Sunday, January 4, 2009

தமிழர்களைவிட சிங்கள வெறியர்கள்தான் முக்கியமா? : ராமதாஸ்








டெல்லியில் திட்டம் தீட்டி செயல்படும் அதிகாரிகளுக்கு தமிழ் மக்களை விட இலங்கை போர் வெறியர்கள்தான் முக்கியமானவர்களா? என்று பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு, டாக்டர் ராமதாஸ் உருக்கமாக கடிதம் எழுதியுள்ளார்.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:-



மும்பையில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலின் விளைவாக ஏற்பட்டுள்ள நிலைமைகள் குறித்து நீங்களும், வெளியுறவுத்துறை மந்திரியும் அதிகக் கவனம் செலுத்த வேண்டிய நிலையில் இருக்கிறீர்கள் என்பதை நாங்கள் உணர்ந்திருக்கிறோம். என்றபோதிலும், சிறுபான்மைத் தமிழ் மக்களுக்கு எதிராக இலங்கையில் ஆயுதப் படைகள் நடத்திவரும் கொடுமைகளையும், அதன் விளைவாக முதல்-அமைச்சர் கருணாநிதி வேதனையுடன் சுட்டிக் காட்டியுள்ளபடி `ஒவ்வொரு நொடியும் ஒரு தமிழன் உயிர் இழப்பதையும் ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. மணிக்கு மணி நிலைமை மோசமடைந்து வருகிறது.



மனித உரிமைகளை அப்பட்டமாக மீறி வருவதாக இலங்கைக்கு எதிராகத் தொடர்ந்து குற்றம் சாற்றப்பட்டு வருகிறது.



இனப்படுகொலையும் மக்களுக்கு எதிரான பிற கொடுமைகளும் நடந்து கொண்டிருக்கிற அல்லது அத்தகைய ஆபத்து ஏற்படக்கூடிய `உடனடி ஆபத்து' நிலையில் உள்ள 8 நாடுகளில் ஒன்றாக இலங்கையை, நிïயார்க்கில் இருந்து செயல்படும் இனப்படுகொலைத் தடுப்புத் திட்ட அமைப்பின் அறிக்கையில் சேர்த்திருப்பது, இலங்கைக்கு எதிராக அண்மையில் வெளியாகியிருக்கும் கடும் கண்டனமாகும்.
நிலைமை மோசமாக இருந்தபோதிலும், இலங்கை அரசு கவலைப்படாமல் இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்திய அரசு செயல்படாமல் இருப்பதே இதற்குக் காரணம்.

கடலுக்கு அப்பால், தங்கள் சகோதரர்களும், சகோதரிகளும் வேட்டையாடப்படுவதை, ஏதும் செய்ய முடியாமல் பார்த்துக் கொண்டிருக்க வேண்டிய நிலையில் உள்ள 6 கோடிக்கும் மேற்பட்ட இந்தியத் தமிழர்களின் கவுரவத்தையும், சுய மரியாதையையும், கொழும்பில் உள்ள அடக்குமுறை அரசின் முகவர்களுடன் கூட்டாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் டெல்லியில் உள்ள தப்பெண்ணம் படைத்த சில அதிகாரிகள் இனியும் காலில் போட்டு நசுக்க முடியாது. டெல்லியிடம் `சலுகைகளுக்காக' எப்போதும் கெஞ்சிப் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் நிலைக்கு அவர்களைக் குறுக்கிவிட முடியாது.



இரண்டு நிகழ்வுகள் தெளிவாகத் தெரிகின்றன. டிசம்பர் 4-ந் தேதி பிரதமரைத் முதல்-அமைச்சர் கருணாநிதி தலைமையில் தமிழக அனைத்துக் கட்சித் தலைவர்கள் சந்தித்துப் பேசிய 2, 3 நாட்களுக்குள், இலங்கையின் போர்ப்படைத் தளபதி சரத் பொன்சேகா திமிர்த்தனமாகப் பேசினார்: ``போர் நிறுத்தம் செய்யுமாறு இலங்கை அரசை ஒருபோதும் இந்திய அரசு வலியுறுத்தாது. தமிழ்நாட்டின் அரசியல் `கோமாளிகள்' கூறுவதையும் அது செவிமடுக்காது'' என்றார்.



முன்னதாக, மத்திய அரசு செயல்பட வலியுறுத்தி கடந்த அக்டோபரில் தமிழகச் சட்டப் பேரவை ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றிய உடனே, முன்னாள் தூதர்கள் என்.என்.ஜா, கே.பி.எஸ்.மேனன், அனைத்திந்தியக் காங்கிரசின் வெளியுறவுப் பிரிவு இணைச் செயலர் ராவ்னி தாக்கூர் ஆகியோர் அடங்கிய உயர் நிலைக் குழு ஒன்று டெல்லியில் இருந்து கொழும்புக்குச் சென்றது.



மத்திய அரசு, தமிழக அரசியல்வாதிகள் கூறுவதை செவிமடுக்காது என்றும், போர்ப்படை நடவடிக்கைகளை நிறுத்துமாறு இலங்கை அரசை வலியுறுத்தாது என்றும் பொருள்படும் வகையில் அந்தக் குழு அங்கு வெளிப்படையாக அறிக்கைகள் வெளியிட்டது. டெல்லிக்கும், கொழும்புக்கும் இடையே கமுக்க உடன்பாடு இல்லை என்றால் இவை நடந்திருக்காது.
இலங்கை தொடர்பாக இந்தியாவின் அறிவிக்கப்பட்ட நிலைப்பாடு என்பது நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் தொடர்ந்து தெளிவுபடுத்தப்பட்டிருக்கிறது. பிரதமரான நீங்களே கூறியிருக்கிறீர்கள்:




``ஒன்றுபட்ட இலங்கை என்ற கட்டமைப்புக்குள், அனைத்து சமூகத்தினரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய வகையில், அமைதி வழியில் பேச்சு நடத்தி அரசியல் தீர்வு காண்பதில்தான் முன்னேற்றத்துக்கான வழி அடங்கியிருக்கிறது'' என்று நாடாளுமன்றத்துக்கு அளித்த ஆண்டு அறிக்கையில் பாதுகாப்பு அமைச்சகம் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளது: ``போர்ப்படைத் தீர்வு இல்லை என்பதை நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.



எனினும், இலங்கை அரசு வெறித்தனமாகப் பின்பற்றி வரும் `போர்ப்படைத் தீர்வு'க்கு முடிவு கட்டுவதற்கும், அரசியல் தீர்வுக்கான நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கும், இந்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உங்களிடம் அளித்த அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளபடி, நேரடியாக இல்லை என்றாலும், மறைமுகமாக ஐ.நா. பாதுகாப்பு மன்றம் மூலமாக செய்திருக்கலாம்.



டெல்லியின் அக்கறையற்ற, உணர்ச்சியற்ற அணுகுமுறையையே இது காட்டுகிறது. ஏனெனில், 'இனப் படுகொலை வெறியாட்டத்தால்' பாதிக்கப்படுவோர், உதவிக்கும் குரல் கொடுப்பதற்கும் வழியற்ற தமிழர்கள் என்பதுதான் இதற்குக் காரணம்.



குறிப்பாகத் தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களும், பொதுவாக இந்தியாவில் உள்ள தமிழர்களும் ஒன்றைத் தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள். டெல்லியில் உள்ள திட்டம் தீட்டிச் செயல்படும் அதிகாரிகளுக்கும் அக்கறையற்ற கொள்கை வகுப்பாளர்களுக்கும், சட்டத்துக்குக் கட்டுப்பட்ட கோடிக்கணக்கான தமிழ் மக்களைவிடவும், கொழும்பில் உள்ள போர் வெறியர்களும் இனப்படுகொலை வெறியர்களும்தான் மிகவும் முக்கியமானவர்களா?




இந்த கோடிக்கணக்கான தமிழ் மக்களின் கவுரவம், சுயமரியாதை குறித்து அவர்களுக்கு எந்த அக்கறையும் இல்லையா? இதை இறுதி பதிலாக எடுத்துக் கொள்ளலாமா? காலம் கடப்பதற்கு முன்பு எங்களுக்கு விடை தேவை. நீங்கள் அவசர உணர்வுடன் செயல்படுவீர்கள் என்று நான் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டுள்ளேன். இவ்வாறு டாக்டர் ராமதாஸ் அறிக்கையில் கூறியுள்ளார்.


No comments: