது திப்புவின் கட்டளை. மத சகிப்புத் தன்மை குரானின் அடிப்படை என்று பேசுவார். அனைவரும் ஓர் சமூகமாக மாற வேண்டும் என்பது அல்லாவின் விருப்பமெனில் அது நடைபெறும். அதற்குரிய நற்காரியங்களில் மனம் செலுத்து / செய் என்றவர் திப்பு.


மதவெறியன் திப்பு என்று தீட்டப்பட்ட சொற்சித்திரங்கள் ஆதார வலுவின்றி நொறுங்கி வீழ்கின்றன. இந்துக்கள் தான் அவருடைய தலைமை அமைச்சரும், ராணுவத் தளபதியுமாக இருந்தனர். பல இந்துக் கோவில்களுக்கு ஆண்டு தோறும் திப்புவின் கருவூலத்தில் இருந்து கொடை முறையாகச் செல்லும்.


அவரைப் பற்றிய ஆங்கிலேயரின் வரலாற்றுக் குறிப்புகள் திரித்துக் கூறப்பட்டவை என வரலாற்றாய்வாளர் பி.என்.பாண்டே போன்றோர் நிறுவியுள்ளனர்.திப்பு கூடுதல் மதப்பற்றாளராக இருந்தாலும் தந்தையின் அடியொற்றி மதசகிப்புத் தன்மையை பின்பற்றினார். சிருங்கேரி கோயிலின் தலைமைப் பீடத்திற்கு கன்னட மொழியில் அவர் எழுதிய 30 கடிதங்கள் மைசூர் தொல்லியல் துறையால் 1916ல் கண்டுபிடிக்கப்பட்டன.


பொதுவாக அரசர்களின் கடிதங்கள் தங்கள் பெயர் மேலே குவிக்கப்பட்ட வடிவத்தில் தான் அமைந்திருக்கும். ஆனால் இக்கடிதங்களில் “சுவாமிஜி” என்று கடிதத் தலைப்பிலும் திப்புவின் பெயர் கடித இறுதியிலும் காணப்படுகிறது.மூன்றாம் மைசூர் போர் காலத்தில் தேசுராம் பாவ் மரத்தா ராணுவம் சிருங்கேரியைக் கொள்ளையடித்தது. சாரதா தேவி சிலையை இடமாற்றியது. இதை அறிந்ததும் திப்பு இருந்த இடத்திலேயே சாரதா தேவி சிலையை நிறுவிட பெத்தனூர் மாவட்ட அதிகாரிக்கு உத்தர விட்டார்.


தனது கடிதத்தில் “சிரித்துக் கொண்டே தீயசெயல் செய்பவர்கள் பின்னொரு காலத்தில் அழுது கொண்டே அதற்காக வருத்தப்படுவார்கள்” என்ற வடமொழிக் கவிதையை சுட்டிக் காட்டி எழுதுகிறார். அக்கோவிலுக்கு இரண்டு பல்லக்குகள் திப்வுவால் பரிசளிக்கப்பட்டன. வழிபாட்டுத் தலங்களுக்கு திப்பு கொடுத்த மரியாதையை இக்கடிதங்கள் மூலம் நாம் உணர முடிகிறது.


நஞ்சன் கூடு லட்சுமி காந்த கோவிலுக்கும், மேல்கோட்டின் நாராயணசாமி கோவிலுக்கும் யானை, நகை உட்பட ஏராளமான பொருள்களை வழங்கியுள்ளார். கோவில் மணிஓசைக்கும் மசூதியின் தொழுகை அழைப்பிற்கும் சம மரியாதை தந்தார். மசூதி அருகே அமைந்திருந்த நரசிம்ம கோயில், கங்காதரேசுவரர் கோயில் இரண்டிலும் தினசரி வழிபாடு எவ்வித இடையூறுமின்றி திப்பு ஆட்சிக் காலத்தில் நடந்தது.


சில இந்துக் கோயில்களில் ஏற்பட்ட உள்சச்சரவுகளைக் கூட திப்பு தலையிட்டு தீர்த்து அமைதிப்படுத்தியதாக அறிய முடிகிறது. அவரது அரசாங்க உயர் பதவிகளில் ஏராள இந்துக்கள் அமர்த்தப்பட்டிருந்தனர். நிதி மற்றும் வருவாய் - பூர்ணய்யா, காசாளர் - கிருஷ்ண ராவ், சட்டம்ஒழுங்கு - சம அய்யங்கார், வெளி நாட்டுத் தூதரக அலுவல் சீனுவச ராவ், அப்பாஜி ராவ் என்று பட்டியல் நீள்கிறது.


சாதி மதத்திற்கு அப்பாற் பட்டு பொருத்தமானவரைத் தேர்வு செய்தல் என்ற அணுகுமுறையை அவர் கடைபிடித்தார்.“இந்து முஸ்லிம் ஒற்றுமைக்கு திப்பு அடையாளமாகத் திகழ்கிறார். தனது சொந்த மக்களின் ஆதரவைப் பெறாத எவராலும் பலம் வாய்ந்த அய்ரோப்பிய சக்தியை எதிர்த்து தொடர்ந்து போர்களை நடத்தியிருக்க முடியாது.


திப்பு இராணுவத்தினர் மற்றும் மக்கள் மத்தியில் மிகுந்த செல்வாக்குடன் விளங்கினார். இஸ்லாமின் அற்புதமான சூபி இயக்கத்தின் ஆர்வலர். இந்துக்களை மதிக்கத் தெரிந்தவர். இந்து சோதிடர்களிடம் கலந்து பேசத் தயங்காதவர்” என்று தனது யங் இந்தியா பத்திரிகையில் ஜன 1930ல் பெருமிதம் பொங்க காந்தி எழுதுகிறார்.பிரெஞ்சு நாட்டுடன் உறவை பலப்படுத்திக் கொண்டார்.


புரட்சிகரமான எண்ணத்திற்கு இடமளிக்கும் ‘ஜாக்கோபின் கிளப்’ என்பதை திப்பு தொடங்கினார். அதில் இருந்து 59 உறுப்பினர்களுள் அவரும் ஒருவர். சுதந்திர, சமத்துவ, சகோதரத்துவ எண்ணங்கள் அங்கே பரிமாறிக் கொள்ளப்பட்டன. பிரெஞ்சுக் குடியரசின் 5ம் ஆண்டு நினைவை ஒட்டி 1797ல் இக்கிளையை துவக்கினார். அம்மன்றத்தில் ஜனநாயகக் கோட்பாடுகள், அரசியலமைப்புச் சட்டம், சட்டமியற்றும் முறைமைகள் குறித்து விவாதிக்கப்பட்டன.


சுதந்திரத்துக்கான விடுதலை மரக் கன்று ஒன்றையும் அவர் நட்டார். தன்னை மன்னன் திப்பு என்றழைப்பதை விட “சிட்டிசன் திப்பு” என்று பெருமிதம் பொங்க அழைத்துக் கொண்டார்.ஆங்கிலேயர் வரவு ஆபத்தின் அறிகுறி. ஆங்கிலேயரிடமிருந்து தங்களது அரசுகளைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதை காலத்தே உணர்ந்தவர் திப்பு. அண்டை நாட்டு அரசுகளை ஆங்கிலேயே எதிர்ப்புக்காகத் திரட்டியவர்.


பிரெஞ்சு, துருக்கி, ஈரான், ஆப்கானிஸ்தான் போன்ற வெளிநாடுகளுடன் உறவுகளை பலப்படுத்திக் கொண்டவர். கான்ஸ்டான்டி நோபிள், பாரீஸில் தூதரகங்களை நிறுவியவர். மாவீரன் நெப்போலியனுடன் கடிதத் தொடர்பு கொண்டதாக அறிகிறோம். உலக நாடுகளில் மைசூரை அறியச் செய்தவர். 17 வயதிலேயே அன்றைய மதராஸில் ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பெனிகளைக் கலக்கியவர்.


மீர் காசிம் போன்றவர்களைத் தோற்கடித்த பக்சார் வீரன் என்று புகழ் பெற்ற மன்றோவை காஞ்சிபுரத்தில் ஓட ஓட விரட்டியவர் திப்பு. பின்நாட்களில் நெப்போலியனை வென்ற ஆர்த்தர் வெல்லெஸ்லி கூட திப்புவின் முன் நிற்க முடியாமல் போனது வரலாறு.மக்களின் சமூக மற்றும் பொருளாதார மேம்பாடு குறித்து திட்டமிட்டவர்.


நாணய அச்சடிப்பு, நாள்காட்டி அளவையியல், நிதி மற்றும் வங்கி வர்த்தகம், விவசாயம், தொழில், ஒழுக்க நெறிகள் என்ற பன்முக சிந்தனை செயல்பாடு கொண்டவர். அரசு எந்திர முறையில் மேற்கத்திய வடிவங்களை புகுத்திய முதல் ஆட்சியாளர் என மதிப்பிடப்படுகிறார்.முதன் முதலாக வங்கி நிர்வாக முறையை வர்த்தகத்திற்கு பயன்படுத்தியவர் திப்பு. கூட்டுறவு வங்கி சிறு சேமிப்பு முறையை ஊக்குவித்தவர்.


தொழில் வர்த்தகம் ஆகியவற்றில் கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்தவர். பட்டு, சந்தனம், மிளகு, ஏலம், தேங்காய், தங்கம், யானை, தந்தம் ஆகிய அனைத்து வியாபாராங்களிலும் மைசூர் புகழ் பெற்று விளங்கியது. மேற்கு நாடுகளில் இதற்கானச் சந்தையை ஒழுங்கமைத்தவர் அவர். அந்நிய நாட்டினர் எவர் கையிலும் மேற்கூறிய வர்த்தகம் சிக்கிவிடக்கூடாது என்பதில் கவனம் செலுத்தினார். ஏற்றுமதி, இறக்குமதி அரசாங்கக் கட்டுப்பாட்டில் நடந்தது.


ராணுவத் தளவாடங்களுக்கு மட்டுமல்லாமல் துணி, காகிதம், கண்ணாடி, சர்க்கரை போன்ற பலவற்றிற்குமான தொழிற்கூடங்களை அமைத்தார். கப்பல் கட்டுமான தொழிலை சிறப்பாக்கிட வேண்டும் என்ற கனவை வைத்திருந்தார். 100 கப்பல் கட்டுவதற்கான ஆணையை 1793ல் வெளியிட்டிருந்தார். சீரங்கப் பட்டினத்தில் இரும்பு எஃகு தொழிற்சாலையை நிறுவினார்.


தாரமண்டல் என அதற்குப் பெயரிட்டார். பெங்களுர், சித்ரதுர்கா, பெத்தனூர், சீரங்கப்பட்டினம் ஆகிய நான்கு இடங்களில் கிளைகளை நிறுவினார். பதூல் முஜாஹிதீன் எனும் இராணுவ பத்திரிகையில் ராக்கெட் குறித்து திப்பு எழுதியிருப்பதாக நாம் அறிகிறோம். ‘தாரமண்டல்’ என்று பெயரிட்டு அப்பகுதியில் ராக்கெட் மற்றும் வெடிமருந்துகள் தயாரிக்கப்பட்டதாகவும் திப்புவின் வீழ்ச்சியின் போது 9000 எண்ணிக்கையில் ராக்கெட் இருந்ததாகவும் கூறப்படுகிறது.


அப்துல் கலாம் ‘இந்தியாவில் ராக்கெட் தொழில்நுட்பம்’ குறித்து 1991ல் ஆற்றிய உரையில் திப்புவின் தொழில்நுட்பம் குறித்து வியந்து பேசினார்.பல நாடுகளிலிருந்து விதை மற்றும் தாவர வகைகளைக் கொணரச் செய்தார். உழுபவர்க்கு தரிசு நிலங்களை தந்து விவசாயத்தை மேம்படுத்தினார். அதோடு அந்த நிலங்களை வாரிசுதாரருக்கு உரியதாக்கிடவும், யாரும் அவர்களிடமிருந்து அபகரிக்க முடியாதென்பதையும் சட்டமாக்கினார். ஜாகீர் வரியை நீக்கினார். விவசாயத்திற்குக் கடனுதவி கொண்டு வந்தார். கட்டாய உழைப்பைத் தடை செய்தார்.


அவசியமற்ற வழக்குகளில் கால விரயம் ஏற்பட்டு விடாமல் தடுத்திட கிராமத் தகராறு தீர்ப்பாயங்களை ஊக்குவித்தார். தண்டனை முறைகளைக் கூட மாற்றினார். அபராதம், கசையடி போன்றவற்றை மாற்றி மரங்களை நடவேண்டும், குறிப்பிட்ட தாவர வகைகளை நட்டு இவ்வளவு காலம் பராமரிக்க வேண்டும்; இந்த அளவுக்கு வளர்க்க வேண்டும் என்றெல்லாம் தண்டனை முறைகளை உருவாக்கினார்.


தனது மகன் ஃபதே ஹைதர் அனுமதியின்றி வேறொருவர் தோட்டத்தில் காய் பறித்ததற்கு தண்டனை வழங்கினார். கிருஷ்ணராஜ சாகர் அணைக்கட்டில் கீழ்க்கண்ட வார்த்தைகளை பொறிக்கச் செய்தார். “அரசாங்கம் இந்த அணையைக் கட்டி வருகிறது. பயிர், காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றிற்கான பாசன வசதியை எவரும் பெறலாம்”.சீரங்கப்பட்டினத்தில் ஜாமி அல் உமர் என்ற பெயரில் பல்கலைக்கழகம் நிறுவ பெரு விருப்பம் கொண்டார்.


ஃபாஜி அக்பர் என்ற பெயரில் செய்தி பத்திரிகை தொடங்கினார். அதில் எழுதினார். பெர்ஷியன், அரபி, உருது போன்ற மொழிகளுடன் கன்னடமும் மராத்தியும் அறிந்திருந்தார். ஐரோப்பிய மொழிகளில் பிரெஞ்சு, ஆங்கிலம் கற்றறிந்தார். தனது ஆட்சிக் காலத்தில் 45 புத்தகங்களை வெளியிட வைத்தார். அவருடைய நூலகத்தில் ஒளரங்சீப்பின் கையெழுத்துப் பிரதியான குரான் இருந்தது.


இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட புத்தகங்கள் இருந்தன. சூபி துறவிகளின் மாபெரும் ஆல்பம் ஒன்றை தொகுத்து வைத்திருந்தார்.புகையிலைப் பழக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தவர் திப்பு. திருமணக் கொண்டாட்டங்களில் ஆடம்பர செலவினங்களுக்கு கட்டுப்பாடு விதித்தார். ஆதரவற்ற பெண்களையோ, குழந்தைகளையோ விற்பதை தடைசெய்தார் என்ற செய்தி ஆறுதல் தரும் வேளையில் அப்படிப்பட்ட நடைமுறை வழக்கத்தில் இருந்தது அதிர்ச்சி அளிக்கிறது.


மதுவிலக்கை அமுல்படுத்தியவர் திப்பு. “மது விலக்கை மதரீதியாகப் பார்க்க வேண்டியதில்லை. பொருளாதாரம் சார்ந்த ஒன்று. துவக்கத்தில் நமது கருவூலம் பாதிக்கப்படலாம். ஆனால் நமது மக்களின் நன்னெறி உயரும். நன்னடத்தை மிகுந்த எதிர்கால இளைஞர்களை உருவாக்க வேண்டியது நமது பொறுப்பு. நமது கருவூலக் கவலையை விட நமது மக்களின் நன்னெறி மற்றும் ஆரோக்கியம் உயர்ந்ததல்லவா?” என்று மீர்சாதிக் என்பவருக்கு 1787ல் தந்த குறிப்பில் நாம் காண முடிகிறது.


மனித குலம் கண்ணீருடனும் செந்நீருடனும் எழுப்பக் கூடிய மாட மாளிகைகளும் பெரும் அணைக்கட்டுகளும் நமது சாதனைகளாக முடியாது, புகழையும் சேர்க்காது என்றார். “நாம் வாழ்வதற்கும் சாவதற்கும் மாபெரும் நோக்கம் இருக்க வேண்டும். நமது தேசத்தின் ஆன்மா விவசாயத்தில் இருக்கிறது. நமது வளமான நிலத்தில் நாம் தரும் உழைப்பிற்கு பலன் உறுதி.


பஞ்சமும் தேவையும் அறியாமையாலோ சோம்பேறித் தனத்தாலோ அல்லது லஞ்ச லாவண்யத்தாலோ வருகிறது” என்று 1788ல் சுற்றறிக்கை ஒன்றை தனது அதிகாரிகளுக்கு திப்பு அனுப்பினார்.ஆங்கிலேயரிடம் இருந்து தனது அரசியல் விடுதலைக்காக, சுதந்திரத்தைக் காப்பதற்காக உறுதியாகப் போராடியவர். உயிர் நீத்தவர்.


நூறாண்டு குள்ளநரியாக வாழ்வதை விட ஒருநாள் சிங்கநிகர் வாழ்க்கை போதும் என்றார். உலகளாவிய திப்புவின் முயற்சிகளை முறியடிப்பதில் பிரிட்டன் முக்கிய பங்காற்றியது. ஆங்கிலேயர்கள் தனியாக திப்புவோடு போராடி வெல்ல முடியவில்லை. மராட்டிய மராத்தாக்களுடனும் அய்தராபாத் நிசாமுடனும் உடன்பாடு கொண்டனர்.


அவர்களின் உதவியுடன் மைசூர் சீரங்கப்பட்டினத்தில் திப்புவைத் தோற்கடித்தனர். 1792 மார்ச் 22ல் திப்பு ஆங்கிலேயருக்கு உடன்பட்டு கையெழுத்திட நேர்ந்தது. தனது ராஜ்யத்தில் பாதியை இழந்தார். இருமகன்களை பிணை வைக்க நேர்ந்தது. கருணையில்லாமல் கார்ன் வாலீஸ் அவரது மகன்களை கல்கத்தாவிற்குக் கொண்டு சென்றார்.திப்பு மைசூர் போர்கள் நான்கிலும் பங்கேற்றவர்.


கிழக்கிந்திய கம்பெனியின் தலைமையிடமிருந்த ‘லீடன்ஹால் ஸ்டிரீட்’ திப்பு குறித்த நடுக்கத்திலிருந்தது. முதல் இரண்டு போர்களிலும் ஆங்கிலேய ராணுவம் திப்பு மற்றும் இந்திய வீரர்களால் முறியடிக்கப்பட்டது. மைசூரில் போர் குதிரைகள் இறக்கை கட்டிப் பறந்தன போன்று போரிட்டதாக அலெக்சாந்தர் போப் என்பவர் பதிவு செய்கிறார்.


செப்.1780களில் 36 ஆங்கில ராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டனர். 500க்கும் மேற்பட்ட அய்ரோப்பிய வீரர்கள் சிறை பிடிக்கப்பட்டனர். பிப்.1782ல் கர்னல் பிரைட்வொயிட் என்பவரை தஞ்சாவூருக்கு அருகில் திப்பு தோற்கடித்ததாக அறிகிறோம். 1400 சிப்பாய்களையும் 100 அய்ரோப்பியர்களையும் அவர்களது ஆயுதங்களுடன் கைப்பற்றியதாகத் தெரிகிறது.ஆங்கிலேயரின் தொடர் வற்புறுத்தல்களுக்கு திப்பு உடன்பட மறுத்தார்.


நான்காவது மைசூர் போரில் மே 4, 1799ல் திப்பு வீர மரணம் எய்தினார். சாதாரண படை வீரனைப் போன்றே தனது தாய் நாட்டைக் காப்பதற்காக தெருவிறங்கிப் போராடினார். ஆங்கிலேய ராணுவத்தினன் ஒருவன் அவரது உடைவாளைப் பறிக்க முயன்ற போது திப்பு அவனை தன் வாளால் வீழ்த்தினார் என்று அறிகிறோம்.


புகழ் வாய்ந்த அவ்வாள் லண்டன் கொண்டு செல்லப்பட்டது. 1988ல் தான் இந்தியா அவ்வாளை மீண்டும் பெற்றது. அவரது வாரிசுகள் திப்புவின் ஆட்சியை மீண்டும் கொணர்வோம் என்ற முழக்கத்தில் 1806 வேலூர் எழுச்சியில் முன் நின்றார்.எளிய வாழ்க்கை முறையை விரும்பிய திப்பு பொதுவாக எல்லோருக்கும் கிடைக்கக்கூடிய உணவு வகைகளையே எடுத்துக் கொள்வார்.


கடிதங்களைத் தானே எழுதும் பழக்கம் உடையவர். மாபெரும் நாட்டுப்பற்றாளராக, குடிமக்களின் மேன்மை குறித்த சிந்தனையாளராக, படிப்பறிவு மிக்கவராக, போராடும் வீரனாக என்று பல்வேறு சிறப்புகளுடன் வாழ்ந்தவர் திப்பு.

No comments: