Showing posts with label விடுதலைப்புலிகள். Show all posts
Showing posts with label விடுதலைப்புலிகள். Show all posts

Monday, February 16, 2009

இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக டாக்டர் ராமதாஸ் அபாண்டம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கண்டனம்




பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நேற்று முன்தினம் திண்டிவனம் தைலாபுரத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது,


இலங்கை கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம் இளைஞர்கள் பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட்டு அவர்கள் ஐ.எஸ்.ஐ. உளவாளிகளிடம் பயிற்சி பெற்று திரும்பி இருப்பதாகவும் அவர்களால் இந்தியாவிற்கு ஆபத்து என்றும், குறிப்பாக கூடங்குளம், கல்பாக்கம் அணுமின்நிலையம் போன்ற கேந்திரங்களுக்கு பெரும் ஆபத்து என்றும் குறிப்பிட்டு அந்த பேட்டி முக்கியமான நாளிதழ்களில் முக்கியதுவத்துடன் பிரசுரிக்கப்பட்டுள்ளது.



வட இந்தியாவில் இந்துத்துவ வகுப்புவாத சக்திகள் முஸ்லிம்கள் மீது சுமத்தி வந்த குற்றச்சாட்டுகளுக்கு ஈடாக தமிழக முஸ்லிம்களையும் தவறான கண்ணோட்டத்தோடு பார்க்கக்கூடிய சூழ்நிலைக்கு டாக்டர் ராமதாஸின் பேட்டி வழிவகுத்துள்ளது. இலங்கையில் அமைதி திரும்ப வேண்டும். அப்பாவி தமிழ் மக்கள் இன்னல்களுக்கு ஆளாக்கப்படகூடாது என்பதில் தமிழக முஸ்லிம்களும் இலங்கை வாழ் முஸ்லிம்களும் அக்கறை கொண்டவர்கள்.

ஏனெனில் இலங்கை இராணுவத்தின் கோரத் தாக்குதலில் அப்பாவி தமிழர்கள் இலங்கையில் பாதிக்கப்படுவதைபோல், விடுதலைப்புலிகளால் இலங்கை முஸ்லிம்கள் பலமடங்கு பாதிக்கப்பட்ட வர்கள்.குறிப்பாக யாழ்ப்பாணம், மன்னார் மாவட்டங்களில் நள்ளிரவு 12 மணிக்கு துப்பாக்கி முனையில் புகுந்த விடுதலைப்புலிகள், இலட்சத்திற்கும் மேற்பட்ட அங்குள்ள முஸ்லிம்களின் அசையும், அசையா சொத்துக்கள் அனைத்தையும் பிடுங்கி கொண்டு 24 மணி நேர அவகாசத்தில் வாழ்ந்த இடங்களை விட்டு உடுத்திய உடைகளோடு வெளியேற்றியதை வரலாறு மறக்க தயாராக இல்லை.

அவர்களில் பலரது பூர்வீகம் தமிழ்நாட்டின் தூத்துக்குடி, இராமநாதபுரம், தஞ்சை மாவட்டங்கள் என்ற வரலாறு ராமதாஸை போன்ற வர்களுக்கு தெரியாமல் இருக்கலாம்.இலங்கையின் கிழக்கு மாகானத்திலுள்ள காத்தான் குடி பள்ளிவாசலில் இரவு தொழுகை தொழுது கொண்டிருந்த நிராயுதபாணிகளான முஸ்லிம்கள் நூற்றுக்கணக்கானவர்களை விடுதலை புலிகள் ஈவு இரக்கமின்றி சுட்டுக்கொன்றது டாக்டர் ராமதாஸை போன்றவர்களுக்கு மறந்திருக்கலாம்.


ஏனெனில் இலங்கை தமிழர்களுக்காகவே வாழ்நாள் எல்லாம் உழைத்த தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி யின் தலைவர்களான அமிர்தலிங்கம், சிவசிதம்பரம், உள்ளிட்டவர்கள் விடுதலைப்புலிகளால் கொல்லப் பட்டதையே மறந்து விட்டவர்கள்தானே இவர்கள்.புலனருவ மாவட்டத்தில் நள்ளிரவில் புகுந்த விடுதலைப்புலிகள் முஸ்லிம் பச்சிளம் குழந்தைகளை கண்டம் துண்டமாக வெட்டிக் கொன்றதை மனசாட்சி உள்ள எவருமே மறக்க மாட்டார்கள்..

தமிழகத்தின் தொப்புள்கொடி உறவு தமிழர்கள் இலங்கையில் உள்ள தேயிலைத்தோட்ட தொழிலாளர்கள்தான் அவர்களுக்கு குடியுரிமை கொடுக்கக் கூடாது என தடுத்தவர்கள் யாழ்ப்பாண தமிழர்கள் என்பதும், இதைப்பற்றி 30 ஆண்டுகளுக்கு முன்பே இந்திய நாடாளுமன்றத்தில் திரு.கே.டி. கோசல்ராம் நாடார் அவர்கள் சுட்டிக்காட்டியதும் வரலாற்றில் பதிவுசெய்யப்பட்ட ஒன்று.


இவைகள் அனைத்தையும் மறந்து விட்டு, சொந்த நாட்டிலும் பிற நாடுகளிலும் அகதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கின்ற அப்பாவி இலங்கை முஸ்லிம்கள் மீது அநியாயமான அவதூறை டாக்டர் ராமதாஸ் சுமத்துவது, இந்திய தாய் நாட்டின் மீது விசுவாசம் கொண்டு பிரிவினை நேரத்தில் கிழக்கு பாகிஸ்தானி லிருந்து அஸ்ஸாமிற்கு வந்து குடியேறிய முஸ்லிம்களை, வங்கதேச வெளிநாட்டவர் என்று விரட்டத்துணியும் பாரதிய ஜனதாவின் செயலை விட கொடூர செயலாகும்.

நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்து இலங்கை பிரச்சினையில் காய் நகர்த்தும் டாக்டர் ராமதாஸ், இலங்கை தமிழர்கள் மீது அக்கறை கொண்டவராக இருப்பாரேயானால், இந்திய அரசு இலங்கை தமிழர்களை காப்பாற்ற உருப்படியாக எதையும் செய்யவில்லை என்று அவர் சொல்வது உண்மையாக இருக்குமேயானால் மத்திய அமைச்சராக உள்ள அவரது மகன் பதவியை விலக செய்துவிட்டு அறிக்கைகளை வெளியிடட்டும்.

அதை விட்டுவிட்டு முஸ்லிம்கள் மீது அபாண்ட பழி சுமத்துவது அவரது சாயத்தை வெளுக்க வைக்கும் செயலாகும். இதனை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வன்மையாக கண்டிக்கிறது.


- காயல் மகபூப்.


மாநில செயலாளர், தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக்


http://tmpolitics.blogspot.com/

Friday, January 30, 2009

ஜெயலலிதா விடுதலைப்புலிகளுக்கு எப்போதும் எதிரியா?





அவர் எப்படிப்பட்ட புளுகர் என்பதைத் தெரிந்துகொள்ள, இதோ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏட்டுக்கு 4.10.1990 அன்று செல்வி ஜெயலலிதா சிறப்புப் பேட்டியொன்று அளித்துள்ளதைப் படித்துப் பாருங்கள்!





சிங்கள ராணுவமும், காவல்துறையும் இலங்கையில் தமிழ் இனத்தை அழிப்பதில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். விடுதலைப்புலிகள் இயக்கம் துணிவான போராட்டத்தில் ஈடுபட்டு சிங்கள ராணுவத்தை எதிர்த்து தீரத்துடன் போர் நடத்தி வருகிறது. கடந்த இரு மாதங்களில் தமிழ்நாட்டில் புகார் கூறும் அளவிற்கு எந்தவிதமான நடவடிக்கைகளிலும் விடுதலைப்புலிகள் ஈடுபடவில்லை.





இப்போது விடுதலைப்புலிகள் இயக்கம் ஒரு நாட்டின் அரசாங்கத்தை எதிர்த்துப் போர் நடத்தி வருகின்றது. இது ஓர் அதிதீரமான செயல். விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்டால் இலங்கையில் உள்ள தமிழினம் முழுவதும் அழிந்துவிடும் என்பதை நாம் மனதில் நிறுத்தவேண்டும். விடுதலைப்புலிகளின் வெற்றி இலங்கைத் தமிழர்களின் வெற்றியாகும். அவர்களுக்கு உதவும் வகையில் எதுவும் செய்வதற்குப் பதிலாக தமிழக முதலமைச்சர் கருணாநிதி தன்னைப் பாதுகாத்துக் கொள்வதிலேயே கவனம் செலுத்தி வருகிறார்.





இலங்கைத் தமிழர்களின் கதிபற்றி பிரதமர் வி.பி. சிங் எந்தவிதக் கவலையும் படுவதாகத் தெரியவில்லை. மாறியுள்ள சூழ்நிலையில் ஒரே மருந்து தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளை ஒட்டுமொத்தமாக ஆதரிப்பதுதான். தனது அதிகாரத்திற்கு உட்பட்ட இயன்ற அனைத்து உதவிகளையும் முதலமைச்சர் கருணாநிதி வழங்கவேண்டும். மத்திய அரசு இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் அதில் குறிப்பிடப்பட்ட விதிகளின்படி சமாதானத் தீர்வு ஒன்றைக் காணவேண்டும். அல்லது விடுதலைப்புலிகளை இந்திய அரசு நூற்றுக்கு நூறு ஆதரிக்கவேண்டும்.



செய்தியாளர்: விடுதலைப்புலிகள் இயக்கம் அமைதி ஒப்பந்தத்தை நிராகரித்துவிட்டது. ஆனால், நீங்கள் இன்னமும் விடுதலைப்புலிகளை ஆதரிக்கவேண்டும் என்று கூறுகிறீர்களே?





ஜெயலலிதா: நம்முடைய முக்கிய நோக்கம் என்ன? தமிழ் இனம் அழிக்கப்பட்டு விடக்கூடாது. இலங்கையில் வாழும் தமிழர்கள் இனப் படுகொலையிலிருந்தும் பூண்டோடு ஒழிக்கப்படுவதிலிருந்தும் பாதுகாக்கப்படவேண்டும். கடந்த காலத்தில் விடுதலைப்புலிகள் தவறுகளைச் செய்துள்ளனர். ஆனால், நாம் விடுதலைப்புலிகளை ஆதரிக்காவிடில் அது இலங்கையில் தமிழ் இனத்திற்கு அழிவை ஏற்படுத்தும். அதை நாம் அந்த நோக்கோடு பார்க்கவேண்டும்.





செய்தியாளர்: எம்.ஜி.ஆர். செய்த அளவுக்கு இல்லாவிட்டாலும், கருணாநிதி விடுதலைப்புலிகளுக்கு உதவி செய்யவில்லையா?





ஜெயலலிதா: அதற்கான எந்தத் தடயத்தையும் நான் காணவில்லை. ***





இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டில் மாத்திரமல்ல, 8.10.1990 தேதியிட்ட இந்து இதழிலே ஜெயலலிதா விடுதலைப்புலிகளைப்பற்றி ராஜீவ் காந்தி அவர்கள் கலந்துகொண்ட கூட்டத்திலேயே குறிப்பிட்ட வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.



அவை வருமாறு:- இலங்கையில் தமிழர்களைக் காப்பாற்ற எதுவும் செய்யாததற்காக ஜெயலலிதா மத்திய அரசையும், மாநில அரசையும் குற்றஞ்சாட்டினார். இலங்கை அரசுக்கு எதிரான தற்போதைய போராட்டத்தில் விடுதலைப்புலிகள் தோல்வி அடைந்தால் அத்தீவில் உள்ள தமிழினம் முழுவதுமே அழிந்துவிடும் என்று ஜெயலலிதா எச்சரித்தார்.





இது மாத்திரமல்ல, 29.4.1991 தேதிய இந்து நாளேட்டுக்கு ஜெயலலிதா பேட்டியளித்தபோது, பங்களாதேஷ் பிரச்சினையில் இந்திரா காந்தி செய்ததைப்போல ராணுவ நடவடிக்கைபற்றி இந்தியா சிந்தித்தால், அதில் தவறு எதுவுமில்லையென்று நான் கருதுகிறேன் என்றும் கூறி அது வெளிவந்துள்ளது.





ஜெயலலிதாவிற்கு இன்று நெருங்கிய ஆதரவாளராக உள்ள சுப்பிரமணியம் சுவாமி 21.7.1995 அன்று ஜெயின் கமிஷன் விசாரணையிலே கூறியது என்ன தெரியுமா?





ராஜீவ் காந்தியின் கொலைக்கு முன்பும், பின்பும் ஜெயலலிதா விடுதலைப்புலிகளின் கொள்கைப் பிரச்சாரகராகவே விளங்கினார். ராஜீவ் காந்தியின் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வேண்டாமென்று ஜெயலலிதாவிற்கு விடுதலைப்புலிகள் முன்கூட்டியே தகவல் தெரிவித்திருந்ததால், அ.தி.மு.க.வும், காங்கிரசும் தேர்தல் கூட்டணி வைத்திருந்தபோதிலும், ராஜீவ் காந்தியுடன் இணைந்து தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ஜெயலலிதா கலந்துகொள்ளவில்லை, விமான நிலையத்திலே ராஜீவ் காந்தியை வரவேற்கவும் செல்லவில்லை.





விடுதலைப்புலிகளுக்கு இந்த அளவிற்கு ஆதரவாளராக இருந்தவர் தற்போது விடுதலைப்புலிகளுக்குத் தான் என்றைக்கும் எதிரியாக இருந்துள்ளதாக கடைந்தெடுத்த பொய்யைக் கூறி யாரை ஏமாற்ற முயலுகிறார்?



நன்றி: "முரசொலி