Saturday, October 31, 2009

பாதை காட்டும் படிப்பு : உரத்த சிந்தனை


நம்மை 300 ஆண்டுகளாக அடிமைப்படுத்தி ஆண்ட ஆங்கிலேயர்கள், தங்களது வரவு - செலவு கணக்கெழுத கணக்கு பிள்ளைகளை உருவாக்கும் நோக்கில், "மெக்காலே' என்ற ஆங்கிலேயரைக் கொண்டு உருவாக்கிய கல்வித் திட்டத்தை தான் இந்தியாவில் இன்றளவும் தொடர்கிறோம். இந்தக் கல்வித் திட்டம், ஏட்டுச் சுரைக்காயாக இருக்கிறதே தவிர, வாழ்க்கையை, தான் வாழும் சமூகத்தை, வாழ்வியல் நெறிகளைச் சொல்லி, மனதை, அறிவை விசாலப்படுத்துவதாக இல்லை.










ஸ்டேட் போர்டு, சென்ட்ரல் போர்டு, மெட்ரிகுலேசன், ஆங்கிலோ இந்தியன், கேந்திரிய வித்யாலயா என்று பல பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட்டதால், மாணவர்களிடையே ஏற்றத்தாழ்வு எண்ணத்தை வளர்த்தன. ஸ்டேட் போர்டில் படிப்பவன் சாதாரணமானவன், சென்ட்ரல் போர்டில் படிப்பவன் மேலானவன் என்ற மன நிலையை உருவாக்கின. அதற்கு ஏற்றாற்போல், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., - ஐ.எப்.எஸ்., போன்ற உயர் பதவிக்கான படிப்புகளைப் படிக்க, சென்ட் ரல் போர்டு மாணவர்களுக்கு எளிதாக இருந்தது. "எல்லாருக்கும் ஒரே விதமான பாடத்திட்டம்' என, கல்வித் திட்டத்தை மாற்றும் முயற்சியில், மத்திய, மாநில அரசுகள் தற்போது ஈடுபட்டுள்ளன. இதற்கு முன் கல்வித்துறை உட்பட பல்வேறு துறைகளில், சீர்திருத்தங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. ஆனால், அதில் கிடைத்த அனுபவங்கள், "புதிய மொந்தையில் பழைய கள்'ளாகவே இருந்திருக்கின்றன. இப்போதைய கல்வித்துறை சீர்திருத்தமும் அப்படி அமையாமல், "புதிய பாத்திரம்; புதிய அமிர்தம்' என்று சொல்லத்தக்க வகையில் முழுமையான, முற்றிலும் பலன் தரக்கூடியதாக அமைய வேண்டும்.









"வாழ்வியல் கல்வி' என்பது தான், வாழுகிற சமூகத்தின் அனைத்து துறைகளையும் பற்றி தெரிந்து கொள்ள வைப்பது. ஒரு மாணவன் ஐந்தாம், பத்தாம், பிளஸ் 2வோடு படிப்பை நிறுத்தினாலும், படிப்பை விட்டு வெளியேறிய பின், இவர்கள் அனைவரும் சமூக அறிவில் ஒரே தளத்தில் தான் நிற்கின்றனர். அவர்கள் அதுவரை கற்ற கல்வி, வாழ்க்கைக்கு எந்த வகையிலும் உதவுவதில்லை. இன்றைய கல்வித் திட்டப்படி, படித்து வெளிவருகிற மாணவர்களுக்கு, சரியாக ஒரு கடிதம் எழுதவோ, வங்கியில் பணம் போட ஒரு செலான் நிரப்பவோ, ஒரு வேலைக்கு மனு செய்வது கூட எப்படி என்று தெரிவதில்லை. நம் நாட்டின் பிரதமர், ஜனாதிபதி யார் யார் என்பதும், கிராமத்து பஞ்சாயத்து தலைவர், தொகுதி சட்டசபை உறுப்பினர் பெயர் கூட தெரிவதில்லை. பார்லிமென்ட், சட்டசபை, உள்ளாட்சி மன்ற அமைப்புகள் பற்றிய விவரங்கள், அவற்றின் தேர்வு முறைகள், அவர்களுக்கான அதிகாரம், மக்களுக்கு பயன்படுகிற முறைகள், இவற்றைப் பற்றியெல்லாம் அறிந்து கொள்ளாமல் இருக்கும் நிலையை மாற்றி அமைக்க வேண்டும். ஐந்தாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் காலகட்டத்தில், ஒவ்வொரு மாணவனையும், அவனைப் பற்றி, அவனுடைய ஆரோக்கியம், சமூகத் தேவை, சுயசிந்தனையுள்ளவனாக மாற்றும் வகையில், வாழ்வியல் கல்வி போதிக்க வேண்டும்.










இன்றைய புள்ளி விவரப்படி, ஏறக்குறைய ஆறு லட்சம் பேர், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2வோடு தங்கள் படிப்பை கைவிட்டு, ஏதோ ஒரு வேலை அல்லது சுயதொழில் செய்தோ வாழ முயல்கின்றனர். அவர்களுக்கு, இப்போதைய கல்வி முறை எந்தவிதத்திலும் வழிகாட்டுவதாக இல்லை. படித்த கல்விக்கு தகுந்த வாழ்வியல் அறிவைப் பெற வேண்டுமானால், ஆரோக்கிய சிந்தனை, போதை வஸ்துக்களின் எதிர்ப்பு, புத்தகம், பத்திரிகை படித்தல், மனிதநேயப் பண்புகள், குடும்ப உறவுகள், நமது மண்ணின் விவசாய முறைகள், கிராமப்புற மேம்பாடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்ச்சி, நமது கலாசார பெருமைகள், மொழி, இன, நாட்டுப் பெருமை போன்ற வாழ்வியல் பாடங்கள், பாடத்திட்டத்தில் இடம் பெற வேண்டும். சில ஆண்டுக்கு முன் வரை, ஐந்து ஆண்டுகள் படித்திருந்தாலும், தமிழில் ஒரு சொற்றொடரை சரிவர படிக்க முடியாத குழந்தைகள் நிறைய பேர் இருந்தனர். செய்தித்தாள், புத்தகங்கள் படிப்பது, ஒவ்வொரு மாணவனின் கட்டாய கடமை என்று சீரமைக்கப்பட்டால், வாழ்வியல் சார்ந்த கல்வி என்ற இலக்கை அடைய எளிதாக இருக்கும்.









பிறர் துன்பத்தை துடைக்கிற தேவைப்படுவோருக்கு தன்னாலானதை செய்கிற, பாகுபாடு இல்லாத மனிதநேயம் மலர்ந்து விட்டால், கற்ற கல்வி பயனுள்ளதாகிவிடும். அவற்றை எல்லா மாணவர்களும் புரிந்து, உணர்ந்து வாழ்க்கையில் கடைபிடிக்கிற அளவிற்கு, பாடத்திட்டத்தில் அதற்குண்டான சம்பவங்களை இடம் பெற செய்ய வேண்டும். ஒரு மாணவன், பிளஸ் 1 முதல் பிளஸ் 2 வரை ஒரு மரத்தை நட்டு, பராமரித்து, உருவாக்கி இருக்க வேண்டும். அப்படி செய்தால், அதற்கு மதிப்பெண் அளிக்கப்படும் என்ற நிலையை உருவாக்க வேண்டும். அப்படி செய்தால், ஒவ்வொரு வருடமும் லட்சக்கணக் கான மரங்களை உருவாக்க முடியும்.









நேற்றைய வரலாறு தெரியாதவனுக்கு இன்றைய வரலாறு புரியாது; இன்றைய வரலாறு புரியாவிட்டால், நாளைய வரலாறு உருவாகாது. எனவே, நமது மண்ணின் வரலாறு, கலாசார பெருமை பற்றியெல்லாம் சொல்லிக் கொடுப்பது சமூகக் கடமை. சோறு மட்டுமே வாழ்க்கையல்ல; அன்பு, பாசம், பற்று, மொழி நேசம், இனப்பற்று, தேசபக்தி எல்லாம் கலந்து உருப்பெறுவது தான் அர்த்தமுள்ள வாழ்க்கை. அதை மாணவச் செல்வங்களுக்கு உணர்த்த வேண்டும். இன்னும் சேர்க்க வேண்டிய பயனுள்ள பாடத்திட்டங்களைப் பற்றி, அந்தந்த துறை சார்ந்த வல்லுனர்களின் மூலம் கருத்துகளை திரட்ட வேண்டும். மாதிரி பாடத்திட்டம் உருவாக்கப்பட்டு, அந்த மாதிரி பாடத் திட்டத்தை அறிவிக்க வேண்டும். அதை மீண்டும் ஒரு ஆய்வு செய்து, பின் அந்தப் பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால், பிளஸ் டூ வகுப்பு முடித்து வெளியே வரும்போது, எல்லா விஷயங்களைப் பற்றிய தெளிவோடும், புதிதாக ஏற்படும் பரிணாம வளர்ச்சிக்குத் தக்கவாறு, தன்னை எவ்விதம் மாற்றிக் கொள்ள வேண்டும் என்ற தெளிவோடும் மாணவர்கள் இருப்பர்.









- சைதை துரைசாமி, சிந்தனையாளர், சமூக சேவகர், அரசியல்வாதி

Thanks to: Dinamalar Daily

No comments: