Wednesday, October 28, 2009

ஆன்மீக சிந்தனைகள் - 2



நம்பிக்கை உள்ளவனுக்கு எல்லாம் உண்டு

* பலவருடங்களாக பூட்டிக் கிடக்கும் அறை இருண்டு கிடக்கும். ஆனால், அந்த அறைக்குள் விளக்கினைக் கொண்டு வந்த உடனேயே இருள் மறைந்து ஒளி பரவும். அதுபோல, இறைவனின் கருணைப்பார்வை பட்டவுடனேயே பல பிறவிகளில் செய்த பாவங்களும் உடனேயே நீங்கிவிடும்.


* இறைவனின் அருள் என்னும் காற்று இடையறாது வீசிக் கொண்டுதான் இருக்கிறது. வாழ்க்கை என்னும் கடலில் முன்னேற விரும்பினால் உனது மனமாகிய படகின் பாயை விரித்தால் கடலைக் கடந்து கரை சேரலாம்.

* இறைவனின் திருப்புகழைப் பாடும் போது, கைகளை அசைத்துக் கொண்டும், இசைத்துக் கொண்டும் பாடுவாயாக. அப்போது பாவம் என்னும் பறவைகள் பறந்தோடிப் போகும்.

* சேற்றில் புரள்வதுதான் குழந்தையின் இயல்பு. ஆனால், தாய் குழந்தையை அப்படியே விடாமல் குளிக்கச் செய்து சோறூட்டுவாள். அதுபோல பாவம் செய்வது மனித இயல்பு என்று கடவுள் விட்டுவிடுவதில்லை. கடைத்தேற்றும் வழிமுறைகளை அருள்செய்கிறார்.

* நம்பிக்கை உள்ளவனுக்கு எல்லாமே உண்டு. நம்பிக்கை இல்லாதவனுக்கோ ஒன்றுமே இல்லை. நம்பிக்கை தான் வாழ்வு. வேண்டாத சந்தேகமோ, மனிதனை அழிவுப்பாதையில் கொண்டு சென்று விடும்.

-ராமகிருஷ்ணர்





* எவர்கள் ஒரே இறைவனை விட்டு விட்டு மற்ற பாதுகாவலர்களை ஏற்படுத்திக் கொண்டார்களோ அவர்களின் உவமை தனக்கென ஒரு வீட்டை அமைத்துக் கொள்ளும் சிலந்திப் பூச்சியாகும். திண்ணமாக, வீடுகளிலேயே மிகவும் பலவீனமானது சிலந்திப் பூச்சியின் வீடாகும். அந்தோ! இவர்கள் அறிந்து கொள்ள வேண்டுமே! இறைவனை விட்டுவிட்டு எவரை அழைக்கின்றார்களோ திண்ணமாக, இறைவன் அதனை நன்கறிகின்றான். அவன் யாவரையும் மிகைத்தவனும், நுண்ணறிவாளனுமாவான். மக்கள் புரிந்து கொள்வதற் காக உவமைகளை நாம் கூறுகின்றோம். ஆயினும், ஞான முடையவர்கள் மட்டுமே இவற்றை அறிந்து கொள்கின்றார்கள்.


* ""அவனை(ஒரே இறைவனை) அழைப்பது தான் சரியான தாகும். அவனைத் தவிர இவர்கள் அழைக் கக்கூடிய வேறு கடவுள்களால் இவர்களின் அழைப்புக்கு எவ்வித பதிலும் அளிக்க முடியாது. அவர்களை அழைப்பது எப்படி இருக்கிறது என்றால் ஒருவன் தண்ணீரை நோக்கித் தன் இரு கைகளை நீட்டி, ""தண் ணீரே! எனது வாயினுள் வந்து விடு''என்று கோருவதைப் போன்று உள்ளது. உண்மையில் தண்ணீர் வாயினுள் தானாகவே செல்லக் கூடியதாய் இல்லை. இவ்வாறே, இறைமறுப்பாளர்களின் இறைஞ்சுதல் இலக்கின்றி எறியப்படும் அம்பாகும்''.





-(வேத வரிகளும் தூதர் மொழிகளும் நூலில் இருந்து)




"உலக மக்கள் வேதனையடைய தேவன் ஏன் அனுமதிக்க வேண்டும்?' என்ற சந்தேகம் சிலருக்கு இருக்கிறது.




""ஆண்டவரே! செய்யாத தவறுகளுக்காக என்னை ஏன் இப்படி கஷ்டப்படுத்துகிறீர்? என் குடும்பத்தை ஏன் வறுமையில் ஆழ்த்துகிறீர்? என் மகன் படிக்காமல் பொழுதுபோக்கு விஷயங்களில் கவனம் செலுத்துகிறானே! எனக்கு அலுவலகத்தில் ஏன் இத்தனை சோதனை? என் மகள் முன்பின் தெரியாத ஒரு வாலிபனுடன் சுற்றுகிறாள் என பார்த்தவர்கள் சொல்கிறார்களே! கர்த்தாவே! நான் செய்த பாவங்கள் தான் என்ன?'' இப்படி ஏதோ ஒரு கஷ்டத்தைச் சொல்லி ஆண்டவரிடம் மக்கள் புலம்புகிறார்கள்.



""தமிழகத்தில் ஏன் இவ்வளவு சாலை விபத்துக்களை அனுமதிக்கிறீர்கள்?'' என்று போக்குவரத்து போலீஸ் உயர் அதிகாரியை, ஒரு நிருபர் கேட்டால் அவர் என்ன பதில் சொல்வார்?



""என்னை ஏன் குற்றப்படுத்தி கேள்வி கேட்கிறீர்கள்! ஒவ்வொருவரும் துணிந்து சாலை விதிகளை மீறுகிறார்கள். அப்படி மீறுவோர் தான் விபத்தில் சிக்குகிறார்கள். வேதனையை அவர்களே வரவழைத்துக் கொள்கிறார்கள்,'' என்பார்.



இது நிஜம் தானே! சட்டத்தை மீறுவதால் தானே துன்பம் வருகிறது! இதே போல், ஆண்டவருடைய சட்டப்புத்தகமான வேதாகமத்தை (பைபிள்) புறக்கணிப்பதால் தான் மனிதர்கள் துன்பப்படுகிறார்கள். இறைவன் நமக்கென சட்ட திட்டங்களை வகுத்திருக்கிறான். பொய் சொல்லாதே, களவு செய்யாதே, உழைக்காதவனுக்கு உண்ண உரிமையில்லை... இப்படியெல்லாம் சொல்லியிருக்கிறார். ஆனால், அதை பெரும்பாலானோர் கடைபிடிப்பதில்லையே!



சரி... ஒரு சர்வாதிகாரியைப் போல் ஆண்டவர் நமக்கு ஆணையிட்டிருக்கிறாரா? இல்லையே! இன்னின்ன காரியங்களைத் தவிர்த்தால், நீ சுகமாக இருக்கலாம் என்ற கரிசனையுடன் தானே சொல்லியிருக்கிறார்! அழகான உலகத்தைக் கொடுத்த தேவன், அங்கே வாழும் முறையையும் கற்றுத் தந்துள்ளார்.



கொடுக்கப்பட்ட செயல்முறைக்கு மாறாக நடந்தால், வாங்கிய பொருள் எப்படி செயலிழக்குமோ அதுபோல், ஆண்டவரின் கட்டளைகளை மீறி நடக்கும்போது பிரச்னைகள் தலை தூக்குகிறது. ஒரு இன்டர்வியூவுக்குப் புறப்பட்டால், முதல்நாளே எல்லாவற்றையும் எடுத்து வைத்து தயாராகிறோம். ஆனால், ஞாயிற்றுக்கிழமை சர்ச்சுக்குப் போக, முதல்நாள் இரவே எல்லாவற்றையும் ஆயத்தப்படுத்துவதில்லையே! அப்படியானால் ஆத்துமாவுக்கும், ஆவிக்கும் எப்படி அமைதி கிடைக்கும்? ஆண்டவர் கொடுத்த சரீரத்தைக் குடித்தும், புகைபிடித்தும் கெடுக்கிறோமே! பின்னர் கஷ்டம் வரத்தானே செய்யும்!



பைபிளில் ஒரு வசனம், ""உள்ளங்கால் தொடங்கி உச்சந்தலை மட்டும் அதிலே சுகமேயில்லை. அது காயமும், வீக்கமும், நொதிக்கிற ரணமுமுள்ளது. அது சீழ் பிதுக்கப்படாமலும், கட்டப்படாமலும், எண்ணெயால் ஆற்றப்படாமலும் உள்ளது'' என்கிறது. மனித சரீரத்தின் உண்மைத்தன்மை இந்த வசனத்தில் வெளிப்படுகிறது. மனித உடல் ஒரு சதைப்பிண்டம். இதை வைத்துக் கொண்டு என்ன ஆட்டம் போடுகிறார்கள் என்பது மறைமுகமாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பாவத்தின் பலன்களே துன்பமாக வருகின்றன. ஆண்டவரிடம் பாவமன்னிப்பு கேட்டு அதில் இருந்து விடுபடுங்கள் என்பது இந்த வசனம் உ<ணர்த்தும் கருத்து.



நமது துன்பங்களுக்கு நாமே காரணம் என்பது புரிந்து விட்டதல்லவா! இனி தவறு செய்ய மாட்டீர்கள்தானே!




தர்மம் உங்கள் துன்பத்தையும், துயரத்தையும் போக்கும். அறவாழ்வின் அம்சங்களை, அதன் உண்மைகளை மக்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள்.


'நான்' என்ற அகந்தையை விடுங்கள். உங்களுடைய அகந்தையும் பொறாமையும் அல்லவா என்னுடைய தவவலிமையை ஒப்புக் கொள்ளத் தயங்குகிறது. அகந்தையில் உங்கள் மனம் அலைபாயும். அமைதியிழக்கும். உங்களுடைய உண்மையான இயல்பை உணர்ந்து கொள்ளும் வரை 'நான்' என்ற மயக்கம் இருக்கும்.

வீணான ஆராய்ச்சியில் காலத்தை வீணாக்காதீர்கள். உங்கள் அறிவின் துணை கொண்டு உண்மையை அறிந்து கொள்ளுங்கள். வாழ்வுக்காகட்டும், மரணத்துக்காகட்டும் காரணம் இருக்கிறது. காரணமில்லாமல் எதுவும் நிகழ்வதில்லை. இன்பமோ துன்பமோ ஒரு காரணத்தோடுதான் வருகிறது.

கடல்நீர் ஆவியாகி, வானமண்டலத்தில் மேகமாய் உருவெடுக்கிறது. பின்பு, அது மழையாகி மலைச்சரிவின் வழியே உருண்டோடி ஆறாகிறது. ஆறு கடலில் கலக்கிறது. இது ஒரு சுழற்சி, இடையறாத இயக்கம். எல்லா நிகழ்வுகளிலும் இதனை நீங்கள் காணமுடியும்.

நடுக்கடலின் ஆழம் கரையோரத்தில் இல்லை. கரையில் நிற்பவர் கொஞ்சம் கொஞ்சமாய் கடலினுள் செல்லும் போது அதன் ஆழம் அதிகரிப்பதை அறியலாம். அதுபோலவே படிப்படியாகத்தான் தர்மத்தில் மேன்மை அடைய முடியும். பயிற்சியைத் தொடர்வதன் மூலமே ஒழுக்கத்தில் உணர்வு காணமுடியும்.

கடல் மரித்தவைகளை தன்னுள் வைத்துக் கொள்ளாது. கரையோரம் ஒதுக்கிவிடும். ஒழுக்கமற்றவர் கூட்டுறவை நாம் அவ்விதமே ஒதுக்கிவிட வேண்டும்.

Thanks to:


No comments: