Friday, October 23, 2009
ஆன்மீக சிந்தனைகள்
* நம்மை ஆட்டிப்படைப்பது நம் மனமே. உருவமற்ற இந்த மனம் பெரிய உருவம் படைத்த நம்மை எப்படியெல்லாம் ஆட்டிப் படைக்கிறது என்று யோசித்துப் பாருங்கள். மனதுடன் நடத்தும் போராட்டம் என்றும் ஓய்வதில்லை. விழிப்பு நிலையில் மட்டுமல்ல, உறக்க நிலையிலும் கூட மனதின் போராட்டம் நம்மை விட்டு ஒருபோதும் நீங்குவதில்லை.
* அனைத்து சாஸ்திரங்களும், வேதநூல்களும் மனதை அடக்கும் வழிமுறைகளையே நமக்கு எடுத்துக் காட்டுகின்றன. மனதை அடக்கும் தியை ஆண்டவனிடம் கேட்டுப் பெற வேண்டும்.
* உடலுக்கு கிடைக்கும் இன்பத்தை எவ்வளவு தான் அனுபவித்தாலும் ஒருவனுக்கு நிரந்தரமான திருப்தி கிடைக்கப் போவதில்லை. இருந்தாலும், மனம் அந்தஆசையை விட்டு விட இடம் தருவதில்லை.
* காய்ந்த எலும்புத் துண்டைக் கடித்த நாய், தன் வாயிலிருந்து வழிந்த ரத்தத்தை எலும்பிலிருந்து வருவதாக எண்ணி மேலும் அழுத்தமாகக் கடித்து துன்பத்தை அடையும். அதுபோல் மனிதனும் ஆசைகளைப் பெருக்கிக் கொண்டு துன்பத்தை அனுபவிக்கிறான்.
* பாலைவனத்தில் தூரத்தில் தெரியும் கானல்நீர் அருகில் சென்றதும் மறைவது போல, மனதில் வாழ்வில் உண்டாகும் இன்பங்களும் நம்மை ஏமாற்றக்கூடியவையே. அவை நிரந்தரமானதல்ல.
-ஆதிசங்கரர்
* சுற்றியுள்ள கயிற்றை அவிழ்ப்பதற்கு ஒருவழி தான் உண்டு. எப்படிச் சுற்றினோமோ அப்படியே மறுபடியும் திருப்பி அவிழ்க்க வேண்டும். அதைப் போலவே தவறான செயல்களை நற்செயல்களினாலும், பாவங்களைப் புண்ணியங்களினாலும் போக்கிக் கொள்ள வேண்டும்.
* தானம், தர்மம், கடமை புரிதல், பகவந்நாமாக்களை உச்சரித்தல், திருக்கோயில்களைத் தரிசித்தல் ஆகிய நல்லசெயல்கள் பாவம் தொலைக்கும் வழிகளாகும்.
* மனத்தினால் செய்த பாவங்களை மனத்தாலும், கைகள், கால்களால் செய்த பாவங்களை அந்த உறுப்புக்களினாலும் மட்டுமே தீர்க்க முடியும்.
* வெளியில் இருந்து வரும் பொருள்களில் தான் மகிழ்ச்சி இருப்பதாக எண்ணி அவற்றைச் சுற்றியே மனிதன் துரத்திக் கொண்டு ஓடுகிறான். வெளியில் இருப்பது எதுவும் நம் வசத்தில் இருப்பதல்ல. அது வந்தாலும் வரும். போனாலும் போகும். நமக்குள்ளே ஆனந்தம் இருப்பதை மனிதன் மறந்து விடுகிறான்.
* நமக்குள் இருக்கும் மகிழ்ச்சி பெரிய சமுத்திரம் போன்றது. புறவுலகில் இருக்கும் இன்பம் அனைத்தும் ஒரு நீர்த்துளி போன்றது தான். பதவி, பணம், பெயர், புகழ் என்று வெளியில் நாம் எதிர்பார்க்கும் எல்லாமே ஒரு சொட்டுத் தண்ணீர்தான். இதை முற்றிலும் உணர்ந்த ஞானிகள் வெளி இன்பத்தைத் தேடி அலைவதில்லை.
- காஞ்சிப்பெரியவர்
* தானங்கள் நான்கு வகையாகும். அவை உணவு, மருந்து, சாஸ்திரம், அபயம் என்பன. இந்த நான்கு தானங்களையும் நாம் முடிந்த அளவிற்கு செய்ய வேண்டும்.
* உண்மையை மறந்து பொய்யின் பக்கம் சென்றுவிடுதல் பாவமாகும். உண்மையை மட்டும் பேசி வாழ்தல் என்பது எப்போதும் கடினம் தான். இருந்தாலும் பிறருக்கு தீங்கிழைக்காத படி நாம் பேச வேண்டும்.
* மிதமிஞ்சி உணவை ருசிக்காகச் சாப்பிடுவது உடலுக்கு மிகுந்த துன்பத்தைத் தரும். உடல் மட்டுமின்றி அதிக உணவால் மனமும் கெட்டுவிடும்.
* பேராசை உடையவனுக்கு இந்த உலகம் முழுவதையும் வழங்கினாலும் திருப்தி உண்டாவதில்லை. வயதான நிலையிலும் ஆசை மனிதனை விடுவதில்லை. இதனால் மரணம் நெருங்கும்போதும் அவன் பெருந்துன்பத்திற்கு ஆளாகிறான்.
* கடுஞ்சொல் பேசாதவர்கள் மென்மையான மலர் போன்றவர்கள். அவர்களை எல்லோரும் உயர்வாக மதித்துப் போற்றுவர். உலகில் மலரை விரும்பாதவர்கள் யார்?
* நம்மிடம் இருப்பதை பிறருக்கு கொடுக்கும் பழக்கம் வேண்டும். அத்துடன் கொடுக்கின்ற மனம் உடையவர்களைத் தடுக்கின்ற மனம் அறவே கூடாததாகும்.
-மகாவீரர்
* பலவருடங்களாக பூட்டிக் கிடக்கும் அறை இருண்டு கிடக்கும். ஆனால், அந்த அறைக்குள் விளக்கினைக் கொண்டு வந்த உடனேயே இருள் மறைந்து ஒளி பரவும். அதுபோல, இறைவனின் கருணைப்பார்வை பட்டவுடனேயே பல பிறவிகளில் செய்த பாவங்களும் உடனேயே நீங்கிவிடும்.
* இறைவனின் அருள் என்னும் காற்று இடையறாது வீசிக் கொண்டுதான் இருக்கிறது. வாழ்க்கை என்னும் கடலில் முன்னேற விரும்பினால் உனது மனமாகிய படகின் பாயை விரித்தால் கடலைக் கடந்து கரை சேரலாம்.
* இறைவனின் திருப்புகழைப் பாடும் போது, கைகளை அசைத்துக் கொண்டும், இசைத்துக் கொண்டும் பாடுவாயாக. அப்போது பாவம் என்னும் பறவைகள் பறந்தோடிப் போகும்.
* சேற்றில் புரள்வதுதான் குழந்தையின் இயல்பு. ஆனால், தாய் குழந்தையை அப்படியே விடாமல் குளிக்கச் செய்து சோறூட்டுவாள். அதுபோல பாவம் செய்வது மனித இயல்பு என்று கடவுள் விட்டுவிடுவதில்லை. கடைத்தேற்றும் வழிமுறைகளை அருள்செய்கிறார்.
* நம்பிக்கை உள்ளவனுக்கு எல்லாமே உண்டு. நம்பிக்கை இல்லாதவனுக்கோ ஒன்றுமே இல்லை. நம்பிக்கை தான் வாழ்வு. வேண்டாத சந்தேகமோ, மனிதனை அழிவுப்பாதையில் கொண்டு சென்று விடும்.
-ராமகிருஷ்ணர்
* இறைவன் எல்லையற்ற அருட்பலம் உடையவன். அவனிடம் முழுநம்பிக்கை கொண்டு நல்ல நெறியில் செல்லும் மனிதனை எந்தச் சக்தியாலும் வெல்ல முடியாது.
* மனிதன் தன்னிடம் முழுநம்பிக்கை கொள்பவனாக இருக்க வேண்டும். அவனை உயர்த்துவதற்கு இறைவனே ஓடிவருவான். வலிமையும், ஆற்றலும் அவனைச் சூழ்ந்து கொண்டு துணை நிற்கும்.
* யாருடைய நம்பிக்கையையும், மனவுறுதியையும் கெடுக்க முயலக்கூடாது. முடிந்தால் நம்மால் முடிந்த உதவிகளை மட்டும் செய்வது நம் கடமை. ஒருவனை மேலே தூக்கிவிடமுடியாவிட்டாலும், அவனிடம் உள்ளதைக் கெடுக்க நினைப்பது பெருங்குற்றம்.
* ஒரு கணம் முயற்சி செய்ததும் லட்சியத்தை அடைந்து விடமுடியுமா? நிலைகுலையாத மனவுறுதியும், வைராக்கியமும் கொண்டிருந்தால் அன்றி இலக்கை அடைய முடியாது. இடிமின்னலுக்கும் இடையில் வானத்தை அண்ணாந்து பார்த்து மழைநீர் அருந்தும் சாதகப்பறவை போல முயற்சியில் தீவிரமாக ஈடுபாடு கொள்ளுங்கள்.
* மனதில் அமைதியுணர்வு கொண்டவனிடத்தில் சஞ்சலம் சிறிதும் இருக்காது. சஞ்சலம் இல்லாத இடத்தில் அன்பு குடி கொள்ளும். அன்போடு செய்யும் செயல்கள் யாவும் சிறப்புடையதாக விளங்கும்.
-விவேகானந்தர்
* நதியானது கடலில் சங்கமமாவது போல் என் மனம் இறைவனாகிய உன்னிடம் சங்கமமாகிறது.
* ஞானத்தின் யானை மேல் ஏறித் தியானம் என்ற ஆசனம் போட்டு அமர்ந்துகொள். நாய் போன்றது உலகம். நன்றாகக் குரைக்கட்டும். வேறு ஒன்றும் செய்ய முடியாது.
* இறைவா! உன்னிடம் நான் போகம், முக்தி ஒன்றையும் கேட்கமாட்டேன். எனக்கு பக்தியை தானமாக அருள்வாயாக. வேறு ஒருவரிடமும் இரத்தல் செய்ய மாட்டேன். உன்னைத்தான் இரப்பேன்.
* நீ ஜபமாலை உருட்டலாம், நெற்றியில் திருநீறு பூசலாம், நீண்ட ஜடை தரிக்கலாம். ஆனால், உள்ளத்தில் கொடிய விஷமிருந்தால் எப்படி கடவுளைக் காண முடியும்?
* பூஜை, சேவை, நியமம், விரதம் எல்லாம் வெறும் விளையாட்டுக்களே. ஆண்டவனை உள்ளத்தால் தொட வேண்டும். கடவுள் திருநாமத்தை நெஞ்சில் ஒரு வினாடி மனம் கசிந்து நினைத்தாலும் போதும்.
* மீனுக்கு நீரிலும், உலோபிக்குக் காசிலும், தாய்க்கு மகளிடமும், பக்தனுக்கு ஆண்டவனிடமும் பற்று அதிகம்.
* உடலளவில் தங்களை யோகியாக எல்லோரும் செய்து கொள்வார்கள். ஒருவரும் மனதை அவ்விதம் செய்து கொள்வதில்லை.
* கடவுள் ஒருவரே; எல்லா ஜீவராசிகளும் அவருடைய சொரூபமே. எங்கும் அவர் நிறைந்திருக்கிறார். அப்படி இருக்கும்போது ''அவர் என் கடவுள், இவர் அவன் கடவுள், உன் கடவுள் வேறு,'' என்ற பிரிவினை எல்லாம் ஏன்?
* காலம் தவறாது நீராடுவதும், காய்கறி வகைகளை உண்பதுமே முக்தியளிக்கும் என்று நினைத்தால் மீன்களுக்கும், விவசாயக் கருவிகளுக்குமே முதலில் முக்தி கிடைக்கும்.
- கபீர் தாசர்
Labels:
ஆதி சங்கரர்,
ஆன்மீக சிந்தனைகள்,
கபீர் தாசர்,
மகாவீரர்,
ராமகிருஷ்ணர்
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
நண்பா...!
ஆன்மீக சிந்தனைகள் அத்தனையும் அருமை....உமது "ஒரு கிராமத்தானின் கதை"-நூல் சிறப்பாகவருவதற்கு வாழ்த்துக்கள்....
நமது பழைய நிகழ்வுகளை பின்வரும் நாட்களில் எழுதுவேன்....எனது பழைய பிளாக் கவிவனம் மூடக்கப்பட்டுவிட்டது....காரணம் அதில் சில வைரஸ்கள் இருந்ததாக பிளாக்கர்ஸ் தகவல் தந்தார்கள்....
அதன் பின்தான் புதிய பிளாக் ஆரம்பித்தேன்....உமது சிந்தனைகள் ஒவ்வொன்றும் வெற்றி பெருவதற்கு வாழ்த்துக்கள்....
நன்றி
இஸ்மத்
http://www.kismath.blogspot.com
http://www.klr-ismath.blogspot.com
ஆன்மீகத்தைப் பற்றி அழகாக எழுதுகிறீர்களே!
நீங்கள்.....?
Post a Comment