Monday, November 2, 2009

திருச்சிசிதம்பரத்தில் ஜனவரியில் உலக சைவ மாநாடு



சிதம்பரத்தில் 2010 ஆண்டு, ஜனவரி 5, 6, 7 ஆகிய தேதிகளில் 12-வது உலக சைவ மாநாடு நடைபெறவுள்ளது என்றார் பேரூர் இளைய ஆதீனம் தவத்திரு மருதாச்சல அடிகளார்.


திருச்சி மாவட்டம், மணப்பாறை, அண்ணாநகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அருள்மிகு அன்பு பிள்ளையார் திருக்கோயில் குடமுழுக்கு விழாவில் பங்கேற்ற அவர் மேலும் கூறியதாவது:



சிவநெறி கலந்த சைவத்தை போற்றுவதற்காக லண்டனில் 1985-ம் ஆண்டு மெய்கண்டார் ஆதீனத்தைச் சேர்ந்த சிவத்திரு சிவநந்தியடிகள் உலக சைவப் பேரவையைத் தோற்றுவித்தார்.


இந்த அமைப்பின் சார்பில் சென்னை, சிங்கப்பூர், பிரான்ஸ், இலங்கை, தென்னாப்பிரிக்கா, தஞ்சை, கனடா, மொரீஷியஸ், மலேசியா, ஆஸ்திரேலியா, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை என இதுவரையில் 11 மாநாடுகள் நடைபெற்றுள்ளன.



தற்போது, உலக சைவப் பேரவையும், அண்ணாமலைப் பல்கலைக்கழகமும் இணைந்து சிதம்பரத்தில் அடுத்த ஆண்டு, ஜனவரி 5, 6, 7 ஆகிய தேதிகளில் நடத்தவுள்ள உலக சைவ மாநாடானது, இந்தியாவில் நடைபெறும் இரண்டாவது மாநாடு ஆகும். மாநாட்டுப் பணிக்கு தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் தலைவராகவும், பழனி ஆதீனம் தவத்திரு சாது சண்முக அடிகளார் துணைத் தலைவராகவும், சிரவை ஆதீனம் குமரகுருபர அடிகளார் பொருளாளராகவும், சிதம்பரம் மெüன மடம் தவத்திரு மெüன சுந்தரமூர்த்தி அடிகளார் இணைச் செயலராகவும், என்னை பொதுச் செயலராகவும் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.



மாநாட்டுப் பணிகளுக்கான கலந்தாய்வுக் கூட்டம் திருச்சி தமிழ்ச் சங்கக் கட்டடத்தில் நவ. 16-ம் தேதி நடைபெற உள்ளது.



மாநாட்டில் வெளி நாடுகளில் இருந்து சைவ நெறி பரப்பி வரும் 200-க்கும் மேற்பட்ட அறிஞர்கள், தமிழகத்தில் உள்ள சைவ அமைப்புகளின் பொறுப்பாளர்கள் என சுமார் 2000 பேர் பங்கேற்க உள்ளனர்.



இந்த மாநாட்டில் கயிலைக் குருமணி பேரூர் அடிகளார், பிரான்ஸ் தவத்திரு யோகானந்த அடிகளார் ஆகியோர் அமைப்பாளர்களாக இருந்து பணியாற்றுவார்கள்.



மேலும், திருவாவடுதுறை ஆதீனம், தருமபுரம் ஆதீனம், மதுரை ஆதீனம், மயிலம் பொம்மபுரம் ஆதீனம், துறையூர் திருமுதுகுன்றம் ஆதீனம், நல்லை ஆதீனம், இலங்கை தவத்திரு பாலமுருகனடிமை ஆகியோர் அருள்புரவலர்களாகப் பணியாற்றுகின்றனர்.



திருமுறை வழிபாட்டு அமைப்பாளர்கள் அனைவரும் இந்த மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுக்கிறேன் என்றார் மருதாசல அடிகளார். மணவைத் தமிழ்மன்றத் தலைவர் கரு. ராஜகோபாலன், திருக்குறள் பயிற்றக நிறுவனர் புலவர் நாவை. சிவம், தியாகேசர் ஆலை மேனிலைப் பள்ளித் தலைமையாசிரியர் லோக. அருளரசன், நகர்மன்ற உறுப்பினர் பெ. ராமமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.

No comments: