• மதம் என்பது எந்த நிலையிலும் மனிதனுக்கு துணை போக வேண்டும். இல்லாவிட்டால் வாழ்க்கையில் அதற்கு இடம் தர வேண்டிய அவசியமில்லை.
• முதலில் நாம் நம்மிடம் நம்பிக்கை வைத்துக் கொள்ள வேண்டும். அந்த நம்பிக்கை இருந்தால் தான் முன்னேற வழி கிடைக்கும்.
• வாழ்க்கையில் ஏதாவது லட்சியம், கொள்கையில் பிடிப்பு வேண்டும். அந்த கொள்கை வழியில் நடந்தால் நம்முடைய இடர்ப்பாடுகளின் அளவு குறைந்து விடும் அல்லது மட்டுப்பட்டு விடும்.
• ஒரு திட நம்பிக்கையைக் கடைபிடித்து வாழ்க்கையில் சாதனை நிகழ்த்தியவர்களை சரித்திரம் காட்டுகிறது. அதே நம்பிக்கையைச் சற்று விரிவுபடுத்தினால் அது கடவுள் நம்பிக்கையாகி விடும்.
• கடவுள் என்பவர் நம் எல்லோரையும் இணைக்கும் சக்தி. கடவுள் மீது நம்பிக்கை கொள்வது சமூகத்தின் நன்மைக்காகவே. கடவுளை நம்புபவன் உலகத்தை நேசிக்கிறான்.
• கடவுள் கடல் போன்றவர். நாம் கடவுளைத் துணைக்கு அழைத்தால், அந்தக் கடலளவு சக்தியில் ஒரு துளியை மட்டுமே பயன்படுத்துகிறோம். அந்த ஒரு துளியை முழுமையாகப் பயன்படுத்தக்கூட, கடவுள் பற்றிய பூரணநம்பிக்கை இருந்தால் தான் முடியும்.
• இறைவன் எல்லையற்ற அருட்பலம் உடையவன். அவனிடம் முழுநம்பிக்கை கொண்டு நல்ல நெறியில் செல்லும் மனிதனை எந்தச் சக்தியாலும் வெல்ல முடியாது.
• மனிதன் தன்னிடம் முழுநம்பிக்கை கொள்பவனாக இருக்க வேண்டும். அவனை உயர்த்துவதற்கு இறைவனே ஓடிவருவான். வலிமையும், ஆற்றலும் அவனைச் சூழ்ந்து கொண்டு துணை நிற்கும்.
• யாருடைய நம்பிக்கையையும், மனவுறுதியையும் கெடுக்க முயலக்கூடாது. முடிந்தால் நம்மால் முடிந்த உதவிகளை மட்டும் செய்வது நம் கடமை. ஒருவனை மேலே தூக்கிவிடமுடியாவிட்டாலும், அவனிடம் உள்ளதைக் கெடுக்க நினைப்பது பெருங்குற்றம்.
• ஒரு கணம் முயற்சி செய்ததும் லட்சியத்தை அடைந்து விடமுடியுமா? நிலைகுலையாத மனவுறுதியும், வைராக்கியமும் கொண்டிருந்தால் அன்றி இலக்கை அடைய முடியாது. இடிமின்னலுக்கும் இடையில் வானத்தை அண்ணாந்து பார்த்து மழைநீர் அருந்தும் சாதகப்பறவை போல முயற்சியில் தீவிரமாக ஈடுபாடு கொள்ளுங்கள்.
• மனதில் அமைதியுணர்வு கொண்டவனிடத்தில் சஞ்சலம் சிறிதும் இருக்காது. சஞ்சலம் இல்லாத இடத்தில் அன்பு குடி கொள்ளும். அன்போடு செய்யும் செயல்கள் யாவும் சிறப்புடையதாக விளங்கும்.
• எத்தகைய கல்வி நல்லொழுக்கத்தை உருவாக்குமோ, மனவலிமை வளர்க்கச் செய்யுமோ, விரிந்த அறிவைத் தருமோ, ஒருவனைத் தன்னுடைய சுயவலிமையைக் கொண்டு நிற்கச் செய்யுமோ அத்தகைய கல்விதான் நமக்குத் தேவை.
• அன்பு, நேர்மை, பொறுமை ஆகியவற்றைத் தவிர வேறொன்றுமே நமக்குத் தேவையில்லை. அன்பு தான் வாழ்க்கை ஆகும். நாம் மற்றவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமை பிறருக்கு நன்மை செய்வது மட்டும் தான்.
• சிந்தனையின் தொண்ணூறு சதவீத ஆற்றல் சாதாரண மனிதர்களால் வீணடிக்கப்படுகிறது. எனவே, தொடர்ந்து மனிதன் பெரிய தவறுகளைச் செய்து கொண்டே இருக்கிறான்.
• நாம் வாழும் காலமோ குறுகியது. இளமையும், வலிமையும், வளமையும், அறிவுக்கூர்மையும் கொண்ட வர்களே இறைவனை அடையத் தகுதி உடையவர்கள். அதனால், இளமையிலேயே கடவுளை அறிய முற்படுங்கள்.
• ஒரு கருத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த ஒரு கருத்தையே உங்கள் வாழ்க்கை மயமாக்குங்கள். அதையே கனவு காணுங்கள். மூளை, தசைகள், நரம்புகள் என்று ஒவ்வொரு அவயங்களிலும் அந்தக் கருத்தே நிறைந்திருக்கட்டும். வெற்றிக்கு இதுதான் சிறந்த வழி.
• சிங்கங்களே! எழுந்து வாருங்கள். வீணான மயக்கங்களை உதறித்தள் ளுங்கள். நீங்கள் சுதந்திரமானவர்கள். அழியாத பேரின்பத்தின் பங்குதாரர் கள்.
• பலவீனத்திற்கான பரிகாரம், அந்த பல வீனத்திற்கான காரணத்தை சிந்திப்ப தல்ல. மாறாக வலிமையைக் குறித்து சிந்திப்பது தான்.
• உலகம் வேண்டுவது ஒழுக்கமே. கொழுந்து விட்டெரியும் அன்பும், தன்னலமில்லாத பண்பும் யாரிடம் இருக்கிறதோ அவரை இம்மண்ணுலகமே வேண்டி நிற்கிறது.
• எழுந்து நில்லுங்கள். தைரியமாயிருங்கள். பலமுடைய வராகுங்கள். உங்கள் மீதே முழுப் பொறுப்புகளையும் சுமந்து கொண்டு வாழப் பழகுங்கள்.
• சிரத்தை தான் நமக்குத் தேவை. மனிதனுக்கு மனிதன் வேறுபடுவதற்குக் காரணமே இந்த சிரத்தை தான். சிரத்தை உடையவன் வெற்றி பெறுகிறான். சிரத்தை இல்லாதவன் தாழ்ந்தவனாகிறான்.
• ஒரு குறிக்கோளை எடுத்துக் கொள்ளுங்கள். அதையே கனவு காணுங்கள். அதன் நோக்கியே வாழ்க்கை நடத்துங்கள். அந்த கருத்தை உயிர்மூச்சாகக் கொண்டு செயல்படுங்கள். வெற்றி பெறுவீர்கள்.
• நம்முள் நன்மை, தீமை என்று இரு விதமான எண்ணங் களும் இருக் கின்றன. நல்ல விஷயங்களில் மட்டும் கருத்தைச் செலுத்தினால் மட்டுமே நாம் நல்லவர்களாக முடியும்.
• நாம் இப்போது இருக்கும் நிலைமைக்கு நாமே பொறுப்பாளிகள். எதிர்காலத்தில் நாம் எப்படி எல்லாம் இருக்க வேண்டும் என்று விரும்புகிறோமோ அதை நம்முடைய செயல்களால் உண்டாக்கிக் கொள்ள முடியும்.
• மகத்தான செயல்களைச் செய்வதற்காக ஆண்டவன் நம்மைப் படைத்திருக்கிறான். அவற்றை செய்வதற்கு விடா முயற்சியோடு உங்கள் கடமைகளைச் செய் யுங்கள்.
• சரியான வழியில் செலுத்தப்பட்ட மனம் நம்மைக் காக்கும். நம்மை விடுதலை பெறச் செய்யும். மனதை ஒருமுகப்படுத்தும் போது நம் மனோசக்தி வளரும். அதனால், நாம் அதிக அளவில் அறிவைப் பெறமுடியும்.
• தூய்மை, பொறுமை, விடாமுயற்சி ஆகிய மூன்றும் வெற்றிக்கு இன்றியமையாதவை. அத்துடன் இவை அனைத்திற்கும் மேலாக அன்பு இருந்தாக வேண்டும்.
• நாம் எதையும் சாதிக்கவல்லவர்கள். உறுதியான மன நிலையில் விஷத்தைக் கூட பொருட்படுத்தாமல் இருந்தால், அந்த விஷம் கூட சக்தி அற்றதாகி விடும்.
• உங்கள் உடலையும், உள்ளத்தையும், அறிவையும், ஞானத்தையும் பலவீனப் படுத்துகின்ற எந்த விஷயத்தையும் நஞ் சென ஒதுக்குங்கள்.
• நீங்கள் போதுமான அளவுக்கு நெடுங் காலமாக அழுது விட்டீர்கள். இனியும் அழத்தேவையில்லை. எழுந்து நின்று உங்கள் சுயகால்களில் நின்று போராடத் தயாராகுங்கள்.
• பலமற்ற மூளையால் ஒன்றும் செய்ய முடியாது. பலமற்ற நிலையை மாற்றி மூளையைப் பலப்படுத்த வேண்டியது உங்கள் முதல் கடமை. பலம் வந்தால் வெற்றி தொடர்ந்து பின்னால் வரும்.
• தைரியமாயிருங்கள். எல்லாவற்றிற்கும் மேலானது துணிவு. இவ்வுலகில் வாழ்வு எத்தனை நாள்? நெஞ்சில் துணிவிருந்தால் மட்டுமே அரிய பெரிய செயல்களை எல்லாம் நிறைவேற்ற முடியும்.
• நாம் எப்படி எல்லாம் இருக்க விரும்புகிறோமோ அப்படி யெல்லாம் நம் வாழ்வை அமைத்துக் கொள்ளும் ஆற்றல் நம்மிடையே இருக்கிறது. உன் வாழ்க்கை உன் கையில் என்பது இதைத்தான்.
• இந்த உலகம் மிகப்பெரிய உடற்பயிற்சிக்கூடம். இங்கு நம்மை வலிமையுடையவர்களாக ஆக்கிக் கொள்வதற் காக நாம் வந்திருக்கிறோம்.
• இரக்கம் உள்ள இதயம், சிந்தனை ஆற்றல் படைத்த மூளை, வேலை செய்யக்கூடிய கைகள் ஆகிய மூன்றும் தான் நமது இன்றைய தேவை.
வெற்றி தோல்வியைப் பற்றி சிறிதும் சிந்திக்காதீர்கள். தியாக உணர்வோடு முழுமையாக கடமையைச் செய்யுங்கள்.
• நம் வாழ்க்கை ஒரு நாள் முடியப் போவது உறுதி. அதற்குள் ஒரு நல்ல செயலைச் செய்துவிட வேண்டும் என்று உறுதி கொள்ளுங்கள்.
• கோழை தான் தப்பி ஓடமுயற்சி செய்வான். நிலைமையைச் சீர்படுத்தி அமைக்க கோழைத்தனம் பயன்படாது. எடுத்த செயல் முடியும் வரை சலியாது உழைத்து முன்னேறுங்கள்.
• தன்னை அடக்கி ஆளப் பழகிக் கொண்டவன் வெளியில் உள்ள எதற்கும் வசப்பட மாட்டான். அவனுக்கு அதன் பின் அடிமைத்தனம் என்பதே இல்லை.
• நீங்கள் செம்மறி ஆடுகள் என்ற வீணான மயக்கத்தை உதறித் தள்ளுங்கள். நீங்கள் அமரத்துவம் பெற்றவர்கள் .அழியாத பேரின்பத்தின் பங்குதாரர்கள். இறையருள் உங்களுக்குப் பரிபூரணமாக இருக்கிறது.
• எல்லாவிதமாக அறிவும் ஆற்றலும் மனிதனுக்குள்ளே இருக்கிறது. இந்த அறிவை விழித்து எழும்படிச் செய்வது மட்டும் தான் ஒருவனுடைய வேலையாகும்
• தைரியமாயிருங்கள். எல்லாவற் றிற்கும் மேலாக என் பிள் ளைக ளாகிய நீங்கள் துணிவா யிருத்தல் வேண்டும். எதற் காகவும் எள் ளளவும் விட்டுக் கொடுத்தல் கூடாது.
• உங்களுக்குள் இருக்கும் தெய் வத் தன்மையை வெளியே புலப்படுத் துங்கள். தெய்வீகத் தன்மையைச் சுற்றி, ஒவ்வொரு செயலும் இசைவாக ஒழுங்குபடத் தொடங்கும்.
• எல்லா உயிர்களும் கோயில்கள் என்பது உண்மை தான். ஆனால், மனிதர்களே அனைத்திலும் உயர்ந்த கோயில். அதை வழிபட இயலாதவன் என்றால், வேறு கோயில் எதுவும் எப்போதும் பலன் தராது.
• மலைபோல உயர்ந்த தடைகளையும் தாண்டிச் செல் லும் மனவுறுதியோடு போராடுங்கள். நம்பிக்கையும், நேர்மையும், பக்தியும் உங்களிடம் இருக்கும் வரை வெற்றி உங்களைத் தேடிவரும்.
• இன்று நமது நாட்டின் மக்கள் மதிக்கப்படுவது நம் முடைய ஆன்மிக சிந்தனை, எண்ணங்கள் ஆகியவற்றுக்காகத்தான். ஆனால், அவற்றின் பெரு மையை நாம் உணரவில்லை. வெளிநாட்டு மக்கள் நமது ஆன்மிக வளத்திற்காகவே நம்மை நாடு கிறார்கள்.
• அனைவரும் அரும்பாடுபடும் நேரம் இது. எதிர்காலம் நம் முயற்சியைப் பொறுத்தே உள்ளது. எனவே, ஓயாது உழையுங்கள்.
• முயற்சியோடு ஒரு செயலில் ஈடுபடும்போது, ஏராளமான சக்தி நம் மிடத்தில் வெளிப்படுவதைக் காண லாம். பிறருக்காகச் செய்யும் சிறுநன்மைக்கான முயற்சியில் கூட சிங்கம் போன்ற பலனை நாம் பெறமுடியும்.
• எந்தச் செயலையும் நன்மை, தீமை என்று இரண்டின் கலப்பில்லாமல் செய்ய முடியாது. தீயைச் சூழ்ந்துநிற்கும் புகையைப் போல, சற்றேனும் தீமையின் நிழல் எச் செயலோடும் ஒட்டிக் கொண்டு தான் இருக்கும். மிகக் குறைவான தீமையும், மிகுந்த நன்மையும் இருக்கும் செயல்களைச் செய்ய முற்படுங்கள்.
• ஒருவரிடத்தும் பொறாமை கொள்ளாதீர்கள். கடவுளை எல்லாவுயிர்களுக்கும் தந்தையானவர் என்று ஒப்புக்கொண்டுவிட்டு, ஒவ்வொரு மனிதனையும் சகோதரனாக நினைக்கவில்லை என்றால் நம் வழிபாடு பொருளற்றதாகிவிடும்.
• பொறாமையும், சோம்பேறித்தனமும் அடிமையின் இயல்புகள். அவற்றை உதறித் தள்ளிவிட்டு சுதந்திரமுடைய மனிதர்களாக சுறுசுறுப்போடு உங்கள் கடமைகளைச் செய்யத் தொடங்குங்கள். வெற்றி பெறுவீர்கள்.
• மனிதனுக்குள் இருக்கும் தெய்வீக இயல்பை வெளிப்படுத்துவதற்கான ஒரே வழி துன்பப்படுவோருக்கு உதவுவது ஒன்று தான்.
• மனதை ஒருமுகப்படுத்துவது தான் கல்வியின் அடிப்படை லட்சியமாகும்.
• வெற்றி பெறுவதற்கு விடா முயற்சியும், தளராத மனவுறுதியும் தேவை. நீங்கள் கடவுளின் குழந்தைகள். அழியாத பேரின்பத்தின் பங்குதாரர்கள்.
• நம்பிக்கை, நம்பிக்கை, நம்மிடத்தில் நம்பிக்கை; கடவுளிடத்தில் நம்பிக்கை கொண்டு வெற்றி நோக்குடை யவர்களாக வாழுங்கள். வெற்றிக்கான ரகசியம் இது தான்.
• தான் என்னும் ஆணவத்தையும், பேராசையையும் அடக்கும் போது பெரும் வெற்றிகளைப் பெறமுடியும். அரும்பெரும் செயல்களைத் தியாகத்தால் மட்டுமே சாதிக்க முடியும்.
• சுயநலம் ஒழுக்கக்கேட்டினை விளைவிக்கும். சுயநலமின்மையோ நல்லொழுக்கத்தைத் தரும்.
• பாமரனைப் பண்புள்ளவனாகவும், பண்புள்ளவனைத் தெய்வமாகவும் உயர்த்தும் கருத்தே ஆன்மிகம் ஆகும். ஆன்மிக ஈடுபாட்டினால் மட்டுமே மனிதனுக்குள் புதைந்திருக்கும் பரிபூரணத்தன்மை வெளிப்படும்.
-விவேகானந்தர்
-நன்றி : தினமலர் நாளிதழ்,
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment