Friday, August 29, 2008

ஊடகத் துறையில் முஸ்லிம்கள் கால் பதிக்க வேண்டும்!

'எனக்கு முஸ்லிம் பத்திரிகையாளர்கள் அதிக அளவில் தேவைப்படுகிறார்கள்'

கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்திற்குக் கடந்த மார்ச் 4ம் தேதியன்று (04-03-2008) வருகை தந்திருந்த பிரபல வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரான ஃபிலிப்ஸ் பென்னட் பேசியபோது வெளிப்பட்ட ஆதங்கம் இது.

'இஸ்லாத்தைப் பற்றிய தவறான எண்ணங்களைக் கொண்டுள்ள ஊடகங்களே எனது கூற்றிற்கு அடிப்படைக் காரணம்!' என்கிறார் இவர்.

ஒரு பிரபல மேற்கத்திய செய்தி ஊடகத்தின் தலைமை நிர்வாகியின் இக்கூற்றினைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் சிந்தித்தால் சில உண்மைகள் புலப்படுகின்றன.

இஸ்லாத்தின் மீதான காழ்ப்புணர்ச்சியில் தொடர்ந்து பொய்ப் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருவதும் உண்மைக்குப் புறம்பான அத்தகைய செய்திகளின் முகமூடிகள் மிகக் குறுகிய காலத்திற்குள் கிழிந்து விடுவதும் தொடர்ந்து நடந்த வண்ணம் உள்ளது.

எவ்வித ஆதாரமும் இல்லாமல் திரிப்பதைத் தொழிலாகக் கொண்ட சில அறிவுஜீவி(!) எழுத்தாளர்களின் ஆக்கிரமிப்புக்களை ஊடகங்களிலிருந்து அகற்றினால் மட்டுமே நடுநிலைப் பத்திரிகை எனும் பெயரினைத் தக்க வைக்க இயலும் என்ற நிலைக்கு மேற்கத்திய ஊடகங்களே தள்ளப்பட்டுள்ளன என்பது வெட்டவெளிச்சமாகிக் கொண்டே வருகிறது.

ஊடகங்களின் அவசியம்

நவீன உலகில் ஊடகத்துறையின் முக்கியத்துவத்தினையும் அதில் முஸ்லிம்கள் கால்பதிக்க வேண்டியதன் அவசியத்தையும் சந்தர்ப்பம் கிடைக்கும் வேளைகளில் எல்லாம் பல்வேறு சமூகநல ஆர்வலர்கள் சுட்டிக்காட்டி வந்துள்ளனர்.

உலகின் சமாதான சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை முறையைக் கொண்டுள்ள இறை மார்க்கம் இஸ்லாமும் அது கூறும் வழியில் வாழ்க்கையை அமைத்துக் கொண்டுள்ள முஸ்லிம்களும் உலகிற்கு வழிகாட்டிகளாக எடுத்துக் கொள்ளப்படுவதற்கு நேர்மாறாக, உலக சமாதானத்திற்கு எதிரானவர்களாகச் சித்தரிக்கப்பட்டுள்ள இன்றைய நிலைக்கு மூலக் காரணம் ஊடகங்களே.

உலகளாவிய அளவிலிருந்து இந்தியச் சூழல் வரை முஸ்லிம்கள் அடக்கி ஒடுக்கப்படுவதற்கும் நியாயம் அநியாயமாகவும் அரச, பாஸிஸ, பயங்கரவாதச் செயல்கள் நியாயங்களாகவும் திரித்து மக்கள் மனதில் திணிக்கப்பட்டதற்கும் ஊடகங்களே பயன்படுத்தப்பட்டுள்ளன.

தமிழக தென்காசியிலிருந்து மகாராஷ்டிரா நான்டெட் வரை, வெடிகுண்டுகள் நிர்மாணிப்பதிலும் அதனை வெடிக்க வைப்பதிலும் ஆர்.எஸ்.எஸ் தலைமையிலான சங்கபரிவாரங்கள் தான் காரணம் என்பதைக் காவல்துறை மிகத் தெளிவான ஆதாரங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டப் பின்னரும் நாட்டில் நடக்கும் எந்த ஒரு குண்டுவெடிப்பிலும் முஸ்லிம்களை மட்டுமே குறிவைத்து அரசு இயந்திரங்கள் செயல்படுதவற்கும் நாட்டின் அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் சங்கபரிவாரம் போன்ற பாஸிஸ சக்திகள் சுதந்திரமாக உலாவருவதற்கும் அவைகள் செய்யும் அக்கிரமங்கள் திட்டமிட்டு இஸ்லாமிய அமைப்புகள் மீது கட்டிவைக்கப்பட்டுத் தடை செய்யப்படுவதற்கும் காரணம் ஊடகங்களே.

உலகில் வலிமை குறைந்த நாடுகள் ஏகாதிபத்திய சக்திகளால் தகர்க்கப்படும் பொழுதும் உலகம் கைகட்டி அதனை நியாயப்படுத்திக் கொண்டு எதுவும் செய்யாமல் இருப்பதற்கும் இவ்வூடகங்களின் பொய் பிரச்சாரங்களே காரணம்.

உலகை ஒரே செய்தியின் மூலம் தலைகீழாக மாற்றிப்போடும் அதி சக்தி வாய்ந்த இந்த ஊடக ஆயுதத்தை, பாஸிஸ, ஏகதிபத்தியச் சக்திகள் முழுமையாக ஆக்ரமித்துக் கொண்டதும் இத்துறையின் சக்தியை முஸ்லிம்கள் சரிவர புரிந்துக் கொள்ளாமல் பாராமுகமாக இருந்ததுமே இவற்றிற்கான மூலக் காரணமாகும்.

காலம் தாழ்ந்தெனினும் துவங்கி சில வருடங்களிலேயே உலக மக்கள் மனதை கொள்ளை கொண்டு விட்ட அல் ஜஸீரா, ப்ரஸ் டிவி போன்ற முஸ்லிம்களின் ஊடக கால்வைப்பு, உலகில் ஒரு 20 வருடங்களுக்கு முன்பு இருந்த நிலையை மாற்றி அமைத்துள்ளது என்பதற்கான ஆதாரமே இந்தப் பிரபல மேற்கத்திய ஊடகத் தலைமை நிர்வாகியின் கூற்று வெளிப்படுத்துகின்றது.

சரி... மேற்கத்திய ஊடகங்களே முன்வந்து முஸ்லிம் செய்தியாளர்கள் அதிகமாகத் தேவைப்படுவதன் அவசியத்தை உணர்ந்துள்ள இச்சூழலில் முஸ்லிம்கள் செய்ய வேண்டியது என்ன?
சக்தி வாய்ந்த அரசு இயந்திரங்களான இராணுவம், காவல்துறை, நீதிமன்றம், உளவுத்துறை போன்றவற்றில் முஸ்லிம்கள் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்பட்டது போன்றே ஊடகத்துறையிலும் முழுமையாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். இந் நிலையை முதலில் மாற்றியமைப்பதற்கான முயற்சிகளைத் துவங்க வேண்டும்.

பிரச்சனைகள் ஏற்படும் வேளைகளில் மட்டும் அதனைச் சுமூகமாகத் தீர்ப்பதற்கான வழிமுறையைப் பேணுவதை விட, முழு பிரச்னைகளுக்குமான மூல காரணத்தைக் கண்டறிந்து அதனைச் சீர்செய்வதற்கு முயல்வதே அறிவுடைமையாகும்.

அவ்வகையில் இன்றைய நவீன உலகில், ஒட்டு மொத்த முஸ்லிம்கள் மட்டுமின்றி வலிமை குன்றிய, பலவீனர்கள் மீது பிரயோகிக்கப் படும் அநியாயங்களுக்கு மூலக்காரணம் அதி சக்தி வாய்ந்த ஊடகத்துறையில் நியாயவான்களின் எண்ணிக்கைக் கணிசமான அளவில் இல்லாமையே என்ற யதார்த்ததினை மனதில் நிறுத்த வேண்டும்.

இதனைச் சீர் செய்து விட்டால், பிரச்சனையின் ஆணிவேரைக் கண்டறிந்துச் சீர்செய்ததற்கு ஒப்பானதாகும்.

அவ்வகையில், கண்ணெதிரே நடக்கும் அக்கிரமங்களை மக்கள் முன்னிலையில் படம்பிடித்துக் காட்டி மக்களை அநியாயங்களுக்கு எதிராகப் போராடவும் வைப்பதற்கு ஏற்ற வகையில் முஸ்லிம்கள் கணிசமான அளவில் முன்வர வேண்டும்.

எவ்வாறு சமுதாயத்தின் உயர்வுக்குக் கல்வியில் தன்னிறைவு பெறுவது கட்டாயமோ, அதனை விடக் கட்டாயமானது ஊடகத்துறையில் முஸ்லிம்கள் கால்பதிக்க வேண்டியதாகும். சமுதாய, சமூகங்களின் சுமூகமான, சமாதானமான வாழ்விற்கு முஸ்லிம்கள் ஊடகத்துறையில் கால்பதிப்பதைத் தவிர வேறு வழி ஏதுமில்லை.

பள்ளியிலோ, கல்லூரியிலோ படித்துக் கொண்டிருக்கும் ஒரு முஸ்லிம் மாணவனின் எதிர்கால வாழ்க்கை (?) பிரகாசமாயிருக்க மருத்துவம், IT அல்லது Oil/Gas துறைகளே கதி என்று போதிக்கப்பட்டுவரும் தற்போதையச் சூழல் மாறி, தாம் செய்யும் பணிகளில் நிறைவைப் பெற்றுத் தரும், அசத்தியத்தை வெருண்டோடச் செய்து சத்தியத்தை நிலைநாட்டும் ஆக்கப்பூர்வமான, அத்தியாவசியமான ஊடகத்துறை பணிகளில் இளைய சமுதாயத்தை வார்த்தெடுக்க முன்வர வேண்டும்.

அரசு கல்வி, வேலை வாய்ப்புகளில் முஸ்லிம்களுக்கு கிடைத்துள்ள 3.5 சதவீதம் இடஒதுக்கீடைத் தனியார் துறைகளிலும் கிடைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளலாம். முக்கியமாக ஊடகங்களில் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்பட்டிருக்கும் முஸ்லிம்களின் எண்ணிக்கையில் இருக்கும் வறட்சியைப் போக்க உடனடியாக வழிவகைக் காணப்பட வேண்டியது கட்டாயத் தேவையாகும்.

சரி... ஒரு சிறந்த பத்திரிகையாளராக (எழுத்தாளர்) ஆவதற்கு என்ன செய்யவேண்டும்?

இந்தியாவின் சிறந்த பத்திரிகை ஆசிரியர் எனப் பெயர் பெற்ற குஷ்வந்த் சிங் கூறுகிறார்:

'ஒரு புத்தகத்தை நீங்கள் எழுத வேண்டும் என்று விரும்பினால், அத்தலைப்பின்கீழ் குறைந்தது 400 வார்த்தைகளைத் தினந்தோறும் எழுதி வாருங்கள். சில மாதங்களில் நீங்கள் விரும்பிய புத்தகம் தயாராகி விடும்'.

சரி என்ன எழுதுவது? எப்படி எழுதுவது என்ற தயக்கம் ஏற்படுகிறதா? அதைக் களைவதற்கும் வழி இருக்கிறது.

ஒரு சிறிய உதாரணம் மூலம் இதனைப் பார்க்கலாம். இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கும் 'மது போதை (Alcoholism)' பற்றிய ஒரு சிறிய தேடலை இணையத்தில் பிரபலமான தேடுபொறியான கூகுள் மூலம் தேடுங்கள்.

மதுவினால் விளையும் தீமைகளையும் அதனைத் தவிர்க்க வேண்டிய அவசியத்தையும் அதில் சிக்கியவர்களை மீட்கும் விதம் பற்றிய பயிற்சிகளையும் முழுமையாக அறிந்து கொள்வீர்கள்.

மது அருந்தியதால் பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய ஒரு புள்ளி விபரம் தேவையா?

தேடுங்கள் கிடைக்கும்.

மதுவினால் பாதிக்கப்பட்டவர்கள், இழப்பீடுகள், உண்மைச் சம்பவங்கள், துயர வாக்குமூலங்கள்?

தேடுங்கள் கிடைத்துக் கொண்டே இருக்கும்.

இன்றைய நவீன உலகில், துல்லியமான முழு அறிக்கைகளுடன் அமைந்த ஆய்வுக் கட்டுரைகளையும் சிக்கலான பிரச்னைகளுக்குத் தீர்வுகளையும் சொல்வது மிக எளிது.

அனைவரும் இந்தியப் பிரச்னைகளுக்கு மூல காரணம் பெருகி வரும் மக்கள் தொகை தான்(!) என்று ஈனஸ்வரத்தில் கூக்குரல் எழுப்புகையில், மக்கள் தொகை மளமளவெனப் பெருகும் இந்தியாவிற்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கட்டுரை எழுதுங்கள். மக்கள் தொகை பெருகப்பெருக வளர்ந்து கொண்டிருக்கும் மனித வளமும் நுட்பமும் சர்வதேச உலகில் சரித்திரம் படைத்துவரும் இந்தியாவின் சாதனைகள் பற்றிப் பட்டியலிடுங்கள். இஸ்லாம் ஏன் குடும்பக் கட்டுப் பாட்டினை எதிர்க்கிறது என்பதனைப் பாமரருக்கும் புரியவையுங்கள்.

குடும்பக் கட்டுப்பாட்டினைக் கையாள ஆரம்பித்ததனால் சீனாவில் இளையவர்கள் குறைந்து முதியவர்கள் பெருகி நாடு அடையும் துன்பங்கள் பற்றியும் எழுதுங்கள். அனைத்தையும் அசைக்க இயலா ஆதாரத்துடனும் உறுதியுடனுடன் எழுதுங்கள்; எழுதிக்கொண்டே இருங்கள்.

நம்மைச் சுற்றி தினந்தோறும் நடக்கும் நிகழ்வுகள் பலப் பல. அவற்றில் நடக்கும் அசத்தியங்கள், அநீதிகள், அக்கிரமங்கள் எத்தனை எத்தனை? அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீர்வு சொல்லும் இஸ்லாமிய வழிமுறைகளைக் காண்பியுங்கள்.

இளைய தலைமுறையினரைச் சீரழிப்பதில் ஊடங்களின் பங்கு எத்தனை எத்தனை என்பதைப் பட்டியலிட்டுக் காட்டுங்கள்.

இளமையில் கர்ப்பம் தரிப்பதையும், கலைப்பதையும் கூட நாகரீகமெனக் காட்டும் சூழல்களைத் தீயிட்டுப் பொசுக்குங்கள்.

மனிதம் மறந்து மதவெறியினைத் தூண்டும் தீய சக்திகளின் செயல்களை வெட்ட வெளிச்சமாக்குங்கள்.

அவ்வளவு ஏன்? இக்கட்டுரையை வாசிக்கும் பல அன்பர்கள் வார்த்தைகளைக் கோர்த்து எழுதத் தெரியாதவர்களாக இருக்கலாம்.

ஆனால் சிந்தனை எனும் சக்தி நம் அனைவருக்கும் இருக்கிறதே!

எனவே சிந்தியுங்கள். உங்கள் உலகம் என்பது காலைக் கண்விழிப்பதிலிருந்து இரவு கண் மூடி நித்திரையில் ஆளும் வரைதான். உங்கள் உலகில் சஞ்சரிக்கையில் உங்களைப் பாதித்த விஷயங்களைப் பட்டியலிடுங்கள். இஸ்லாம் இதற்குக் கூறும் தீர்வு என்ன என்பதைக் கலந்து ஆலோசியுங்கள். தேடுங்கள். குறிப்புக்களை எடுத்துக் கொள்ளுங்கள். நிறைய எழுதுங்கள்.

கணினி யுகத்தில் வசிக்கிறீர்கள் என்பதை ஆழ்ந்து உள்வாங்கிக் கொள்ளுங்கள். சொந்தமாகக் கணனியும் இணைய இணைப்பையும் இயன்றால் வலைப்பதிவையும் துவக்குங்கள். இயன்றவரையில் பத்திரிகைத் துறைக்கு வர இளையவர்களைத் தூண்டுங்கள்.

இன்றைய உலகம் - இது தகவல் தொழில்நுட்பப் பரிமாற்றக் களம்.

இயன்றவரை நீங்கள் அறிந்த நல்ல விஷயங்களைப் பிறருக்கு எடுத்துச் சொல்லுங்கள். அதன் துவக்கம் இதுநாள் வரை முஸ்லிம் சமூகம் தம் குடும்பச் சொத்தாக எண்ணி வந்த இஸ்லாமாக இருக்கட்டும். மனிதனைப் படைத்த இறைவன் அளித்த நெறி மனங்களை வெல்ல வல்லவை.

'மிகவும் பிரபலமாகப் பேசப்பட்டு சந்தைப் படுத்தப்படும் பொருட்கள் கூட படுவீழ்ச்சி அடைகின்றன. மிகப் பிரபலமான எதிர்காலத்தைத் தரும் என்று கணிக்கப்படும் துறைகளும் குறைகளைச் சந்திக்கும். ஏனெனில் அவை சரியான முறையில், சரியான விதத்தில், மக்களைச் சென்றடைவதில்லை!' என்பதே வியாபார ரீதியிலான நுணுக்கங்களைப் பயிற்றுவிக்கும் சர்வதேச நிபுணர்களின் தத்துவம்.

இங்குக் கருவாகக் கொண்டிருக்கும் இஸ்லாம்கூட அத்தகைய ஒரு பேசுபொருள்தான். மிகுந்த தரம் கொண்ட ஒரு வாழ்வியல் தத்துவத்தைப் பின்பற்றும் முஸ்லிம்களே அந்த உயரிய நெறியை உலகிற்குப் பறை சாற்றுவதில் ஏனோ மிகவும் பின் தங்கியுள்ளனர்.

இஸ்லாமிய நெறிகளை அழகிய முறையில் பிறருக்கு எடுத்துரைக்க ஆயிரமாயிரம் வழிகள் உள்ளன. அதில் சிறந்ததாகக் கருதப்படுவது அழகிய விவாதத்தினை ஏற்படுத்தி ஐயங்களைக் களைவதேயாகும். இதன் மூலம் இஸ்லாம் பற்றி பிற மதத்தினர் மனதில் பொதிந்துள்ள பாரதூரமான விஷயங்களைப் பேசி விளக்கங்கள் கொடுக்கலாம். ஓர் அப்பாவி அமெரிக்கருக்கோ அல்லது ஐரோப்பியருக்கோ இஸ்லாம் என்றால் 'அச்சுறுத்தக் கூடியது' என்றுதான் தொடர்ச்சியாகப் போதிக்கப்படுகிறது என்ற உண்மை நிலை நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?

சத்திய மார்க்கமாம் இஸ்லாம் எளிதில் மனங்களை வெல்லக் கூடியது. சர்ச்சைகள் எழுப்பக்கூடிய தலைப்புகளில்கூட கீழ்க்கண்ட படித்தரங்களில் ஓர் அழகிய விவாதக் களத்தை அமைத்தால் எளிமையானதாக இருக்கும். அதாவது,

இஸ்லாம் என்பது,
- உணர்வுப் பூர்வமானது (Emotional)
- வாழ்வில் நன்னெறியினைப் புகுத்தக்கூடியது (Ethical)
- தர்க்க ரீதியிலானது மற்றும் பகுத்தறிவுக்குப் பொருத்தமானது (Logical)

பிரச்னை என்பது மனங்களிலும் இல்லை. நெறிகளிலும் இல்லை. சென்று சேர்வதில் மட்டுமே உள்ளது. ஆகவே, சத்தியங்களையும் நியாயங்களையும் மக்களிடம் சென்று சேர்ப்பதற்கு உதவியாக எழுத ஆரம்பியுங்கள்; எழுதுங்கள், எழுதிக் கொண்டே இருங்கள்.

பேனா முனைகள், அசத்தியத்திற்கு எதிராக சத்தியத்தை நிலைநாட்ட எழுதிக் கொண்டே இருக்கட்டும்!

புதிய எழுத்தாளர்களுக்கு வாழ்த்துக்கள்!

2 comments:

thambi durai said...

why only muslims need to come media industry. why con't u mention as "nadunilaiyarkall" insted of muslim.

இனியவன் ஹாஜி முஹம்மது said...

Dear Thambi,
The muslims not known the values and the impartance os it. Instead of fighting let them to come to know our world.