Friday, November 27, 2009

இறைவனிடம் கையேந்துங்கள்!!!


இஸ்லாம் எனும் மார்க்கம் இரண்டு பெரு நாட்களை இந்த உலகத்துக்கு அளித்தது. முதலாவதாக, நோன்புப் பெருநாள் எனும் ரம்ஜான், ஏழை, எளிய மக்களுடன் உண்ண உணவும், உடுக்க உடையும் அளித்து மிகவும் மகிழ்ச்சி அடைய வைக்கும் திருநாள். இரண்டாவதாக, தியாகப் பெருநாள்.

இந்த இரு பெரு நாட்களும், தங்கள் உடல், பொருள், ஆவி மூன்றும் சரியான வழியில் பயிற்சி பெற வைக்கிறது.






உடலாலும், உள்ளத்தாலும் பிறருக்கு தீங்கு செய்யவோ, நினைக்கவோ கூடாது. நம் சேமித்த பொருளில் ஒரு பகுதி, ஏழை, எளியோருக்கு தர்மம் செய்வது, நம்மை படைத்த அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவது, இதுவே ஒவ்வொரு மனிதனின் கடமை. இஸ்லாமிய சரித்திரம் ஆண்டு துவக்கமான முஹர்ரம் மாதமும், கடைசி மாதம் துல்-ஹஜ், இதுவும் மாபெரும் தியாகம் உள்ளடக்கிய மாதம்.

கருணைக் கொண்ட ரஹ்மானாகிய அல்லாஹ், ஒருமுறை நபி இப்ராஹீம் (அலை) கனவில் தோன்றி, "உம்முடைய மகனை என் பெயரால் அறுத்து பலி இடு' என சொன்ன போது, தன்னைப் படைத்தவனின் கட்டளை நிறைவேற்ற, தன் மகன் நபி இஸ்மாயிலிடம் (அலை) கூற, "தங்களுக்கு அல்லாஹ் என்ன கட்டளையிட்டாரோ அதை நிறைவேற்றுங்கள்; நான் நிச்சயமாக பொறுமையோடு இருப்பேன்' என பதிலளித்தார். பிறகு இஸ்மாயிலை அழைத்துக் கொண்டு, மினா எனும் மலையடிவாரத்தில், பிள்ளைப் பாசம் தடுக்காமலிருக்க, கண்களை துணியால் கட்டி, கழுத்தில் கூரிய கத்தியை வைத்து, "அல்லாஹ் மிகப்பெரியவன்' எனக் கூறியதும், மகன் இருந்த இடத்தில், ஒரு கொழுத்த ஆடும், மகன் விலகியிருந்த காட்சியை கண்டார்.










"எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே. அனைத்தின் மீது ஆற்றல் கொண்டவன் அவனே! அவனைத் தவிர, வணக்கத்துக்குரியவன் வேறில்லை. நீயே என் அதிபதி' என, தன்னை சோதித்த இறைவனுக்கு நன்றி செலுத்தினார். இதன் நினைவாகவே, எங்கள் நபிகள் முகம்மது (ஸல்), "இந்நாளில் நீங்கள் அனைவரும் அந்தத் தியாகம் நினைவில் கொள்ள, உங்களில் வசதியுள்ளவர்கள் ஓர் ஆட்டை குர்பானி கொடுத்து, ஏழை எளியவர்களுக்கு கொடுத்து கொண்டாடுங்கள்' என்றார். "நீங்கள் அறுத்த ஆட்டின் ரத்தமோ, இறைச்சியோ என்னை அடைவதில்லை. ஆனால், உங்கள் உள்ளங்கள் எண்ணங்களை நான் நன்கறிந்தவனாக உள்ளேன்' என, அளவற்ற அருளாளன் பகர்கிறான்.


இத்தியாகத் திருநாளில், எல்லாரும் இறைவனிடம் கையேந்துங்கள். எல்லாம் வல்ல இறைவனே, புகழ் அனைத்தும் உனக்கே. இவ்வுலகை படைத்து பராமரிப்பவனே, அளவற்ற அருள் பொழிபவனே, நிகரற்ற அன்புடையவனே, தீர்ப்பு நாளின் அதிபதியே, உலக மக்கள் அனைவருக்கும் நேர்வழி காட்டுவாயாக. அன்பு, பாசம், பரிவு, சகோதரத்துவம் ஓங்கச் செய்து, நம் நாட்டில் சுபிட்சம், சாந்தி, சமாதானம், மனிதநேயம் ஏற்படுத்துவாயாக. நோய், நொடியற்ற வாழ்வு, இல்லாமை இல்லை என்ற நிலை ஏற்படுத்தி, எல்லாருக்கும், இந்த நல்ல நாளில் சிறப்பான வாழ்வளிக்க உன்னையே வேண்டுகிறோம் வல்ல நாயனே! ஆமீன்.


குர்பானி: இறைவனின் நண்பர் ஹஸ்ரத் இபுராஹீமின் (அலை) ஈடு இணையற்ற தியாகத்தை, இந்த குர்பானி உணர்த்துகிறது. நீண்ட நெடிய காலம் தவமிருந்து இறைவனின் கொடையாகக் கிடைத்த அம்மகனை இறைவன் கேட்கிறான் எனும் போது, அம்மகனை இழக்கத் துணிந்த தியாகம், நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது. அந்த உணர்வில், நாம் பிராணிகளை அறுத்துப் பலியிடும் போது வெளிப்படும் தியாக உணர்வை, இறைவன் விரும்புகிறான். அதற்காக நன்மைகளை வழங்குகிறான். "பிராணியின் இறைச்சியோ அல்லது ரத்தமோ இறைவனை சென்றடைவதில்லை என்றாலும், இறையச்சமே அவனைச் சென்றடைகிறது!' (23-37) "உமது இறைவனைத் தொழும் இன்னும் பிராணியை அறுத்துப் பலியிடும்!' (108-2) அல்குர்ஆனின் இந்த வசனங்கள், குர்பானியின் நோக்கங்களைத் தெளிவுபடுத்துகிறது. இதன் வழிமுறைகளைத் தெரிவிக்கும் பல நபிமொழிகளும் வந்துள்ளன.


நபி (ஸல்), இருதுரும்பை ஆடுகளை அதன் விலாப்புறமாக படுக்க வைத்து, பிஸ்மில்லாஹி அல்லாஹீ அக்பர் என்று கூறியவர், தனது கரத்தால் அறுத்தார். (அறிவிப்பு: அனஸ் (ரலி) நூல்: புகாரி, முஸ்லிம்) "குர்பானி கொடுக்க நாடியவர் பிறை 1 முதல் 10 வரை தனது முடியை கத்தரிக்க வேண்டாம்; நகங்களை வெட்ட வேண்டாம்!' (அறிவிப்பு: உம்முஸலமா (ரலி) நூல்: முஸ்லிம்) "ஒட்டகம் ஏழு பேருக்காகவும், மாடு ஏழு பேருக்காகவும், குர்பானி கொடுக்க வேண்டும்!' (அறிவிப்பு: ஜாபிர் (ரலி), அபூதாவூது, முஸ்லிம்) நபியிடத்தில், "எப்படிப்பட்ட பிராணிகளை குர்பானி கொடுப்பதை விட்டும் தவிர்த்து கொள்ள வேண்டும்?' எனக் கேட்டதற்கு, "நான்கு' என தனது விரலால் சைகை செய்துவிட்டுக் கூறினார்.


தெளிவாகத் தெரியுமளவு நொண்டு பிராணி; காது அறுக்கப்பட்டது தெளிவாக தெரியும் பிராணி; நோயுள்ளது என தெளிவாகத் தெரியும் பிராணி; எலும்புகள் தெரிகிற பலவீனமான பிராணி. (அறிவிப்பு: பர்ரா இப்னு ஆஸிப், நூல்: அஹ்மது, திர்மிதி) குர்பானி பிராணியின் ஒவ்வொரு முடிக்கும் நன்மையிருக்கிறது. மேலும், அது இபாதத்தாக இருக்கிற காரணத்தால், அதைத் தேர்ந்தெடுக்கும் விஷயத்திலே அதைப் பலியிடும் விஷயத்திலே மார்க்கத்தின் வழிமுறைகளை பேண வேண்டும்.


* ஸதக்கத்துல் பித்ரு கடமையானவர்களின் மீது குர்பானி வாஜிபாகிவிடும்.

* வீட்டிலுள்ள ஒவ்வொருவருக்கும் ஸதக்கத்துல் பித்ரு கடமையாகும். அளவு வசதி இருந்தால், அதை தனித்தனியாகக் கணக்கிட்டு, தனித்தனியாக ஒவ்வொருவருக்காகவும் குர்பானி கொடுக்க வேண்டும்.

* ஆடு, மாடு, ஒட்டகம் இவற்றில் ஆண், பெண் இரு இனங்களையும் குர்பானி கொடுக்கலாம்.

* வேறு விலங்கினங்களை குர்பானி கொடுக்கக் கூடாது.

* ஆடு ஒருவருக்காகவும், மாடு, ஒட்டகம் போன்றவற்றை ஏழு நபர்கள் கூட்டாக குர்பானி கொடுக்கலாம்.

* ஆட்டை குர்பானி கொடுக்கும் போது, அதில் அகீகா என்ற நிய்யத் சேர்ந்திருந்தாலும் குர்பானி கொடுக்கலாம்.

* குர்பானி பிராணியை தானே அறுப்பது சிறந்தது.

* குர்பானி பிராணியின் முடியை வெட்டக் கூடாது.

* குர்பானியின் இறைச்சியை அவரே வைத்துக் கொள்ளலாம். என்றாலும், அதை மூன்று பங்கிட்டு, ஒன்றை தனக்கும், இன்னொன்றை உறவினர்களுக்கும், இன்னொன்றை ஏழைகளுக்கும் பகிர்ந்தளிப்பது சிறப்பு.

* குர்பானியின் தோலை சொந்தமாகப் பயன்படுத்தலாம். அதை விற்றால் அதை தர்மம் செய்துவிட வேண்டும்.


இவ்வகை முறைகளைக் கையாண்டு, நமது குர்பானியை நிறைவு செய்ய வேண்டும். வேறு நோக்கங்கள் ஏதுமில்லாமல், இறை திருப்தி ஒன்றையே நோக்கமாகக் கொண்டு செய்யப்படும் குர்பானி தான் சிறந்தது. அப்படிப்பட்ட குர்பானியை மேற்கொண்டு, சிறப்படைய இறைவன் நல்லருள் பாலிப்பானாக!


"ஹஜ்' என்ற புனிதப் பயணம்: இஸ்லாமிய மார்க்கத்தில் ஐந்து கடமைகள் உண்டு. கலிமா, தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ். கலிமா என்றால், "லா இலாஹா இல்லல்லாஹ்; முஹம்மதுர் ரசுவில்லாஹ்' என்பதாகும். இதன் அர்த்தம், இல்லை இறைவன், அல்லாஹ்வை தவிர. முஹம்மத், அல்லாஹ்வின் தூதர். இந்த கலிமாவை ஒவ்வொரு முஸ்லிமும் மனப்பூர்வமாக சொல்ல வேண்டும். தினசரி ஐந்து வேளை தொழுவது, முஸ்லிம்கள் கடமை. ப்ஜர் (காலை), லுஹர் (பகல்), அஸர் (மாலை), மரிஃப் (அந்தி நேரம்), இஷா (இரவு). ஆண்டுக்கு ஒருமுறை பிறை பார்த்து, ரமலான் மாதத்தில் ஒரு மாதம் முழுக்க 29 அல்லது 30 நாட்கள் நோன்பு வைப்பது மூன்றாவது கடமை.



வசதியுள்ளவர்கள் தங்களிடம் உள்ள செல்வத்திலிருந்து 2.5 சதவீதம், வருடந்தோறும் ஏழைகளுக்கு உதவி செய்வது ஜகாத். வசதியுள்ளவர்கள் வாழ்க்கையில் ஒருமுறை, ஹஜ் எனும் புனிதப் பயணம் செல்வது, அவர்களது ஐந்தாவது கடமை. மக்கா மாநகரில் உள்ள மஸ்ஜிதே, "ஹரம்' எனும் பள்ளிவாசல், முஸ்லிம்களின் முதல் பள்ளிவாசல். இதை கட்டியவர் இப்ராஹிம் (அலை); புதுப்பித்தவர் முகம்மது நபி (ஸல்).



வருடந்தோறும் ஜில் ஹஜ் மாதத்தில், மக்காவிற்கு புனிதப் பயணம் செல்வது ஹஜ். மற்ற காலங்களில் சென்றால், அது உம்ரா. ஒவ்வொரு வருடமும் ஹஜ் காலங்களில் 35 லட்சம் ஹாஜிகள், காபத்துல்லாஹ்வில் கூடுகின்றனர். இனம், நிறம், மொழி, தேசம் என்ற பாகுபாடின்றி, அத்தனை மக்கள் அங்கே கூடுவது பார்க்க பரவசமான காட்சி.


 "லப்பைக் அல்லாஹும்மா லப்பைக், லப்பைக் லாஷரீகலக லப்பைக், இன்னல் ஹம்த வல் நியமத...'

"இதோ வந்து விட்டோம் இறைவா! உன் அழைப்பை ஏற்று உன் இடத்திற்கு, இதோ வந்துவிட்டோம் இறைவா... உன் அருட்கொடைகளுக்கு நன்றி கூற...'

அங்கே சென்றிருக்கும் ஷாஜிகளின் புனிதப் பயணத்தை இறைவன் ஏற்றுக் கொள்ளட்டும், ஆமீன். அவர்களின் பிரார்த்தனைகள் நிறைவேறட்டும், ஆமீன். இதுவரை ஹஜ் செய்யாதவர்களுக்கு அந்த பாக்கியம் கிடைக்கட்டும், ஆமீன். உலகம் எங்கும் அமைதியும், அன்பும் பரவட்டும், ஆமீன். நிறம், மொழி, மதம், ஜாதி, இனம், தேச வெறி கொண்டு, மனிதன் மனிதனை துவேஷத்துடன் பார்க்கும் நிலை அகலட்டும், ஆமீன். தேச எல்லைகள் கடந்து, நாம் எல்லாரும் மனிதர்கள் தான் என்ற பரந்த எண்ணம் உருவாகட்டும்... ஆமீன்.


நன்றி: தினமலர் நாழிதழ்

No comments: