அமெரிக்க மூலதன வங்கியின் திவாலில் உருவான பொருளாதார நெருக்கடி இப்போது அமெரிக்காவை மட்டுமல்ல ஒட்டு மொத்த உலகத்தையும் ஆட்டிவைத்துக் கொண்டிருக்கிறது பணக்காரர்கள் இழந்தது சில கோடிகள் என்றால் ஏழைகளும் நடுத்தர மக்களும் இழந்தது தங்களது ஒட்டு மொத்த வாழ்வையும் என்பதைப் பார்க்கும் போது உலகப் பொது முறைமையாக உலகத்தின் மீது ஏகாதிபத்திய நாடுகளால் திணிக்கப்பட்ட உலகமயமாக்கல் எந்த அளவுக்குக் கொடுமையானது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.
உலகமயமாக்கல் தாராளமயமாக்கல் தடையில்லா வர்த்தகம் என்ற மாயவார்த்தைகளால் மக்களைக் கட்டிப்போட்டு பன்னாட்டுப் பேராசைக்காரர்கள் ஆடிய ஆட்டத்தின் விளைவாக இன்று எத்தனை உயிர்ப்பலிகள் ! உடைமை நஷ்டங்கள் உயிரோட்டமே நின்று போனது போன்ற மன உலைச்சல்கள் !
ஏன் இது நிகழ்ந்தது?
இதன் பின்னணி பெரியது சராசரி மூளைக்குள் புகமுடியாதது.
ஆனால் அதன் ஆணிவேர் வட்டி என்ற விஷம் சூதாட்டம் என்ற பங்குச் சந்தை யூகவணிகம் என்ற மோசடி !
அங்கிங்கெனாதபடி எங்கும் விரிந்த இந்த நெருக்கடிக்குள் உலகின் ஒரே ஒரு வங்கித்துறை மட்டும் சத்தம் போடாமல் அமைதி காக்கிறது என்பது வியப்புக்குரிய செய்தி அல்லவா?
ஆம் ! இஸ்லாமிய வங்கித்துறையை அது பெரிதாக பாதிக்கவில்லை பாதிக்கப்பட்ட ஒருசிலவும் பெயரை மட்டும் வைத்துக் கொண்டு இஸ்லாமிய வட்டத்தை விட்டு வெளியே வந்து செயல்பட்டவை என்பதுதான் இன்று உலகில் பரபரப்பினை ஏற்படுத்திவரும் உரத்த செய்தியாகும் ! இப்போது இஸ்லாமிய வங்கித்துறையின் நுணுக்கங்கள் பற்றி அதிகமான விசாரிப்புக்கள்.
அது ஒன்றும் மூடுமந்திரமான புரிந்துகொள்ள முடியாத வறட்டுத் தத்துவார்த்தம் அல்ல மிகமிக எளிய உபாயம் அதில்
*வட்டிக்கு இடமில்லை முற்றிலும் தடுக்கப்பட்டது
*ஊக வணிகத்துக்கு வழியில்லை
*கொடுக்கல் வாங்கலில் முழுமையான ஒப்பந்த முறை
*கடனுக்கு உடைமை உத்தரவாதம்
*மூலதனமிடுவோருக்கு லாபத்திலும் நஷ்டத்திலும் பங்குண்டு
*தங்களது பணம் எப்படி வங்கியால் மூலதனமிடப்படுகிறது என்பதை மூலதனமிட்டவர் தெரிய வாய்ப்பு வங்கியின் மார்க்க வல்லுநர்களின் கண்டிப்பான மேற்பார்வையில் வணிகம்
*வங்கி செயல்படும் நாட்டின் மேலாண்மைச் சட்டங்களின் முழுமையான மேற்பார்வைக்கு அனுமதி இவைதான் இஸ்லாமிய வங்கிகளின் செயல்பாட்டுச் சட்டம்
இப்படி 75 நாடுகளில் 300 வங்கிகள் செயல்படுகின்றன அவற்றில் சுமார் 300 பில்லியன் டாலர்கள் வணிகப் புழக்கத்தில் இருக்கின்றது.
நம் நாட்டிலும் உள்ளன ! ( அல் அமீன் ) தமிழகத்திலும் உள்ளது ( செய்யது ஷரீ அத் ஃபைனான்ஸ் )
உலக முஸ்லிம்கள் அனைவரும் இந்த வங்கித் துறையில் பங்கேற்றிருந்தால் இன்னேரம் பல கோடி மடங்கு அதிகமாக இருந்திருக்கும். நாம்தான் மார்க்க விழுமியங்களை மதிப்பதில் மந்தமாயிற்றே?
இனியாவது விழித்துக் கொள்வோமா?
இதோ நமது வேதம் உரத்துச் சொல்கிறது
*நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருட்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம் ஆனால் பொறுமையுடையோருக்கு நபியே நீர் நற்செய்தி கூறுவீராக
*உங்களுக்கு முன் சென்று போனவர்களுக்கு ஏற்பட்ட சோதனைகள் உங்களுக்கு வராமலே சொர்க்கத்தை அடைந்து விடலாம் என்று எண்ணுகிறீர்களா? அவர்களை வறுமையும் பிணியும் பீடித்தன தூதரும் அவருடன் விசுவாசம் கொண்டவர்களும் அல்லாஹ்வின் உதவி எப்போது வரும் என்று கூறும் வரை அலைக்கழிக்கப்பட்டனர் அல்லாஹ்வின் உதவி மிக சமீபத்தில் இருக்கின்றது. (2:214)
*ஈமான் கொண்டோரே இரட்டித்துக் கொண்டே போகும் வட்டியை உண்ணாதீர்கள் அல்லாஹ்வை அஞ்சி இதனைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் (3:130)
*நீங்கள் உண்மை மூஃமின்களாக இருந்தால் அல்லாஹ்வுக்கு அஞ்சி எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டு விடுங்கள் (2:278)*
கடன் வாங்கியவன் வசதி வந்து திருப்பித் தரும் வரை பொறுத்திருங்கள் அல்லது அதனைத் தர்மமாக தள்ளுபடி செய்து விடுங்கள். (2:280)
*அல்லாஹ் வட்டியை அழிக்கின்றான் தான தர்மங்களை பெருக்குகிறான்.
*எத்தகைய கஷ்டத்திலும் நீங்கள் பொறுமையைக் கைக்கொண்டு தொழுது இறைவனிடத்தில் உதவி தேடுங்கள் (2:45)
*ஒவ்வொரு கஷ்டத்திலும் ஒரு லேசும் இருக்கிறது (94:06)
( நர்கிஸ் டிசம்பர் 2008 இதழின் தலையங்கத்தில் இருந்து )
நர்கிஸ் மாத இதழ்
நிறுவனர் : மர்ஹூம் எம். முஸ்தபா ஹுசைன்
நிர்வாக ஆசிரியை : எம். அனீஸ் ஃபாத்திமா
கௌரவ ஆசிரியர் :
டாக்டர் ஏ. சையத் இப்ராஹிம் எம்.பி.பி.எஸ். ( ஹிமானா சையத் )
துணை ஆசிரியை : எம். பர்வீன் ஃபாத்திமா
முகவரி :
54 மரியம் நகர்
மல்லிகைபுரம்
திருச்சிராப்பள்ளி 620 001
தொலைபேசி : 0431 2301255
அலைபேசி : 94 875 70135
மின்னஞ்சல் : aneesnargis@hotmail.com
Sent: Muduvai Hidayath (muduvaihidayath@gmail.com)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment