விடுதலை இராசேந்திரன் இரங்கலுரை:
காங்கிரசிலிருந்து வெளியேறிய வி.பி.சிங், 'ஜன்மோர்ச்சா' என்ற அமைப்பைத் தொடங்கினார். ஊழலுக்கு எதிராக அந்த இயக்கம் போராடியது. இந்தியாவின் நாடாளுமன்றத்தை நிர்ணயிக்கக்கூடிய எண்ணிக்கை வலிமை உ.பி., பீகார் மாநிலங்களிடம் இருந்ததால், இந்த இரு மாநிலங்களிலும் காங்கிரஸ்கட்சியை தோற்கடித்துக் காட்டுவேன் என்று சபதமேற்ற வி.பி.சிங், அதற்கான தீவிர முயற்சிகளில் இறங்கினார்.
ஜனதா, லோக்தளம், காங்கிரசு (எஸ்) போன்ற கட்சிகளை ஒருங்கிணைத்து, 'ஜனதா தளம்' என்ற கட்சியை உருவாக்கினார். (1988, அக்.11). 1989 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க, மாநிலக் கட்சிகளை உள்ளடக்கிய 'தேசிய முன்னணி' என்ற கூட்டணி அமைப்பை உருவாக்கிய தும் வி.பி.சிங் தான்.
மத்திய அரசில் மாநிலக் கட்சிகளும் அதிகாரப் பங்கு பெறும். கூட்டாட்சிப் பாதைக்கு வழியமைக்கும் முயற்சியாகவே இது அமைந்தது.காங்கிரஸ் எதிர்ப்பு ஒன்றையே முன்னிறுத்தி - முரண்பாடுகள் கொண்ட, இடதுசாரிகள்-பா.ஜ.க.வினரையும் ஒரே அணிக்குள் கொண்டு வந்த சாதனையை வி.பி.சிங் ஒருவரால் தான் செய்ய முடிந்தது. வி.பி.சிங் மீதான நம்பகத் தன்மையும் நேர்மையுமே இதற்கு அடிப்படை என்று உறுதியாகக் கூற முடியும்.
முரண்பாடுகளை நிர்வகித்தல் (Managing the Contradictions) என்று வி.பி.சிங், இதற்குப் பெயர் சூட்டினார்.
ஆனாலும்கூட பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் பிரச்சார மேடையில் வி.பி.சிங் பேச மறுத்தார். தனது இயல்பான நட்பு சக்தி இடதுசாரிகள்தான் என்று கூறிய வி.பி.சிங், பா.ஜ.க.வை அரசியலுக்கான கூட்டணி என்று கூறினார்.1989 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய முன்னணி வெற்றி பெற்று, வி.பி.சிங் பிரதமரானார். பாரதிய ஜனதாவும், இடதுசாரி கட்சிகளும், வெளியிலிருந்து ஆதரவை நல்கினர்.
1977 க்குப் பிறகு, இரண்டாவது முறையாக காங்கிரஸ் தோற்கடிக்கப் பட்டது. வி.பி.சிங் சபதம் ஏற்றதுபோல், உ.பி.யில் 83 தொகுதிகளிலும், பீகாரில் 54 தொகுதிகளிலும் தேசிய முன்னணி வெற்றி வாகை சூடி, 137 இடங்களை இந்த இரண்டு மாநிலத்தில் மட்டும் கைப்பற்றியது. காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்தது. இந்திராவின் மறைவுக்குப் பிறகு நடந்த தேர்தலில் 400க்கும் மேற்பட்ட இடங்களைக் கைப்பற்றிய காங்கிரஸ் வி.பி.சிங் விலகலுக்குப் பிறகு 200 இடங்களைத் தாண்டவே முடியவில்லை. ராஜீவ் மரணத்தைத் தொடர்ந்து நடந்த தேர்தலில்தான் 200க்கும் சற்று கூடுதலாக வெற்றி வெற்றது.
இந்திய அரசியலில் காங்கிரசின் அரசியல் ஆதிக்கத்தைக் கணிசமாக குறைத்தப் பெருமை வி.பி.சிங் அவர்களுக்கு உண்டு. இதை மறுத்துவிட முடியாது. 'ஜன்மோர்ச்சா' தொடங்கிய காலத்தில்கூட வி.பி.சிங்கிற்கு இடஒதுக்கீடு குறித்த தெளிவான பார்வை இருந்ததாகக் கூற முடியாது.பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு என்ற முழக்கம்தான் அப்போது முன் வைக்கப்பட்டது. அவரைச் சூழ்ந்து நின்ற அருண்நேரு போன்ற பார்ப்பன சக்திகளின் கருத்து 'ஜன்மோர்ச்சாவுக்குள்' நுழைக்கப்பட்டது.
தொடர்ந்து இடஒதுக்கீடு கொள்கைகளில் நம்பிக்கையுள்ள அதற்காக தொடர்ந்து நாடாளு மன்றத்தில் குரல் கொடுத்த ராம் அவதேஷ்கிங் போன்ற தலைவர்கள் வி.பி.சிங்கிடம் இடஒதுக்கீட்டு கொள்கைகளையும், அதன் முக்கியத்துவத்தையும் எடுத்துக் கூறியபோது நியாயங்கள் அவருக்குப் புரியத் தொடங்கின. மண்டல் ஆணையின் ஒரு பகுதியாக பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு ஆணையைப் பிறப்பித்த வி.பி.சிங், உடனே ராம் அவதேஷ்சிங் அவர்களைத்தான் நேரில் போய் சந்தித்து நன்றி கூறினார்.
பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27 சதவீத ஒதுக்கீடு செய்யும் முடிவை வி.பி.சிங் தலைமையிலான அமைச்சரவை முடிவெடுத்து, அதற்கான ஆணையைப் பிறப்பித்தவர், அன்று சமூகநலத்துறை அமைச்சராக இருந்த ராம்விலாஸ் பஸ்வான் என்ற தலித் தான்! ஒரு தலித் அமைச்சர் ஆணை வழியாகத்தான் பிற்படுத்தப்பட் டோருக்கு இடஒதுக்கீடு கிடைத்தது. என்பதை பிற்படுத்தப்பட்ட சமுதாயம் மறந்துவிடக் கூடாது.
அதேபோல் அரசியலமைப்பு சட்டத்தில் அம்பேத்கர் உருவாக்கிய பிரிவுகள் தான் பிற்படுத்தப்பட்டோருக்கு வேலை வாய்ப்புகளில் இடஒதுக்கீட்டை உறுதி செய்துள்ளது என்பதையும் பிற்படுத்தப்பட்டவர்கள் மறந்துவிடக் கூடாது. (கைதட்டல்)வி.பி.சிங் பிரதமராகப் பதவி ஏற்று (2.12.1989) 11 மாதங்களில் ஆட்சியை உதறினார் (10.11.1990), 1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9 ஆம் நாள்.
ஒடுக்கப்பட்ட மக்களின் வரலாற்றில் மட்டுமல்ல. இந்திய அரசியலிலும் திருப்புமுனையை ஏற்படுத்திய நாள்.அன்றுதான் பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீத இடஒதுக்கீடு ஆணை பிறப்பிக்கப்பட்டது. பார்ப்பனர்களும், பார்ப்பன ஊடகங்களும் அலறின. எரி மலையாக வெடித்தார்கள்.
ஏதோ பூகம்பமே வந்து விட்டதைப்போல கொதித்தார்கள். வடமாநிலங்களில் மாணவர்களைத் தூண்டி கலவரத்தை நடத்தினர். இதிலே மிகப் பெரும் சோகம் என்னவென்றால், பிற்படுத்தப்பட்ட சமுதாயத்து மாணவர்களே இதை எதிர்த்து வீதிக்கு வந்து, கலவரத்தில் இறங்கியதுதான்.இது, தங்களுக்கான உரிமை என்ற விழிப்புணர்வு, அவர்களிடம் உருவாக்கப்படவில்லை. ஏன்? என்ன காரணம்? அங்கு ஒரு பெரியார் பிறக்கவில்லை; அதுதான் காரணம்.
ஆணை வந்தவுடன் புதுடில்லியில் ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்தில், முக்கிய தலைவர்கள் கூடி வி.பி.சிங் ஆட்சிக்கு பாரதிய ஜனதாவின் ஆதரவை உடனே திரும்பப் பெற வேண்டும் என்று வற்புறுத்தினர். பாரதிய ஜனதா கட்சியின் பொதுச் செயலாளர் மனோகர் ஜோஷியும், அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டார். ஆனாலும், பாரதிய ஜனதா கட்சி உடனே ஆதரவைத் திரும்பப் பெற்று விடவில்லை. பிற்படுத்தப்பட்டோரின் எதிர்ப்புக்கு ஆளாக நேரிடும் என்று தயங்கியது. காரணம், நாடாளுமன்றத்தில் மூன்று அல்லது நான்கு எண்ணிக்கையைத் தாண்டாத பாரதிய ஜனதா வி.பி.சிங் அணியில் இடம் பெற்றதால்தான் 86 உறுப்பினர்களைப் பெற முடிந்தது.
அந்த 86 பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர்களில் 38 பேர் பிற்படுத்தப் பட்டவர். 12 பேர் தாழ்த்தப்பட்டவர். எனவே, இவர்களின் எதிர்ப்புக்குள்ளாக நேரிடுமோ என்ற தயக்கம் பா.ஜ.க.வுக்கு இருந்தது. எதிர்ப்பை வேறு வழியில் காட்ட காரணம் தேடிக் கொண்டிருந்தது. ஆணையை எதிர்த்தது, ஆர்.எஸ்.எஸ். மட்டுமல்ல; காங்கிரஸ்கட்சியைச் சார்ந்த வசந்த் சாத்தே என்ற பார்ப்பன நாடாளுமன்ற உறுப்பினர், ஆணையைத் திரும்பப் பெறக் கூறி நாடாளு மன்றத்தின் முன் உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்தார்.
தனது கட்சியின் கருத்து பற்றிக்கூட அவர் கவலைப்படவில்லை.பார்ப்பன உயர்சாதி அய்.ஏ.எஸ். அதிகாரிகள் ரகசியமாகக் கூடி பேசி, அரசுக்கு எதிராக செயல்படுவதென முடிவெடுத்தனர். முதல் கட்டமாக அய்.ஏ.எஸ். அதிகாரிகளின் மனைவியர்களை திரட்டி, அணியாக்கி, இட ஒதுக்கீட்டுக்கு எதிராக ஊர்வலம் நடத்தினர். எப்போதாவது இந்த பரம்பரையெல்லாம் வீதிக்கு வந்திருப்பார்களா?
பெங்களூரில் பார்ப்பனர் சங்கம் அவசரமாகக் கூடி, "இந்த ஆணை இந்து மதத்தை சாதி அடிப்படையில் பிரித்து விடும். எனவே அமுல்படுத்தக்கூடாது" என்று தீர்மானம் போட்டனர். சாதி அடிப்படையில் பிரிப்பது இந்து மதமா? அல்லது அரசு ஆணையா? ஏதோ இந்து மதத்துக்குள் சாதி நுழைந்ததே ஆகஸ்ட் 7 ஆம் தேதி தான் என்பதுபோல் நாடு முழுதும் பார்ப்பனர்களும், பார்ப்பன ஏடுகளும் ஒரே குரலில் ஓலமிட்டனர்.
இப்போது 27 சதவீத இடஒதுக்கீட்டுக்கு எதிராக டெல்லியிலுள்ள 'அகில இந்திய மருத்துவ விஞ்ஞான நிறுவன' பார்ப்பன மாணவர்கள் எப்படி எதிர்த்தார்களோ, அதுபோல், அப்போது டெல்லிப் பல்கலைக்கழக பார்ப்பன மாணவர்கள்தான் எதிர்ப்புப் போராட்டத்துக்கு தலைமை தாங்கினர். விவரமறியாத பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மாணவர்களையும் ஏதோ தேசத்துக்கே ஆபத்து வந்துவிட்டதாகக் கூறி, போராட்டத்தில் ஈடுபட வைத்து, கலவரத்தைத் தூண்டினார்கள்.
பீகாரில் நடந்த கலவரத்தில் துப்பாக்கிச் சூடு நடந்தபோது, அதில் இறந்த 6 மாணவர்களும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர்கள். எதிர்ப்புக் கலவரத்தில் பீகார், உ.பி., ம.பி., ஒரிசா, இராஜஸ்தான், அரியானா மாநிலங்களில் இறந்த 32 மாணவர்களும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர்கள். அதே ஆண்டு ஆகஸ்ட் 24 ஆம் தேதி நாடாளு மன்றத்தின் முன்பு மாணவர்கள் நடத்திய பேரணி கலவரமாக மாறிய போது, துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவரும், செப்டம்பர் 24 ஆம் தேதி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவரும், முஸ்லிம் மாணவர்கள் தான்.
மாணவர்கள் இடஒதுக்கீட்டை எதிர்த்து தீக்குளிப்பதாக பார்ப்பன ஏடுகள் செய்திகளை வெளியிட்டன. உண்மையில், பல மாணவர்கள் திட்டமிட்டு உயிருடன் எரிக்கப்பட்டு, அவர்கள் தீக்குளித்ததாக நாடகமாடினார்கள். இன்று எப்படி வி.பி.சிங் அவர்களை 'சமூக இழிவைக்' கொண்டு வந்தவர் என்று பார்ப்பன இறுமாப்போடு 'இந்தியா டுடே' எழுதியதோ அதே ஏடு அன்றைக்கும், கலவரங்களை ஊதி விட்டது. அப்படி இடஒதுக் கீட்டுக்கு எதிராக தீவிரமாக பிரச்சாரம் செய்த அதே 'இந்தியா டுடே' தான் - தீக்குளிப்பு என்ற பெயரில் ராஜீவ் கோஸ்வாமி என்ற பிற்படுத்தப்பட்ட மாணவரை பார்ப்பன மாணவர்கள் தீக்குளிப்பது போல் நாடகமாடுமாறு கூறிவிட்டு, பிறகு, உண்மை யிலே தீக்குளிக்க வைத்தனர் என்ற செய்தியை மருத்துவனையில் உயிருக்குப் போராடிய கோஸ்வாமியின் வாக்குமூலத்தின் வழியாக அம்பலப்படுத்தியது (இந்தியா டுடே அக்.6-20, 1990).
இதே போல் பல பள்ளி மாணவர், மாணவிகளும் தீக்குளிக்க செய்யப்பட்டனர். பலர் கொளுத்தப்பட்டனர். புதுடில்லி ஆர்.கே.புரத்தில் வகுப்பை விட்டு தண்ணீர்குடிக்க வெளி வந்த பிரவீணா என்னும் சீக்கிய மாணவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி நெருப்பைப் பற்ற வைத்து கொலை செய்தனர். 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளேட்டில் ஆசிரியராக இருந்த பார்ப்பன அருண்ஷோரி, வி.பி.சிங்குக்கும், இடஒதுக்கீட்டுக்கும் எதிரான 'குருசேத்திரப் போரையே' நடத்தினார்.
ஆகஸ்ட் 15 முதல் செப்டம்பர் 30 வரை ஒன்றரை மாத காலத்தில் 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' ஏட்டில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக அருண்ஷோரி எழுதி குவித்த தலையங்கங்கள், கட்டுரைகளின் எண்ணிக்கை மட்டும் 168. அதே போல் 'டைம்ஸ் ஆப் இந்தியா' அதே காலகட்டத்தில் வெளியிட்டவை 171. 'இந்து' வெளியிட்டவை 151. 'இந்து' சென்னையை தலைமை யிடமாகக் கொண்டு வெளிவந்த காரணத்தால் இது தமிழ்நாட்டு மக்களின் உணர்வுக்கு எதிராகப் போய்விடும் என்பதால், சற்று அடக்கியே எதிர்ப்பை வெளிப்படுத்தியது.
"மண்டல் பரிந்துரை நாட்டையே அழித்துவிடும்; அரசு நிர்வாகத்தை மேலும் சீர்குலைக்க வைத்துவிடும்; இந்த அப்பட்டமான சந்தர்ப்பவாத முடிவு சமூகப் பதட்டத்தைத்தான் உருவாக்கப் போகிறது. இதன் முதன் விளைவு இதுவாகவே இருக்கும்" என்று 'எக்ஸ்பிரஸ்' எழுதியது. "40 ஆண்டுகாலமாக - நவீன - சமத்துவ சமுதாயத்தை உருவாக்க படிப்படியாக எட்டிய சாதனைகள் அனைத்தையும் ஒரே அடியில் வி.பி.சிங் வீழ்த்திவிட்டார்" என்று 'டைம்ஸ் ஆப் இந்தியா' பார்ப்பன நாளேடு எழுதியது.
இவ்வளவையும் நாம் விரிவாக ஏன் சுட்டிக்காட்டுகிறோம் என்றால், எத்தகைய சூழலில் வி.பி.சிங், இப்படி ஒரு சமூகநீதி ஆணையைப் பிறப்பித்தார் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்குத்தான்.பார்ப்பன அதிகார வர்க்கத்தின் ஒட்டு மொத்த எதிர்ப்பு; பார்ப்பன ஏடுகளின் ஒரு சார்பான பிரச்சாரம்; மிரட்டல்கள்; பார்ப்பன மாணவர்களின் வன்முறை; வடமாநிலங்களில் உண்மையையறியாத பிற்படுத்தப்பட்ட மாணவர்களே. பார்ப்பன மாணவர்களோடு சேர்ந்து போராடிய அவலம். பா.ஜ.க., காங்கிரஸ் கட்சியின் கடுமையான எதிர்ப்புகள்.
இவ்வளவு எதிர்ப்புகள் சூழ்ந்திருந்த நிலையிலும் கொள்கைக் குன்றாய் நிமிர்ந்து நின்ற மாமனிதன் தான் வி.பி.சிங். அதற்கு முன் 10 ஆண்டுகாலமாக காங்கிரஸ்ஆட்சியால் முடக்கப் பட்டுக் கிடந்த அறிக்கையை வெளியே கொண்டு வந்து ஆணை பிறப்பித்து, சுழன்றடிக்கும் பார்ப்பன எதிர்ப்புச் சூறாவளிகளுக்கு இடையே எதிர்நீச்சல் போட்ட அந்த மாமனிதரின் இந்த வரலாற்று சாதனையை நாம் நன்றியுடன் எண்ணிப் பார்க்க வேண்டும் என்பதற்காகவே எடுத்துக் காட்டினோம்.
இப்படி ஒரு அரசியல்வாதியை, தந்தை பெரியார் போல் நெஞ்சுரம் கொண்ட ஒரு லட்சியவாதியை நாம் எங்கே தேடினாலும் கிடைப்பார்களா?
மண்டல் பரிந்துரையை எதிர்த்து வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்த்தார், ராஜீவ். அதே காங்கிரஸ் வி.பி.சிங் ஆணையை அமுல்படுத்தியே வருகிறார் என்றார் விடுதலை இராசேந்திரன்.
-1990 செப்டம்பர் 9 ஆம் தேதி 27 சதவீத இட ஒதுக்கீடு வந்தவுடன், ஒரு மாத இடைவெளியில் (1990, செப்.14-16), ம.பி. மாநிலம் போபாலில் கூடிய பாரதிய ஜனதா கட்சியின் செயற்குழு - இராமன் கோயில் கட்டுவதற்கான 'ரதயாத்திரை'யை அத்வானி தலைமையில் நடத்த முடிவு செய்து, அதற்கான ஏற்பாடுகளை செய்யும் பொறுப்பை அசோக் சிங் காலிடம் ஒப்படைக்க முடிவு செய்தார்கள்.
மாணவர் கலவரத்தைத் தூண்டிவிட்டு வி.பி.சிங் தானாகவே பதவி விலகும் நிர்ப்பந்தத்தை உருவாக்க முயன்றவர்கள் அதில் தோல்வி கண்டதால் அடுத்தக் கட்ட மாக ரதயாத்திரையைத் தொடங்க திட்டமிட்டார்கள். யாத்திரையின் உண்மையான நோக்கமே மண்டல் பரிந்துரைக்கான எதிர்ப்புதான். இதை அத்வானியே ஒரு பேட்டியில் ஒப்புக் கொண்டார்."மண்டல் பிரச்சினை எனக்கு நெருக்கடியைக் கொடுத்தது என்பது உண்மைதான். குறிப்பாக என்னுடைய டெல்லி தொகுதியில் தீக்குளிப்புச் சம்பவங்கள் நடந்துள்ளன. பெற்றோர்கள், ஒவ்வொரு நாளும் என்னை சந்தித்து இன்னும் வி.பி.சிங் ஆட்சியை ஏன் ஆதரித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று என்னை கேட்கிறார்கள்.
மண்டல் பிரச்னையைக் காரணம் காட்டி, இந்த ஆட்சிக்கு தரும் ஆதரவை நாங்கள் திரும்பப் பெற்றால், அது இந்த ஆட்சிக்கு பெரும் லாபமாகிவிடும் என்று நான் கருதுகிறேன். எனவே நான் அவர்களிடம் சொன் னேன், "ஆமாம்; இந்த அரசாங்கம் மோசமாக நடந்து கொண்டு வருவது உண்மைதான். இதை வீழ்த்துவதற்கான நடவடிக்கைகள் என்ன என்பதை முடிவு செய்து, உரிய நேரத்தில் எடுப்பேன்" என்று கூறினார் அத்வானி (இந்துஸ்தான் டைம்ஸ் 21 செப். 1990).
ரதயாத்திரை தொடங்கும் முடிவை எடுத்த அடுத்த 5 நாட்களில் அத்வானி அளித்த பேட்டி இது! ஆக, அத்வானி 'ராமனை' முன் வைத்து, ரத யாத்திரையைத் தொடங்கியதே வி.பி.சிங் ஆட்சிக்கு சட்டம் ஒழுங்குப் பிரச்னையை உருவாக்கி, நெருக்கடிக்குள்ளாக்க வேண்டும் என்பதுதான். நேரடியாக 27 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்த்தால் பாரதிய ஜனதாவுக்குள் உள்ள வடமாநில அப்பாவி பிற்படுத்தப்பட்டோரின் எதிர்ப்புக்குள்ளாகிட நேரிடுமே என்பதால், தாழ்த்தப்பட்டோர், பிற்படுத் தப்பட்டோர் உரிமைக்கான அடையாளங்களை ஒழிக்க 'இந்து' என்ற கவசத்தைப் போர்த்திடும் முயற்சிகளில் பார்ப்பனியம் இறங்கியது.
திட்டமிட்டபடி பா.ஜ.க. வி.பி.சிங் ஆட்சிக்கு அளித்த ஆதரவைத் திரும்பப் பெற்றது. உண்மையில் 1991 ஆம் ஆண்டு ஜனவரியில் தான் அந்த ரத யாத்திரைக்கான திட்டத்தை பா.ஜ.க. தீட்டியிருந்தது. ஆனால், மண்டல் பரிந்துரைஅமுலான காரணத் தால், ஆட்சியை விட்டு வைக்கக் கூடாது என்ற காரணத்தால் உடனே பயணத்தைத் தொடங் கினார்கள். (தொடங்கிய தேதி 7.8.90)பாரதிய ஜனதா ஆதரவைத் திரும்பப் பெற்றவுடன், நாடாளுமன்றத்தில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தைக் கொண்டுவரத்தயாரானர் வி.பி.சிங். பதவி பறிபோகும் என்பது அவருக்கு உறுதியாகத் தெரியும். அதற்காக நரசிம்மராவ் செய்ததுபோல் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விலை பேச வில்லை.
நாடாளுமன்றத்தை சந்திக்கத் தயாரானார்; நம்பிக்கை ஓட்டுகோரும் ஒற்றைவரி தீர்மானத்தை முன்மொழிந்து பேசினார். சமூக நீதிக்கு கதவு திறந்த சரித்திர நாயகர்கள் - பெரியார், அம்பேத்கர் பெயர்களை நன்றியுடன் நினைவு கூர்ந்து, வி.பி.சிங் தனது உரையைத் தொடங்கினார்.இந்த அவையில் - மண்டல் ஆதரவு அணி ஒன்றும், மண்டல் எதிர்ப்பு அணி ஒன்றும் இருக்கிறது. இந்த வாக்கெடுப்பின் வழியாக யார் எந்த அணியில் நிற்கிறார்கள் என்பதை நாட்டு மக்கள் உணர்ந்து கொள்ளட்டும் என்றார்.
வி.பி.சிங் மண்டல் ஆணை அறிவிப்பு வெளி வந்தவுடனேயே வசந்த் சாத்தே என்ற மராட்டிய பார்ப்பன காங்கிரஸ் உறுப்பினர், நாடாளுமன்ற வாயிலிலேயே உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்தார். அப்போது காங்கிரஸ் கட்சி, இதில் தனது நிலையைத் தெரிவிக்கவில்லை. ஆனால், நாடாளுமன்றத்தில் நம்பிக்கைத் தீர்மானத்தின் மீது பேசிய ராஜீவ் காந்தி, மண்டல் பரிந்துரையை முழுமையாக எதிர்த்து 3 மணி நேரம் - 10 முறை தண்ணீர் குடித்துக் கொண்டே பேசினார்.
இடஒதுக்கிடு பொருளாதார அடிப்படையில் தான் இருக்க வேண்டும் என்று பார்ப்பன குரலையே ராஜீவ் எதிரொலித்தார். நாட்டை சாதியால் கூறு போடுகிறது மண்டல் அறிக்கை என்றார். அத்வானியும் அதே குரலையே ஒலித்தார். இந்தப் பிரச்சினையில் ராஜீவ் குரலும், அத்வானி குரலும் ஒன்றாகவே ஒலித்தன என்பதை மறந்துவிடக் கூடாது. அ.இ.அ.தி.மு.க.வும், மண்டல் எதிர்ப்பு அணியில் நின்று வி.பி.சிங் ஆட்சிக்கு எதிராகவே வாக்களித்த துரோகத்தை செய்தது.
கான்ஷிராமின் பகுஜன் சமாஜ் கட்சியும், வி.பி.சிங் ஆட்சியை ஆதரித்து வாக்களிக்கவில்லை. நடுநிலை என்று கூறி ஆட்சிக் கவிழ்ப்புக்கே துணை நின்றது. காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெற்றிருந்த தமிழ்நாட்டின் முஸ்லீம் லீக் கட்சியைச் சேர்ந்த மறைந்த அப்துல் சமது ஒருவர் மட்டும் தான் அணி மாறி, வி.பி.சிங் ஆட்சிக்கு ஆதரவாக வாக்காளித்தார் என்பதை சுட்டிக் காட்ட வேண்டும்.
பொருளாதார அடிப் படையை வலியுறுத்திய ராஜிவ் காந்தியிடம் வி.பி.சிங் கேட்டார், உங்கள் கட்சி ஆளும் ஆந்திராவிலும், கருநாடகத்திலும் சாதி அடிப்படையில்தானே இடஒதுக்கீடு இருக்கிறது என்று. அவர் கேட்ட கேள்விக்கு ராஜீவ் மவுனமானார்.உண்மையில் காங்கிரஸ் கட்சியிலே இருந்த பல பிற்படுத்தப்பட்ட, நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த ஆணையை வரவேற்றாலும், அந்த உணர்வுகளை ராஜீவ் மதிக்க தயாராக இல்லை. அதே ராஜீவ் காந்தி சென்னையில் எம்.ஜி.ஆர். சிலை திறப்புக்கு வந்த போது, மண்டல் பரிந்துரையை கல்விக்கும் அமுல்படுத்த வேண்டும் என்று குரலை மாற்றிப் பேசி தமிழ்நாட்டை ஏமாற்ற இரட்டை வேடம் போட்டார்.
அத்வானி ரதயாத்திரை - பீகாருக்குள் நுழைந்த போது, மாநில முதல்வர் லல்லுபிரசாத், யாத்திரையை அனுமதித்தால் கலவரம் வரும் என்று பிரதமர் வி.பி.சிங்கிடம் கேட்டபோது, 'உங்கள் முடிவில் நீங்கள் தொடர்ந்து செல்லுங்கள்' என்று பச்சைக் கொடி காட்டினார். வி.பி.சிங் ஆட்சிக்கு ஆதரவு திரும்பப் பெறப்படுமே என்பது பற்றி அவர் கவலைப் படவே இல்லை. இன்று ஆட்சிக்கு ஆதரவைத் தக்க வைத்துக் கொள்வதற்காக கொள்கைகள் பலிகடா வாக்கப்படுவதை பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம்?
வி.பி.சிங் ஆட்சிக்கு ஆதரவை விலக்கிக் கொள்ளும் அறிவிப்பை பா.ஜ.க. அறிவித்தவுடன், வி.பி.சிங் தொலைக்காட்சியில் பேசினார்: "இந்த நட்டநடு இரவில், நமக்கு மேலே உள்ள நம்மைப் படைத்தவனுக்கு வீடு கட்டப் போகிறார்கள். அவருக்கு வீடு கட்டவில்லையென்றால், வீடு இல்லாமல் தவித்துப் போய்விடுவார்" என்றுகேலியாக சுட்டிக் காட்டினார். வி.பி.சிங் பிரதமராக இருந்த காலத்தில் தமிழ்நாட்டில் கலைஞர் முதலமைச்சர். கலைஞர் ஆட்சி விடுதலைப்புலிகளுடன் ரகசியமாக தொடர்பு கொண்டுள்ளது என்று மத்திய உளவுத் துறை இரண்டு அறிக்கைகளை தயார் செய்து, அதை பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பியது. ஆனால் பிரதமர் வி.பி.சிங் பார்வைக்கு வராமல், பார்ப்பன அதிகார வர்க்கம் மறைத்து விட்டது.
அமைச்சரவை செயலாளருக்கும், பிரதமர் அலுவலகத்துக்கும் வந்த அந்த இரு அறிக்கைகளும், வி.பி.சிங் பார்வைக்கு வராமல் மறைக்கப்பட்டன. காரணம், உள் நோக்கத் துடன் தயாரித்த இந்த அறிக்கையை வி.பி.சிங் குப்பையில் போட்டு விடுவார் என்பது அவர் களுக்குத் தெரியும். அப்படி அறிக்கை தயாரித்தவர் கூட அப்போது உளவுத்துறை இயக்குனராக இருந்த இதே எம்.கே.நாராயணன் தான்.
இத்தனைக்கும் அப்போது விடுதலைப்புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்ட அமைப்புகூட அல்ல.வி.பி.சிங் ஆட்சி கவிழ்க்கப்பட்ட பிறகு, ராஜீவின் பினாமியாக சந்திரசேகர் பிரதமர் பதவியில் அமர்த்தப்பட்டார். அப்போது சுப்ரமணியசாமி, சட்டத் துறை அமைச்சர். ஏற்கனவே தயாரிக்கப்பட்ட உளவுத் துறை அறிக்கை அப்போது தோண்டி எடுக்கப்பட்டு, சுப்ரமணியசாமி துறைக்குப் போகிறது. உடனே தி.மு.க. ஆட்சி, ராஜீவ் ஆலோசனைப்படி பிரதமர் சந்திரசேகரால் கலைக்கப்படுகிறது.
தி.மு.க.வின் மூத்த அமைச்சர் நாஞ்சில் மனோகரன், சந்திரசேகரை நேரில் சந்தித்து எவ்வளவோ எடுத்துக் கூறியும் காதில் போட்டக் கொள்ள தயாராக இல்லை. ராஜீவ் கொலை பற்றி விசாரிக்க நியமிக்கப்பட்ட ஜெயின் ஆணையத்தின் முன், வி.பி.சிங் அளித்த சாட்சியம். ஜெயின் அறிக்கையில் பதிவாகியுள்ளது.
அதில் தி.மு.க. ஆட்சியையும், விடுதலைப் புலிகளையும் தொடர்பு படுத்தி உளவுத்துறை தயாரித்த அறிக்கை, தனது பார்வைக்கே கொண்டுவரப்படாததை வி.பி.சிங் குறிப்பிட்டுள்ளார். மேலும் தீவிரவாதம் பற்றி ஜெயின் ஆணையத்தின் முன் அவர் அளித்த சாட்சியம் இதுதான்."விடுதலைப் புலிகளால் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது என்று கூறுவது பற்றி எனது கருத்து இதுதான். ஜம்மு காஷ்மீரிலும், பஞ்சாபிலும், அசாமிலும் கூட தீவிரவாதிகள் நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றன. அங்கே 100 சதவீத திருப்தியான நிலை வந்துவிடவில்லை.
தமிழ்நாட்டைப் போலவே இதுவும் மத்திய அரசின் கவலைக்குரிய பிரச்சினை தான். தமிழக அரசியல் தலைவர்களோடு நான் தொடர்பு கொண்டிருந்தேன். அவர்கள் - தமிழ் நாட்டில், ஈழப் போராளிகளின் ராணுவ நட வடிக்கைகள் எதுவும் இல்லை என்று கூறினார்கள். அதே நேரத்தில், தீவிரவாதத்தைத் தடுக்கும் நட வடிக்கைகள் தமிழ்நாடு உட்பட, இந்தியாவின் வேறு பகுதிகளிலும் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்பதே எனது கருத்து." - என்றார் வி.பி.சிங்.
விடுதலைப்புலிகளை மட்டும் தனிமைப்படுத்தி, அவர்களை முற்றாக ஒழித்துவிடவேண்டும். அதை வைத்து தி.மு.க. ஆட்சியைக் கலைத்துவிடவேண்டும் என்று திட்டமிட்டு செயல்பட்ட ஆளும் பார்ப்பன வர்க்கப் பார்வையிலிருந்து வி.பி.சிங் பார்வை வேறு பட்டே இருந்தது என்பதற்காக இதை சுட்டிக் காட்டுகிறோம்.பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டால் தகுதி திறமை போய்விடும் என்று பார்ப்பனர்கள் கூக்குரலிட்டபோது வி.பி.சிங் கேட்டார், "தென்னகம் முழுதும் நீண்டகாலமாக இடஒதுக்கீடு அமல் படுத்தப்பட்டுத்தான் வருகிறது. அங்கே நிர்வாகம் கெட்டு போய்விட்டதா?" என்று கேட்டார்.
காலம் காலமாக நிர்வாக அமைப்பிலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்ட மக்களை நிர்வாக அமைப்புக்குள் கொண்டு வருகிறேன் என்று கூறிய வி.பி.சிங், இதுதான் உண்மையான ஜனநாயகம் என்றார். இப்படி அதிகாரத்தைப் பரவலாக்குவதால்தான் ஆதிக்கவாதிகள் அலறுகிறார்கள் என்று கூறிய அவர், அதற்கு உதாரணமாக ஒரு கதையை கூறினார்.
அண்ணன் தம்பிக்குள் பாகப் பிரிவினை நடந்தது. கடைசியில் இருந்த மாடு ஒன்றையும் பிரித்துவிட வேண்டும் என்றார்கள். மாட்டின் வாய்ப் பகுதி தம்பிக்கும் வால் பகுதி அண்ணனுக்கும் பிரிக்கப் பட்டது. வாய்ப்பகுதி கிடைத்த தம்பி, அன்றாடம் மாட்டுக்கு தீனி போட வேண்டும். வால் பகுதி கிடைத்த அண்ணனோ, பாலைமட்டும் கறந்து கொண்டிருந்தார். தம்பிக்கு ஆத்திரம் வந்தது. ஒரு நாள் தம்முடைய தலைப் பகுதியிலிருந்த மாட்டின் கொம்பை பிடித்து ஆட்டவே, மாடு, வால் பகுதி யிலிருந்த அண்ணனை எட்டி உதைக்க, பால் கீழே கொட்டியது.
ஒவ்வொரு நாளும் இது தொடரவே அண்ணனுக்கு ஆத்திரம் வந்துவிட்டது. நான் தீனி போட வேண்டும்; நீ மட்டும் பால் கறக்க வேண்டுமா; இது நீதியா என்று தம்பி கேட்டார். அதே நீதியைத் தான், நாமும் கோருகிறோம் (பலத்த கைதட்டல்) என்றார் வி.பி.சிங்.காலம்காலமாக பயனை மட்டும் அனுபவித்துக் கொண் டிருந்தவர்களிடம் உள்ள அதிகாரத்தை நான் பாதிக்கப்பட்டவர்களுக்கு பகிர்ந்து கொடுக்க முன் வந்ததால் அவர்களுக்கு என் மீது ஆத்திரம் வருகிறது என்றார் வி.பி.சிங்.
கொள்கைக்காக பதவியை தூக்கி எறிந்த வி.பி. சிங்கை முதல்வராக இருந்த கலைஞர் தமிழகத்துக்கு அழைத்தார். தமிழகம் முழுதும் நான்கு நாட்கள் சூறாவளியாக கலைஞருடன் சுற்றுப் பயணம் செய்தார் வி.பி.சிங். அந்தப் பயணத்தில் பத்திரிகை யாளர் என்ற முறையில் நானும் உடன் சென்றேன். சென்ற இடமெல்லாம் வி.பி.சிங்குக்கு உற்சாக வரவேற்பு காத்திருந்தது. மக்கள் கூட்டம் அலைமோதியது. இது பெரியாரின் மண். இது சமூக நீதியின் தலைநகரம் என்று தான் ஒவ்வொரு கூட்டத்திலும் வி.பி.சிங் குறிப்பிட்டார்.
வி.பி.சிங் பிரதமராக இருந்த காலத்தில் தான் காவிரி நடுவர் மன்றத்தை அமைத்தார். கருநாடகம் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. வி.பி.சிங் கட்சியைச் சார்ந்த ராமகிருஷ்ண ஹெக்டே, எஸ்.ஆர். பொம்மை, தேவ கவுடா போன்றவர்கள் எல்லாம் ஜனதா தளத்தில் முக்கிய தூண்கள். இத்தனைக்கும் கருநாடகத்தில் ஜனதாதளம் ஆட்சியைப் பிடிக்கும் வலிமையோடு இருந்தது. ஆட்சியும் நடத்தியது. ஆனால் தமிழகத்தில் ஜனதாதளத்துக்கு எந்த ஆதரவும் இல்லை. ஒரு சட்ட மன்ற உறுப்பினர்கூட அக்கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற முடியாது.
இந்த நிலையிலும் தனது சொந்தக் கட்சியினர் கருநாடகத்தில் எதிர்ப்பு தெரிவித்தும், அதைப் புறக் கணித்து தமிழகத்தின் பக்கம் நின்று, காவிரி நடுவர் மன்றத்தை அமைத்தவர் தான் வி.பி.சிங். (பலத்த கைதட்டல்)இப்படி, ஒரு தலைவரை அரசியலில் பார்க்க முடியுமா?அண்ணல் அம்பேத்கருக்கு 'பாரத ரத்னா' விருது வழங்கப்பட்டது, வி.பி. சிங் பிரதமராக இருந்தபோதுதான். அம்பேத்கர் நூற்றாண்டையொட்டி அவரது எழுத்து பேச்சுகளை இந்தியில் வெளியிட்டதும் வி.பி.சிங் ஆட்சியின் போதுதான்.
நாடாளுமன்ற வளாகத் திலே அம்பேத்கர் படமும், அப்போது தான் திறக்கப்பட்டது. அப்போது வி.பி.சிங் பேசினார். 'கடவுள் சிலையை வடிக்கும் சிற்பி கோயில் கர்ப்பகிரகத் துக்குள் நுழைய முடியாததைப் போல், அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய டாக்டர் அம்பேத்கர் படம் நாடாளுமன்றத்தில் நுழைய முடியாமலே இருந்தது. நாடாளுமன்ற வளாகத்தில் இடமிருந்தது. ஆனால் ஆட்சியல் இருந்தவர்கள் இதயத்தில் தான் இடமில்லாமல் போய்விட்டது' என்றார்.
நிர்வாக கட்டமைப்பை பரவலாக்கிட மாநிலங்களுக்கிடை யிலான கவுன்சிலை உருவாக்கியது வி.பி.சிங் தான். இன்றைக்கு மக்களுக்குக் கிடைத் துள்ள மகத்தான ஆயுதமாகிய தகவல் உரிமை பெறும் சட்டத்துக்கு காரண மாக இருந்தவரும் வி.பி.சிங் தான். அவர் தான், இந்தக் கருத்தை தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். தனது ஒவ்வொரு பிறந்த நாளையும் டெல்லியில் வாழும் குடிசைப்பகுதி மக்களுடன்தான் கொண் டாடினார். நபிகள் நாயகம் பிறந்த நாளை மத்திய அரசின் விடுமுறை நாளா கவும் அவர்தான் அறிவித்தார். அவர் மிகச் சிறந்த ஓவியர். மிகச் சிறந்த கலைஞர்.
ஒன்றிரண்டு கவிதைகளை சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.
'கடவுள்' பற்றி வி.பி.சிங் எழுதிய கவிதை இது:
கடவுள்
எங்கும் இருக்கிறார்
அதனால் தான்
என் கை
பிடிக்குள்
அடக்கிவைத்துள்ளேன்
நீயும்அவ்வாறு
செய்து கொள்
இந்த இரண்டு
கைக்குள்இருக்கும்
கடவுள்களில்
பெரியவர் யார்?
அது அவரவர்
கை வலிமையைப்பொறுத்தது.
- என்ன அற்புதமான பகுத்தறிவு சிந்தனை.
சோதிடர் என்ற தலைப்பில் அவர் எழுதிய கவிதை இது.
ஜோதிடர்
எனதுவருங்காலம்
பற்றி வகைவகையாய்
சொல்லிவைத்தார்
நான்கேட்டேன்
அவ்வளவுதூரம்
வேண்டாம்.
இன்று இரவு -ஆம்
இன்றுஇரவு
எனக்குஎன்ன
கனவுவரும்?
ஜோதிடர்
மவுனமாகிப் போனார்.
விண்மீன்கள்
ஆதிக்கத்தால்
கண்ணுறக்கம்
இல்லாமல்...நான்
மட்டும்இருக்கிறேன்...
என்கனவுகள்இல்லை...
எனவேதான்
ஜோதிடர்
மவுனமாகிப் போனார்.
சோதிடம் பொய் என்பதை இவ் வளவு அழகாக படம்பிடித்தார். அவர் பகுத்தறிவாளர் என்பதை இதன் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார். உண்மையான மானுடப் பற்றுக் கொண்ட எவரும் இயல்பாகவே பகுத்தறிவாளர் களாகத் தானே இருக்க முடியும்?
இந்திய அரசியலை மண்டல் மய மாக்கி பார்ப்பன ஆதிக்கத்தை அரசிய லில் வீழ்த்தியவர் வி.பி.சிங் தான். எந்த ஆணைக்காக வி.பி.சிங் ஆட்சியை வீழ்த்தினார்களோ, அவர் களாலேகூட வி.பி.சிங் ஆணையை வீழ்த்த முடியவில்லை. அந்த ஆணை யில் கை வைத்துவிட்டு - எவரும் ஆட்சி அதிகாரத்தில் அமர முடியாது. அந்த சமூக நீதிகளை நிலைத்திருக்கும் வரை வி.பி.சிங் வரலாற்றில் நிலைத்திருப்பார்.
வி.பி.சிங்: சில குறிப்புகள்!மக்களின் அடிப்படை பிரச்சனைகளுக்காக வீதியில் போராடிய இந்திய முன்னாள் தலைமை அமைச்சர் திரு.வி.பி.சிங் அவர்களது மறைவு வருத்தமானது. மிகவும் கண்ணியமும், கடமையுணர்வும் மிக்க தலைவர் அவர்.
விஸ்வநநாத் பிரதாப் சிங் என்ற இயற்பெயருடன் ஜூன் 25, 1931ல் அலகபாத்தில் மன்னர் குடும்பத்தில் பிறந்த இவர் வழக்கறிஞர். அரசியல் தலைவர். ஓவியர். கவிஞர். மனித உரிமை போராளி. 1969ல் உ.பி மாநிலத்தில் சட்டசபை உறுப்பினராக முதல் முறையாக தேர்வானார். ஐந்தாவது நாடாளுமன்றத்திற்காக 1971ல் முதல் முறை நாடாளுமன்றத்திற்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
வர்த்தகத்துறை அமைச்சர். உ.பி.மாநில முதலமைச்சர். இந்திய நிதியமைச்சர் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் ஆகிய பல பொறுப்புகளில் செயல்பட்டுள்ளார்.
1984 தேர்தலில் ராஜீவ் வெற்றியின் பின்னர் நிதியமைச்சரானார். அப்போது திருபாய் அம்பானி மற்றும் அமிதாப் பச்சனின் வரி மோசடிக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுத்தார். அதனால் ராஜீவி அவரை நிதியமைச்சர் பதவியிலிருந்து விலக்கினார்.
அவரது செல்வாக்கு காரணமாக பாதுகாப்பு துறை அமைச்சராக்கப்பட்டார். ராஜீவ் காந்தியின் ஆட்சியில் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த வி.பி.சிங் போபர்ஸ் பீரங்கி பேர ஊழலை எதிர்த்து காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறினார்.
தொடர்ந்து நடந்த தேர்தலில் அவரது ஜனதா தளம் கட்சி போட்டியிட்ட தேசிய முன்னணி வெற்றிபெற்றது. டிசம்பர் 2, 1989 முதல் 10 நவம்பர் 1990 வரையில் இந்தியாவின் தலைமை அமைச்சராக இருந்தார். ராஜீவ் காந்தியின் தவறான அணுகுமுறையும், இலங்கை கொள்கையும் காரணமாக சுமார் 2000 கோடி ரூபாய்களை செலவிட்டு இந்திய இராணுவம் ஈழத்தமிழர்கள் சுமார் 10,000 பேரை கொன்றுகுவித்தது.
பலநூறு தமிழ்ப்பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தது. தமிழர்களது உடமைகளை கொள்ளையிட்டன. அமைதிப்படை என்ற பெயரில் ஆட்கொல்லி படைகளாக மாறியது இந்திய படைகள். திரும்பிச்செல்ல பிரேமதாசா கடும் அழுத்தம் கொடுக்கவும் இந்திய படைகளை வி.பி.சிங் ஆட்சியில் திருப்பி அழைத்தார்.
அவரது ஆட்சியில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வேலைவாய்ப்பில் இடப்பங்கீட்டை வழங்க மண்டல் விசாரணைக் குழு அறிக்கையை அமல்படுத்தி அதுவரையில் எல்லா அரசுகளும் புறக்கணித்த மக்களுக்கு சமூகநீதியை வழங்கினார்.
மண்டல் விசாரணை அறிக்கை அமலாக்கத்திற்கு எதிராக பாரதீய ஜனதா கட்சி பாபர் மசூதியை இடிக்க மதவெறி பிரச்சாரத்தை அத்வானி தலைமையில் ரதயாத்திரை துவங்கியது. அத்வானியை கைது செய்ய வி.பி.சிங் நடவடிக்கை எடுத்தார். அதனால் பாரதீய ஜனதா கட்சி அவரது அரசுக்கு வழங்கிய ஆதரவை விலக்கியது.
மதவெறி அரசியலுக்கு எப்போதுமே எதிராக இருந்த அவர் பாபர் மசூதி இடிப்பு விவகாரத்தில் மிக உறுதியாக செயல்பட்டு மசூதியை பாதுகாத்தார். மதச்சார்பின்மையை காப்பாற்ற போராடிய அவரது அரசை கவிழ்க்க நடந்த அனைத்து அரசியல் குழப்பங்களிலும், சதிகளிலும் பாரதீய ஜனதா கட்சியும், காங்கிரசும் இறங்கின. ஆனாலும் சமரசமில்லாமல் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தினார் வி.பி.சிங்.
142-346 என்ற வாக்குகளில் நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியுற்று அவரது ஆட்சி முடிவுக்கு வந்தது. ஆனாலும், மதச்சார்பின்மை மற்றும் இடப்பங்கீடு அமலாக்கம் வழியாக சமூக நீதிக்கும், நாட்டின் எதிர்காலத்திற்கும் அவர் ஆற்றிய பணியின் பலன்கள் பல கோடி மக்களுக்கு மிக்க பலனுள்ளவை.
காஸ்மீர் பிரச்சனி அவரது ஆட்சியின் போதும் வலுவாக இருந்தது. பொற்கோயிலில் இந்திரா காந்தி எடுத்த ராணுவ நடவடிக்கைக்கு நேரடியாக மன்னிப்பு கேட்டார் வி.பி.சிங். பஞ்சாபில் அமைதியை உருவாக்க அவரது ஆட்சி பெரும் பங்காற்றியது.
ஆட்சிக் கவிழ்ப்பைத் தொடர்ந்து, இந்திய அரசியலில் குழப்பம் நிறைந்த சிறுபான்மை ஆட்சியை திரு.சந்திரசேகர் அவர்களை தலைமை அமைச்சராக்கி ராஜீவ் தலைமையிலான காங்கிரஸ் துவக்கி வைத்தது. மோசமான பொருளாதார கொள்கையும், அரசியல் பித்தலாட்டங்களும் நிறைந்த இந்த ஆட்சியின் முடிவில் தேர்தல் வந்தது.
காங்கிரஸ், பாரதீய ஜனதா கட்சி அல்லாத முற்போக்கு கட்சிகளுக்கு வெற்றிவாய்ப்புகள் அதிகமாக இருந்த நிலையில் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டார். மரண இரக்கத்தில் காங்கிரஸ் கூட்டணி தேர்தலில் வென்றது. அந்த தேர்தலில் பல தலைவர்கள் தோல்வியுற்றனர் ஆனாலும் வி.பி.சிங் வென்று நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றினார். அதன் பின்னர் தேர்தல் அரசியலில் ஒதுங்கியிருந்தார்.
ஆனாலும் 1996ல் நாடாளுமன்ற தேர்தல் வெற்றியின் பின்னர் அவரை தலைமை அமைச்சராக்கும் முயற்சி நடந்தன. அவற்றை ஏற்க மறுத்து ஆட்சிக்கான ஆலோசனைகளை வழங்கினார். சிறுநீரக கோழாறு, இரத்தப்புற்று நோய் காரணமாக அவர்து உடல்நலன் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது. அந்த சூழ்நிலையிலும் புதுடில்லியில் மக்கள் குடியிருப்புகள் அகற்றம், உணவு வினியோக அட்டைகள், பன்னாட்டு நிறுவனங்கள் மக்களது நிலங்களை அபகரிப்பது உள்ளிட்ட பல பிரச்சனைகளில் மக்களோடு நின்று வீதியில் போராடினார்.
குறிப்பாக அனில் அம்பானியின் நிறுவனம் நிலம் கைப்பற்றுவதற்கு போதிய நிவாரணம் கேட்டு கிளர்ச்சி செய்த விவசாயிகளோடு போராடியதால் உத்தரப்பிரதேசத்தில் 2007ல் காசியாபாத்தில் அரசு கைது செய்தது.
மன்னர் குடும்பத்தில் பிறந்தும் இந்திய மக்களின் மாபெரும் தலைவரான வி.பி.சிங் இன்று மறைந்தார். அவரது இழப்பு குடும்பத்திற்கும், நண்பர்களுக்கும் மட்டுமல்ல. நாட்டிற்கும் மக்களுக்கும் மிகப்பெரிய இழப்பு!
காலத்தை வென்று நிற்கும் மாமனிதர்
பார்ப்பன ஊடகங்களால் முழுமையாக வெறுக்கப்பட்ட ஒரு தலைவர் என்பது தான், வி.பி.சிங் உண்மையான தொண்டுக்கு கிடைத்த மகுடம். பார்ப்பன ஆதிக்கக் கொடுமை களுக்கு எதிராக - பார்ப்பன ஊடகங்களின் வெறுப்புகளை சுமந்து அவதூறுகளை புறந்தள்ளி பொது வாழ்க்கையில் பயணப்பட்ட ஒரே புரட்சித் தலைவர் பெரியார்;
அதேபோல் இந்திய அரசியலின் பார்ப்பன அதிகார மய்யத்துக்கு எதிராக வரலாற்றுப் போக்கைத் திரும்பி அதிகார மய்யத்தை தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சிறுபான்மையினரை நோக்கித் திருப்பிய ஒரே தலைவர் விசுவநாத் பிரதாப் சிங் தான்! கொள்கைகளுக்கும், லட்சியங்களுக்கும் தான் அதிகாரம்; பதவி என்பதை - இந்திய அரசியலில் செயல்படுத்தி பதவிகளைத் துச்சமென தூக்கி எறிந்த வரலாற்றுப் பெருமை இந்த மாமனிதருக்கு மட்டுமே உண்டு.
பா.ஜ.க.வும், இடதுசாரிகளும் வெளியிலிருந்து தந்த ஆதரவோடு, அவர் பிரதமர் பதவியில் நீடித்தாலும், ‘அயோத்தி ராமனுக்காக’ அத்வானி நடத்திய ‘ரத யாத்திரையை’ அவர் அனுமதிக்க தயாராக இல்லை. அதே நேரத்தில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இடஒதுக்கீட்டை மத்திய அரசுப் பணிகளில் உறுதி செய்யும் மண்டல் பரிந்துரையை ஏற்கும் ஆணையையும் பிறப்பித்தார் (7.8.1990).
பா.ஜ.க.வின் ஆதரவோடு ஆட்சியைத் தக்க வைப்பதைவிட, அதிகாரத்தை சமூக நீதிக்காக இழக்கலாம் என்ற உறுதியான கொள்கை முடிவை எடுத்தார்.ஆட்சிக்கான ஆதரவை எதிர்பார்த்ததுபோல் பா.ஜ.க. விலக்கியது. நாடாளுமன்றத் திலே நம்பிக்கைத் தீர்மானத்தைக் கொண்டு வந்து பிற்படுத்தப்பட்டோருக்கு சமூக நீதி வழங்கிய தமது அரசின் முடிவை முன்வைத்து நியாயம் கேட்டார். வி.பி.சிங் அப்போது, சமூகநீதிக்கு எதிராக, அணி திரண்ட சக்திகள் எவை என்பதை நாட்டு மக்களுக்கு நினைவுபடுத்த வேண்டும்.
மண்டல் பரிந்துரையை கடுமையாக எதிர்த்து, காங்கிரஸ் தலைவர் ராஜீவ் காந்தி 10 மணி நேரம் தண்ணீர் குடித்துக் கொண்டே பேசினார். இந்த சமூகநீதி எதிர்ப்பு அணியில் காங்கிரஸ்-பா.ஜ.க.வோடு கைகோர்த்து, வி.பி.சிங் ஆட்சிக்கு எதிராக வாக்களித்தது ஜெயலலிதாவின் அ.இ.அ.தி.மு.க. (இவருக்குத்தான் - பிறகு, கி.வீரமணியின், திராவிடர் கழகம் ‘சமூகநீதி காத்த வீராங்கனை’ பட்டத்தை வழங்கி மகிழ்ந்தது)ராஜீவ்காந்தியும், ஜெயலலிதாவும் இப்போதும் அவர்கள் கட்சியின் தலைவர்கள் தான். ஆனால், கொள்கைக்காக பதவியை த் தூக்கி எறிந்த வி.பி.சிங், மக்கள் தலைவராக, வரலாற்றில் இடம் பிடித்துவிட்டார்.
அவர் பிறப்பித்த இடஒதுக்கீடு ஆணையை ரத்து செய்யும் துணிவு, அதற்குப் பின் ஆட்சி சிம்மாசனத்துக்கு வந்த பா.ஜ.க.வினருக்கோ, காங்கிரசுக்கோ கூட வரவில்லை.உ.பி.யின் முதல்வராக வி.பி.சிங் பதவி ஏற்றபோது, சம்பல் கொள்ளைக்காரர்களை மனித நேயத்துடன் அணுகி சரணடைய வைத்தார். அதிலும் ஒரு பிரிவினர் சரணடைய மறுத்து, வி.பி.சிங்கின் சொந்த சகோதரரையே படுகொலை செய்து, முதலமைச்சர் இல்லத்தின் முன்பே வீசினார்கள். சொந்த சகோதரனையே கொள்ளையர்களிடமிருந்து காப்பாற்ற முடியாத நான், உ.பி. மக்களை எப்படி காப்பாற்ற முடியும்? என்று தனக்குத் தானே நீதிக் கேட்டு முதல்வர் பதவியை தூக்கி எறிந்தார்.
இந்திரா மறைவுக்குப் பிறகு, ராஜீவ் அமைச்சரவையில் அவர்தான் நிதியமைச்சர். பெரும் தொழிலதிபர்கள் பணத் திமிங்கிலங்களின் வரி ஏய்ப்புகளைக் கண்டறிந்து துணிந்து நடவடிக்கைகளை எடுத்தார். தொழிலதிபர்களின் செல்வாக்குக்கு பணிந்த ராஜிவ், துறையை மாற்றி வி.பி.சிங்கை பாதுகாப்புத் துறை அமைச்சராக்கினார்.
அப்போதுதான் ‘போபோர்ஸ் பீரங்கி’ பேரத்தில், ராஜீவ் ‘கையூட்டு’ பெற்ற லஞ்ச ஊழல் வெளிச்சமானது. குத்ரோச்சி எனும் இத்தாலி, தரகர் மூலம் ராஜீவ்காந்திக்கு ‘கமிஷன்’ பணம் கைமாறியது. சுவீடன் நீதிமன்றத்தில் ஆதாரத்துடன் அம்பலமானது. போபோர்ஸ் ஊழல் விசாரணைக்கு நடவடிக்கை மேற்கொண்டதால், வி.பி.சிங், மீண்டும் பதவியைத் துறக்க வேண்டியதாயிற்று.
தொடர்ந்து ஊழல் ஒழிப்புக்கு ‘ஜன்மோட்சா’ இயக்கத்தைத் தொடங்கிய வி.பி.சிங், பின்னர் தேசிய முன்னணியை உருவாக்கி, தேர்தலில் போட்டியிட்டு, பிரதமராகி, இந்திய அரசியலின் போக்கை பார்ப்பன ஆதிக்கத்திலிருந்து திருப்பினார்.ஈழத்திலே - ராஜீவ் அனுப்பிய இந்திய ராணுவம், பல்லாயிரம் தமிழர்களைக் கொன்று குவித்ததைக் கண்டு ராஜீவ் காந்தி பூரித்து மகிழ்ந்தார். அந்த ராணுவத்தை மீண்டும் இந்தியாவுக்கு திருப்பி அழைத்த பெருமை, அப்போது பிரதமராக இருந்த வி.பி.சிங்குக்குத்தான் உண்டு.
விடுதலைப்புலிகள் இயக்கத்தை பயங்கரவாத அமைப்பாக நீங்கள் கருதவில்லையா என்று செய்தியாளர்கள் கேட்டபோது, எந்த ஒரு இயக்கத்துக்கும் முத்திரை குத்தக்கூடிய ரப்பர் ஸ்டாம்ப் எனது சட்டைப் பையில் இல்லை என்று பதிலடி தந்தார்.பம்பாயில், இந்து பார்ப்பன சக்திகள் இஸ்லாமியர்களுக்கு எதிராக நடத்திய கலவரத்தைக் கண்டித்து, தண்ணீர்கூட அருந்தாமல், அவர் உண்ணாவிரதத்தை சில நாட்கள் தொடர்ந்தபோதுதான் அவரது சிறுநீரகம் பாதிக்கப்பட்டது. அந்த பாதிப்புடன் 17 ஆண்டுகாலம் ஒவ்வொரு நாளும் அவர் போராடினார்.
மதவெறிக்கு எதிரான தளபதியாக, சமூக நீதியின் காவலராக வரலாற்றுப் புகழோடு இந்த மண்ணிலிருந்து 27.11.2008 அன்று விடைபெற்றுக் கொண்டுள்ளார்.நேர்மை - தூய்மை - கொள்கை எல்லாம் அரசியலில் அற்றுப் போய்விட்டதாக கூச்சல் போடும் பார்ப்பன தலைவர்களும், பார்ப்பன ஊடகங்களும், களங்கமில்லாத இந்த மாமனிதனை அங்கீகரித்ததா? இல்லை. இழிவுபடுத்தினார்கள். சேறுவாரி இரைத்தார்கள். இவர்களின் கோபமும், வெறுப்பும், அவரது மரணச் செய்தியில்கூட பிரதிபலிக்கவே செய்தன.
அந்த மாமனிதனின் மரணம், ஒற்றைக்காலச் செய்தியானது. அவரது இறுதி நிகழ்ச்சிகூட இந்த பார்ப்பன ஊடகங்களால் இருட்டடிப்புக்கு உள்ளாகிவிட்டது.வி.பி.சிங் என்ற வரலாற்று நாயகர், காலத்தை வென்று நிற்கும் மாமனிதர் என்பதற்கு பார்ப்பன ஏடுகளின் இந்த வெறுப்பும் கசப்புகளுமே சான்றாக நிற்கின்றன. நன்றியுள்ள ஒவ்வொரு ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் குடிமகனும், இந்த மனிதனின் நன்றி பாராட்டாத தொண்டுக்கு தலை வணங்குவான்.
சமூகநீதி சரித்திரத்தில் அழியாத அத்தியாயமாகிவிட்ட அந்த மனிதகுல மேதைக்கு பெரியார் திராவிடர் கழகம் தலைவணங்கி, வீர வணக்கத்தை செலுத்துகிறது.வி.பி.சிங் முடிவெய்தினார்; வி.பி.சிங் வாழ்க! வாழ்க!!