Wednesday, February 18, 2009

தெய்வங்கள் எழுக - வாஸந்தி


'அரிது அரிது மானுடராய் பிறத்தல் அரிது ' என்கிற வாக்கியம் தன்னுள் நோக்கி பரப்ரும்மத்தை உணர்ந்த தருணத்தில் ஒரு மானுடனின் எண்ணத்தில் ஜனித்திருக்கவேண்டும்- ஆனந்தத்திலிருந்து பிறந்தோம்; உறைகிறோம்; ஆனந்தத்திற்கே திரும்புகிறோம் என்கிற உபநிஷத்தின் வாக்கியம் போல.


இதைச் சொன்ன ஞாநிகள் சகஜ யதார்த்த வாழ்விலிருந்து வெகு தொலைவில் இருந்திருக்கவேண்டும். அல்லது தாமே சிருஷ்டித்துக்கொண்டிருந்த உலகில் வாழ்ந்திருக்கவேண்டும்- கண்களைமூடிக்கொண்டு அஸ்தமித்துவிட்டது என்று நினைக்கும் பூனையைப்போல. அல்லது உலகில் நடக்கும் வன்முறையை, மனிதனை மனிதன் வெறுத்து அழிப்பதைக் கண்ட அதிர்ச்சியில் அல்லது வருத்தத்தில், எப்பேற்பட்ட வாழ்க்கையை பாழடித்துக்கொண்டிருக்கிறார்கள் என்று உணர்த்தச் சொல்லப் பட்ட வார்த்தைகளாகவும் இருக்கலாம்.



மனிதன் தோன்றிய நாளிலிருந்து மனித வரலாறு வன்முறை மிக்கதாகவே இருந்து வந்திருக்கிறது. பெண் ஒருத்தி கூட இருந்ததும், காதல் பிறந்ததும், குடும்பம் ஏற்பட்டதும் வெறும் மகிழ்ச்சி மிக்க பரிணாமம் மட்டுமல்ல , அவை போட்டிக்கும் பொறாமைக்கும் பேராசைக்கும் , க்ரோதத்துக்கும் வித்திட்டன. மனிதனுள் தேவன் இருக்கிறான் என்கிற பொருளில் - நீயே அது, 'தத்வமஸி' ,'The Kingdom of God is within you' என்று மறைகள் சொன்னாலும் 'மாயை' என்கிற பாமரத் திரை மனிதனைப் போர்த்துவதால் இறைவன் சிலையாகி சமைந்து போனான். திடப் பொருளாகிப் போனான்.


மனிதனைவிட்டு இறைமை வெளியேறிவிட்டதால் , தேவ/அசுர/நர என்னும் குணங்களில் மானுடம் வெறும் அசுர குணத்துடன் எஞ்சிப் போனதாகத் தோன்றுகிறது. சில மகா அசுரர்கள் கையில் சிக்கிக்கொண்டு பூமி


நிலைதடுமாறிக்கொண்டிருக்கிறது. எத்த புத்தனும் நீதி சொல்ல வரப்போவதில்லை. 'சம்பவாமி யுகே யுகே' என்று தெய்வம் அவதாரமெடுத்து வரும் கதைகள் புராணங்கள் சொல்வது. நிஜத்தில் நடக்காது.
.இன்று இந்த எண்ணம் என்னை மிகவும் வலுவாகத் தாக்குகிறது. நம்மை அச்சுறுத்தும் அவலத்திற்கு நிவர்த்தியோ ஆறுதலோ கிடைக்காத விளிம்பில் உலகம் நிற்பதாகக் கலக்கம் ஏற்படுகிறது.


இன்றைய தினத்தந்தி நாளேட்டில் ஒரு புகைப்படம் செய்தியுடன் வெளியாகி இருக்கிறது. புகைப் படம் சொல்லும் சேதி என்னை உலுக்கிவிட்டது. இலங்கையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் அப்பாவி தமிழர்கள் தங்கி இருக்கும் பகுதிகள் மீது சிங்கள ராணுவம் வீசிய குண்டின் விளைவைக் காட்டும் படம்.மூங்கிலாறு என்ற இடத்தில் ரோட்டு ஓரம் தற்காலிகமாக கூடாரம் அமைத்து தங்கி இருந்த குடும்பம் மீத விழுந்து வெடித்த குண்டின் தாக்குதலில் கருகிக் கிடக்கின்றன உடல்கள்.


பத்து பன்னிரெண்டு இருக்கும் - வெந்துபோன கால்களும் கைகளும் தலைகளும். அது ஏதோ தினமும் நாம் பார்க்கும் ரோட்டோரம் கொட்டிக்கிடக்கும் குப்பை கூளம் என்று நினைத்து ஒதுங்கி தெருவின் மற்ற பகுதியில் இரண்டு பெண்கள் அன்றாட வேலையைக் கவனிக்கச் செல்பவர்கள் போல நடக்கிறார்கள். ஒரு சைக்கிளை நகர்த்திக்கொண்டு ஒரு ஆள் போகிறார். வெந்த உடல்களின் கோரக் காட்சியும் அவர்களது சகஜமான நடையும் என் நாடி நரம்பெல்லாவற்றையும் உலுக்கிவிட்டன. எப்படிப்பட்ட மனநிலையில் அவர்கள் நடந்திருப்பார்கள்?


செத்தவர்கள் யாரோ நமக்குத் தெரியாதவர்கள் என்ற சமாதானத்திலா? நல்ல வேளை இன்று நம் தலை தப்பிற்று என்ற நிம்மதியிலா? ஆண்டவா எப்போது நிற்கும் இந்த வெறியாட்டம் என்று பிரார்த்தனை செய்ய ஓடுகிறார்களா ? காணாமற்போன ஈசனை எங்கு தேடுகிறார்கள்? அவர்கள் யாரிடமும் ஓடமுடியாது. அவர்களுக்கு உதவ யாருமில்லை. மிருகங்கள் தற்காத்துக் கொள்வது போல விடாது பெய்யும் குண்டுமழையிலிருந்து தப்பிக்க ஓடினால் போதும். இன்று பிழைத்தோம் - அது போதும். வேறு உணர்வுகளோ பேராசையோ இல்லை. பிணக்குவியல் கூட அர்த்தமற்றுப் போய்விட்டது. அது ஒரு குப்பை, நமக்குச் சொந்தமில்லை. சொந்தமாக இருந்தாலும் நின்று பார்க்க நேரமில்லை. அடுத்தகுண்டு நம் மேல் விழலாம்.



எதற்காக இந்தப் போர் நடக்கிறது ? யாருக்காக ,எந்த ஆதாயத்துக்காக நடக்கிறது என்கிற கேள்விகளை அவர்கள் மறந்து கன காலம் ஆகிறது. போரும் , குண்டுவீச்சும் வாழ்வின் அங்கமாகிவிட்டன. நித்ய கண்டம் வாழ்க்கை என்பது. எப்போது இது துவங்கியது? யாருக்கும் நினைவிருக்காது. மிதமிஞ்சிய துக்கத்தில், மிதமிஞ்சிய வலியில் மூளை செயலிழந்து போகும். கேள்வி வேண்டாம். என்னவோ நடக்கிறது. யாரோ அசுரர்கள் அவர்களது வாழ்வை ஆட்டுவிக்கிறார்கள். இப்படித்தான் ஓடணும், சாகணும் என்று சபிக்கப் பட்டதுபோல. சபிக்கப் பட்ட பூமி. சபிக்கப்பட்ட மொழி. பலப் பல காலமாக மனித மனத்தில் தோன்றிய வன்மமும், குரூரமும், பழிவாங்கலும், க்ரோதமும் அநீதியும் அராஜகமும் தொடர்ந்தால் ,பூமி தாங்காது. நான் பெற்ற மாந்தர்கள் பாரமாகிப் போனார்கள் என்று வெடிக்கும். என்னால் காப்பாற்ற முடியாது, உங்களது அசுரத்தனம் ஓயும்வரை என்று ஓலமிடும்.


லட்சக்கணக்கான அற்ப ஆயுளில் மடிந்த பெண்களின் குழந்தைகளின், ஆண்களின் ஆவிகள் காற்றில் அலைகின்றன. பரிதவிப்புடன் ஓலமிடுகின்றன. துப்பாக்கி ஏந்தி நிற்பவர்களை அலைக்கழிக்கவில்லையா! துன்புறுத்தவில்லையா? ஒரே நாளில் ஆறு ஆயிரம் குண்டுகள் வீசப்பட்டதாகச் செய்தி சொல்கிறது . பூமி துளையுண்டு சல்லடையாகப் போயிருக்கும் . அதனூடாக மானுடம் சரிந்து கொண்டிருக்கிறது.



எல்லாருக்கும், குண்டு வீசுபவர்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் காது செவிடாகிவிட்டது. மனசு மரத்து விட்டது. அவர்களது உலகம் ஒரு வெறியின் உந்துதலில் இயங்குகிறது. அந்த உலகத்துக்கு வெளியே இருந்து பதைத்து , இதயம் படைத்தவர்கள் சொல்லும் எதுவும் செவியில் விழாது.
இங்கேயும் தினம் ஒரு கூத்து நடக்கிறது. அதை வைத்து அரசியல் நடக்கிறது. அரசியல் தலைவர்கள் செய்தியில் வலம் வந்தவண்ணம் இருக்கிறார்கள். ராட்டினத்தில் குதிரைமேல் அமர்ந்திருப்பவரின் முகங்கள் சுழன்று வருவதுபோல மாறி மாறி முக்கியத்துவம் பெறுகிறார்கள்.


அங்கே அப்பாவி மக்கள் சாவது மட்டும் நிற்கவில்லை. இவர்களது பேச்சால் உணர்ச்சி வசப்பட்டு சில மெல்லிய இதயம் படைத்தவர்கள், வாழவேண்டிய இளைஞர்கள், தீக்குளிக்கிறார்கள், தமிழ் நாட்டில், மலேசியாவில், ஸ்விட்சர்லாந்தில். முல்லைத்தீவில் அப்பாவித் தமிழர்கள் சாவது ஓயவில்லை.



மகாப் பெரிய சக்தி விரயமாக , அக்கிரமமான விரயமாக இருக்கிறது எனக்கு. இது எதில் முடியப் போகிறது ? அந்தப் புகைப் படத்தில் பாதையில் நடந்து செல்பவர்களின் எதிர்காலம் என்ன என்கிற கேள்விக்கு விடை அவர்களுக்கே தெரியாததால்தான் விரைகிறார்கள், திரும்பிப் பாராமல், பிணக்குவியலைப் பார்க்க நிற்காமல்.



அந்த விடை, போர் தொடுப்பவரிடம் தான் இருக்கமுடியும். அவர்களது வெறி அடங்கினால் தான் விடையைத் தேடும் எண்ணம் வரும். எண்ணத்தில்தான் மொழி பிறக்கும். பேசும் வல்லமை வரும். பேச்சின் மூலமே மற்றவரைப் புரிந்துகொள்ளமுடியும். புரிதலில்தான் விடை கிடைக்கும்.
எல்லாருமாக இப்போது தேடப் புரப்படவேண்டும். காணாமல் போன மொழியை. பூமி பட்ட காயம் போதும். பூமி புத்திரர்கள் சிதறிப்போனது போதும் . தங்கிவிட்டவர்கள் தங்கள் வாழ்நாளிலேயே சவமாகிப் போனது போதும்.



மொழி பிறக்கட்டும். அப்போது தான் கல்லுக்குள் இருந்து ஈசன் வெளிப்படுவதுபோல கல் மனத்துள் நேயம் சுரக்கும். அதற்காகவே -- சிலையாகி சமைந்து விட்ட ஆண்டவா, உயிர்த்தெழு. எல்லோருக்குள்ளும்.


1 comment:

benza said...

வாசந்தி அம்மா நான் உங்களது எழுத்துக்களை விரும்பி
பல வருடங்கள் முன்னர் வாசித்து வந்தேன்
தமிழ் உலகத்தில் எனது அபிமான எழுத்தாளர்களில்
நீங்களும் ஓர் முக்கிய அங்கத்தவர்
ஓர் குறிபிட்ட காலகட்டத்தில் தமிழ் உலகத்தை விட்டு
வெளியே சென்றதால் உங்களது பெயரும் உங்களது எழுத்தினால்
பெற்ற இன்ப அனுபவவும் இன்றும் மனதில் பசுமையாக உள்ளது.
ஆனால் உங்களது புத்தகங்களது தலைப்புகளை மறந்தே விட்டேன்
ஒரு காலத்தில் நீங்களும் சிவசங்கரி அவர்களும் இணைந்து
எழுதியதை மறக்கவில்லை
இந்த புது முயற்சி SS VAASAN அவர்களது கற்பனையில் உருவானது
என நம்புகின்றேன்
இன்றும் உங்களது எழுத்துவன்மை அன்று போல் கவர்ந்து சிந்திக்க
வைக்கின்றது
[[[ எதற்காக இந்தப் போர் நடக்கிறது ? யாருக்காக ,எந்த ஆதாயத்துக்காக நடக்கிறது என்கிற கேள்விகளை அவர்கள் மறந்து கன காலம் ஆகிறது ]]]
என்னும் உங்கள் கேள்வியே ஐந்து லெட்சம் யாழ் மக்களது மனதில்
மூன்று தலைமுறைகளாக கொழுந்து விட்டு எரிகின்றது
அந்நியன் என்று இலங்கையில் எவரும் இல்லை
மலையக இந்தியவம்சாவளி தமிழ் மக்களும் முஸ்லிமிய
இஸ்லாமியர்களும் யாவுகரும் சிங்களவர்களும் எமது சகோதரர்களே
எம்மவரில் உள்ளது போன்று சுயநல அரசியல்வாதிகள்
சிங்களவர்களிலும் உள்ளனர்
இதனால் அங்கு தமிழர்களை அடக்கி ஆள்வது சிங்கள அரசாங்கம் அல்ல
குண்டினால் வீடிழந்து படு காயபட்டு பெனிசிலின் ஊசி இல்லாது
யாழ் நகரை விட்டு வெளியேறி மருத்துவம் பெற உத்தரவு கிட்டைக்காது
காட்டு பாதையால் கள்ளமாக எழுபது மைல் நடந்து தலைநகர் சேர்ந்து
இன்று பிள்ளைகளுடன் அந்நிய நாட்டில் உயிர்வாழும் நான் மீண்டும்
யாழ் குடா நாடு செல்ல காலம் விடிகின்றது
நன்றி அம்மா பல ஆண்டுகளின் பின்னர் உங்களது எழுத்தை
தற்செயலாக சந்தித்தது ஆண்டவன் கருணை !